Worldசிவதாசன்

சீனாவின் கனவை உடைத்த கோவிட்-19 | பட்டி வீதி முன்னெடுப்பு (Belt Road Initiative) பிற்போடப்படுகிறது

அரசியல் அலசல்: சிவதாசன்

3.7 ட்றில்லியன் டாலர் செலவில், சீனா உலகம் முழுவதையும் தன் பொருளாதார பலத்தால் கட்டிப்போடலாம் என்று கண்ட கனவை அதன் குழந்தையான கோவிட்-19 அடியோடு கலைத்து விட்டதா என்ற சந்தேகம் இன்று சீனாவின் ஆட்சியாளருக்கே வரத் தொடங்கிவிட்டது.

நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில், சீனா ஆரம்பித்த, 2,600 பட்டி வீதி முன்னெடுப்பு (Belt and Road Initiative (BRI)) திட்டங்களைக் கோவிட்-19 மறுபரிசீலனைக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்தப் பேராவல் திட்டத்தின் பிரகாரம் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா கண்டங்களுக்கும் அப்பால், வர்த்தகத்தை விஸ்தரிக்க சீனா பல நாடுகளிலும் கட்டுமானத் திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார் போன்ற நாடுகளை உள்ளடக்கிய – ஒரு காலத்தில் சோழமண்டல வர்த்தக வலயமாகவிருந்த – ஆசியாவவையும், மொங்கோலியப் படையெடுப்பின் மூலம் பிறிதொரு காலத்தில் கதவுகளை நொருக்கிய ஐரோப்பாவையும், குதிரைகள் இல்லாது, வர்த்தகத்தால் தன் புதிய வலயத்துள் வளைத்துப்போட சீனா கண்ட பெருங்கனவைக் கோவிட்-19 கத்தியின்றி, யுத்தமின்றித் தகர்த்துவிட்டது.சீனாவின் வெளிவிவகார அமைச்சு, இன்று அதைப் பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறது. இத் திட்டம் பற்றிய அதன் மதிப்பீட்டின் மூலம், 40% மானவை பாதிக்கப்படவில்லை எனவும், 30-40 ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன்வென்றும், 20% பேராபத்தில் உள்ளனவென்றும் கண்டிருக்கிறது. பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளனவென்றும், எத்திட்டமும் முற்றாக நிறுத்தப்பட்டதாகத் தனக்குத் தெரியாதென்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

100 நாடுகளுக்கு மேல் ஒப்பந்தம்

தத்தம் நாடுகளில் ரயில்வேக்கள், துறைமுகங்கள் மற்றும் உட்கட்டுமானத் திட்டங்கள் என்று, நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள், 2,600 திட்டங்களுக்காக, சீனாவுடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள 55 நாடுகளில் 40 நாடுகள் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துவிட்டன. வறுமை ஒழிப்பு என்ற வார்த்தை பிரயோகத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் சீனமயமாக்கலின் ஆபத்து இந்த நாடுகளால் புரிந்துகொள்ளப்படவில்லை. இலங்கையுட்பட, ஊழல் பெருச்சாளிகளான பல நாடுகள் சீனாவின் வலையில் விழுந்துவிட்டன.

ஆபிரிக்கா

தென்னாபிரிக்கா ஒரு முதல் தர உதாரணம். அங்கு மண்டாரின் எனப்படும் சீன மொழி, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறது. அழிந்துபோகும் நிலையிலிருக்கும் ஆபிரிக்க மொழிகளைப் பாதுகாக்க எவ்வித முயற்சியையும் எடுக்காது தமது மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது உதவியல்ல, இன்னுமொரு காலனியாதிக்கம். இலங்கையிலும் மண்டாரின் இரண்டாவது மொழியாவதற்கு வெகு காலமில்லை.

மியன்மார்

றொஹிங்யாக்களின் ராக்கின் நாடு

மியன்மாரில் சமீப காலங்களில் வெடித்தெழும்பியிருக்கும் றொஹிங்யாப் பிரச்சினை சீனாவின் இந்த பட்டி வீதியோடு இணைக்கப்படவேண்டிய இன்னுமொரு முக்கியமான வரலாற்று நிகழ்வு.

இலங்கைத் தமிழர் பிரச்சினையோடு ஒத்துப் பார்ப்பதற்கு ஏற்றதொரு பிரச்சினை.

றொஹிங்யா செறிவாக வாழும் அரகான் பிரதேசம் மியன்மாரின் கடற்கரையோடு அமர்ந்திருக்கிறது. கி.மு. 3000 ஆண்டுகளாக ராக்கீன் என்ற இனம் வாழ்ந்துவரும் கலாச்சார, மொழி தனித்துவங்களைக் கொண்ட இத் துறைமுகப் பிரதேசம் நெடுங்காலமாக கடல் வாணிபத்துக்குப் பிரசித்தமாக இருந்துவருவது. இலங்கைத் தமிழரைப் போலவே ராக்கீன் (றொஹிங்யா) மக்களும் இந்த அரகான் பிரதேசத்தைத் தனிநாடாகப் பிரிதெடுக்கப் போராடி வருபவர்கள். பர்மா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து எழுந்த தீவிர தேரவாத பெளத்த இனவாதம் இவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தியதோடு இனவழிப்பையும் செய்துவந்தது.இந்த ராக்கின் மாநிலத்திலுள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்து பட்டி வீதித் திட்டத்தில் இணைப்பது சீனாவின் நோக்கம். அதற்காகவே மியன்மாரில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தது சீனா. மேற்குநாடுகளையும், மனித உரிமை அமைப்புகளையும் ஏமாற்றி முடிசூடிக்கொண்ட ஓங் சான் சூ சி யின் மூலம் இனவழிப்பை நிறைவேற்றி ராக்கீன் மாநிலத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த பட்டு வீதித் திட்டத்தை சீனா வெற்றிகரமாகப் பாவித்துள்ளது.

கோவிட்டின் சமன்பாடு

இந்த நிலையில் உலக சீனமயமாக்கலின் பெருங்கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது கோவிட்-19. பயணத் தடைகளாலும், பொருளாதாரப் பாதிப்பாலும் சீனாவின் பல நீண்டகாலத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன. வெறும் காட்சிக் காரணங்களுக்காகவும் (optics) ஆபிரிக்கர்களுக்கு சீனாவில் கல்வி வசதிகளைச் செய்துகொடுத்ததாகக் காட்டிய சீனாவில் கோவிட்-19 பரவலின்போது உண்மையான இனத்துவேஷம் கரைபுரண்டது. கோவிட் பல ஆபிரிக்க நாடுகளை விழிக்க வைத்திருக்கிறது. சீனாவின் பணத்தால் மட்டுமே இந்நாடுகளை மீண்டும் வாங்க முடியும். கோவிட் மீளொழுங்கு செய்துள்ள உலகத்தில் சீனாவின் பொருளாதாரம் மீண்டும் அதன் உச்சத்துக்குப் போக தசாப்தங்கள் பிடிக்கும்.

2018 இல் இலங்கை, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் சீன பட்டி வீதித் திட்டத்துக்குப் பலத்த எதிர்ப்புத் தோன்றியது. அதற்கு பூகோள அரசியல் நகர்வுகள் காரணமாக இருப்பினும், சீனாவின் திட்டங்கள் பெரும் பொருட்செலவைத் தருவனவாகவும், அவசியமற்றவையாகவும் இருந்த காரணத்தினாலும், ஆட்சியாளர்கள் அதிருப்திகளைக் காட்ட ஆரம்பித்தனர். இதற்கு சீனாவின் மறு எதிர் நடவடிக்கையே கோதாபயவின் இரண்டாம் வருகை. மலேசியாவிலும் இதே நிலைதான். அதையும் மீறி கோவிட் உலக ஒழுங்கை மாற்றிவிட்டது.

இப்போது சீனாவுடன் ஒப்பந்தம் செய்த பலநாடுகள் தமது பட்டி வீதி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துவிட்டன. ஆபிரிக்காவில் DR கொங்கோ, மொறீசியஸ் போன்ற சில நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அப்படியிருந்தும், அவை பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுவருகின்றன. ரயில்வேக்களும், துறைமுகங்களும், பெருந்தெருக்களும் மக்களின் பசிகளைப் போக்காது. மாறாக, கடன் சுமை, ஊழல் இறையாண்மை இழப்பு என்று பலவித தீமைகளைத்தான் கொண்டுவரும் என்ற உண்மையைப் பலநாடுகள் உணரத்தொடங்கிவிட்டன. இலங்கை இதற்கு ஒரு முன்னுதாரணம். கோவிட்-19 பரிசோதனைகளே செய்ய முடியாத ஒரு நாட்டில் கோவிட்டை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடு என்று ஒரு சீன அதிபர் இலங்கை அதிபருக்குத் தொலைபேசியின் மூலம் வாழ்த்துகிறார் என்றால் அதன் பின்னாலுள்ள கபட நோக்கம் நன்றாகவே புலப்படுகிறது.