News & AnalysisScience & TechnologyWorld

சீனாவின் ஏவுகணைப் பாகங்கள் இந்து சமுத்திரத்தில் வீழ்ந்ததற்கான ஆதாரங்களில்லை – சாடுகிறது நாசா

ஏப்ரல் மாதம் சீனா விண்ணுக்கு ஏவிய விண்கலத்தைத் தூக்கிச் சென்ற ஏவுகணை (ராக்கெட்) மண்ணுக்குத் திரும்பி விழும்போது இந்திய சமுத்திரத்தில், மாலைதீவுகளுக்கு அருகே வீழ்ந்ததாக சீனா கூறியதை நிரூபிக்க முடியாதுள்ளது என அமெரிக்க விண்வெளி நிர்வாகமான நாசா தெரிவித்துள்ளது.

விண்ணில் மனிதர் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச விண் நிலையத்தைப் போல் (International Space Station) தாமும் ஒன்றை அமைப்பதற்குச் சீனா முயன்று வருகிறது. இதன் பிரகாரம் இந் நிர்மாணத்தின் முதலாம் அங்கமாக இந் நிலையத்தின் முக்கிய அம்சமான ‘ரியான்ஹீ’ என்ற கூறை, ‘லோங் மார்ச் 5B’ (Long March 5B) என்ற ஏவுகணையில் வைத்து ஏப்ரல் பிற்பகுதியில் சீனா விண்ணுக்கு ஏவியிருந்தது. இந்த ஏவுகணையின் நிறை 18 தொன்களாகும்.

வழமையாக, booster rockets என அழைக்கப்படும், புவியீர்ப்பு விசைக்கு எதிராகத் தூக்கிச் செல்லும் ஏவுகணைகள், தம் கடமை முடிந்தவுடன் விண்கலங்களிலிருந்து விடுபட்டு மீண்டும் பூமியை நோக்கி விழுகின்றன. ஆனால் அவை எங்கு எப்போது விழவேண்டுமென்பதை நாசா போன்ற அமைப்புகள் முன்கூட்டியே தீர்மானித்து மனிதர் வாழும் இடங்களில் விழாது பார்த்துக்கொள்வது வழக்கம். இதை controlled re-entry என அழைப்பர். சீனாவின் விடயத்தில் இந்த ‘லோங் மார்ச் 5B’ பூமிக்குத் திரும்பும்போது மனிதருக்கு ஆபத்தை விளைவிக்காமல் அதைக் கட்டுப்படுத்த சீனா முயற்சிக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இந்த ஏவுகணை பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது அது உராய்வு விசையினால் தீப்பற்றி எரிந்துவிடும் அதனால் இறுதியில் பூமியை அடையும் துகள்கள் (எஞ்சியிருப்பின்) மிகச் சிறியனவாகவிருக்கும்;மதனால் மக்களுக்குப் பாதிப்பு இருக்காது; இரண்டாவது அப்படி எரிந்து முடியாவிட்டாலும் அது பெரும்பாலும் சமுத்திரத்திலேயே விழும் என்ற நம்பிக்கை. அதனால் தமது விண்கழிவுகளைக் கட்டுப்படுத்தி பூமியில் விழச்செய்ய சீனர்கள் முயல்வதில்லை.

சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் சீனா ஏவிய இன்னுமொரு விண்கலத்தைத் தாங்கிச் சென்ற ஏவுகணை மீள வரும்போது ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் மக்கள் வாழும் பகுதியில் வீழ்ந்தது. இப்போதும் போல, அந்த ஏவுகணையின் மீள் வருகையையும் சீனா கட்டுப்படுத்தவில்லை.

‘லோங்க் மார்ஷ் 5B’ விடயத்தில் அது முற்றாக எரிந்து முடியவில்லை எனவும் ஆனால் மாலதீவுக்கருகே இந்து சமுத்திரத்தில் அது விழுந்ததாகவும் எவருக்கும் ஆபத்து நிகழவில்லை எனவும் சீனா கூறுகிறது. அது எங்கே விழப்போகிறது என, சீனா குறிப்பிட்ட இடத்துக்கான குறியீடு (coordinates) தவறானது என நாசா கூறுகிறது. அதே வேளை விண்கழிவு வீழ்ந்ததற்கான காணொளியோ அல்லது சாட்சியங்களோ சீனாவினால் வழங்கப்படவுமில்லை.

அதே வேளை, ‘லோங்க் மார்ச் 5B’ இன் வருகையைத் தொடர்ந்து அவதானித்து வந்த நாசா, அது அரேபியக் கடலில் வீழ்வதற்கான சாத்தியங்களே இருந்தது எனக் கருதுகிறது. இதனால், இவ் விடயத்தில் சீனா சர்வதேச நியமங்களைப் பின்பற்றுவதில்லை என அது அது சீனாமீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இவ் விண்கழிவு இலங்கை மீதும் வீழவதற்கான சாத்தியங்கள் இருந்ததென்றும் அதிர்ஷ்டவசமாக அது நிகழவில்லை எனவும் இலங்கைப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.