AnalysisNews & AnalysisSri Lankaமாயமான்

சீனலங்கா | சீனிக் கள்ளரும் சீனி வியாதியும் ? வீரவன்ச புரட்சி வெற்றி பெறுமா?

ஒரு அலசல் | மாயமான்

ஊழல், விசாரணைக் குழு, அறிக்கை, மறுப்பறிக்கை இவை எல்லாவற்றையும் மறைக்க ‘தேசிய பாதுகாப்பின்’ பெயரில் சிறுபான்மையினர் கைது, வீரவன்ச வீட்டில் பார்ட்டி என்று அமர்க்களப்படும் சிரீலங்காவின் புதிய Breaking News – சீனி ஊழல்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் கழுத்தைச் சர்வதேசம் அளவுபார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் ஏன் சரத் வீரசேகரா பேர்க்கா மீதான தடையை அறிவிக்கிறார்?; ஐ.நா. வில் வாக்களைக்க முஸ்லிம் நாடுகளின் ஆதரவைத் தேடும் நேரத்தில் ஏன் இந்த அறிவிப்பு? என்று ஆய்வாளர் முடியைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தம்ம பூமியில் தர்க்கத்துக்கு இடமில்லை. ராஜபக்ச ஆட்சியை இன்னும் இரண்டு தவணைகளுக்கு இழுத்தடிக்க அவர்களுக்கு நிரந்தர பொது எதிரி தேவை. இந்தியாவின் தேவை அதிகமாக இருப்பதால் அதை இப்போதைக்கு எதிரியாக்க முடியாது. எனவே அவர்களுக்கு இப்போது சாத்தியமானது இரண்டு – உள்ளூரில் முஸ்லிம் பயங்கரவாதம் வெளியூரில் ஐ.நா.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறினாலும் அது அவர்களுக்குச் சாதகமானதே. ஐ.நா. என்ற பொது எதிரியை வைத்து நீண்ட காலத்துக்கு மாடுகளைச் சாய்க்க முடியும். இலங்கைக்குச் சாதகமாகத் தீர்மானம் நிறைவேறினாலும் வெற்றிக் களிப்பில் ஊர்வலங்களை வைத்து “எமது ஹீரோக்களைக் காப்பாற்றிவிட்டோம்” என இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வெற்றி அணிவகுப்பை நடத்தி மக்கள் பசியை உணராமல் வெறியை உணர வைத்துவிடலாம்.

அப்படியிருக்க வீரசேகராவின் இந்த வீரப் பிரதாபங்கள். கொஞ்சநாள் அவர் மாகாணசபையைக் கட்டிப்பிடித்து உதைத்துக்கொண்டிருந்தார். இந்தியாவின் எச்சரிக்கையால் அதை இப்போது நிறுத்திவிட்டு மீண்டும் முஸ்லிம்களில் தாவிவிட்டார். அவர்களை இப்போது உதைப்பதற்குக் காரணம் வேறு.

உள்ளூரில் ராஜபக்ச சாயம் வெகு வேகமாக வெளுத்து வருகிறது. கோவிட், பொருளாதாரம் காடழிப்பு, மண் கொள்ளை, ரூபாவின் பெறுமதி சரிவு, ஏற்றுமதி தளர்வு, உணவுத் தட்டுப்பாடு, விலையுயர்வு எனப் பல மக்களை அதிருப்தியடையச் செய்து வருகின்றன. அவர்களைத் திசை திருப்ப வேண்டுமானால் பொது எதிரிகள் தேவை. என்னத்தைச் சொன்னாலும் புலி மீதிருந்த சிங்கள மக்களின் கோபம் தணிந்துவிட்டது. இடைக்கிடை இராணுவம் சொருகும் குண்டுகள், பலிக்கவில்லை. எனவே புலிக்காய்ச்சல் இனிமேல் எடுபடாது. இப்போது அதன் கைவசம் இருப்பது ஐ.நா.வும் முஸ்லிம்களுமே.

இலங்கையில் 72% ஆதரவுடன் மக்களால் முடியேற்றி வைக்கப்பட்ட அரசுக்கு வயது ஆறு மாதங்கள். அதற்குள் மக்கள் தமது தவறுகளைத் (தற்காலிகமாக) உணர்ந்துவிட்டனர். பிக்குகள், இடதுசாரிகள் எல்லோருமே மாற்றுத் திட்டம், மாற்று அரசாங்கத்துக்கான திட்டமிடலில் இறங்கிவிட்டனர். வீரவன்ச, வாசுதேவ, கம்மன்பில, திச விதாரண என முந்நாள் இடதுசாரிகள் ஒன்றுபடுகிறார்கள். மகிந்த ராஜபக்சவின் போலி இடதுசாரி, சிங்கள பெளத்த முகம் அம்பலமாகிறது. துர்ப்பாக்கியமாக சஜித் போன்ற ஆளுமையற்ற தலைமையால் ராஜபக்சக்களை எதிர்கொள்ளும் பலமான எதிரணியை உருவாக்க முடியாது. உள்ளதுக்குள்ள வள்ளிசான, வாக்குவன்மையுள்ள தேசியவாதி வீரவன்சதான். அவர்பின்னால் திச விதாரண போன்ற நல்ல மனிதர்கள் நிற்கிறார்களென்றால் நிலைமை அந்தளவுக்கு மோசமாகப் போய்விட்டது என்றுதான் அர்த்தம். இந்த நிலையில் சீனி ஊழல் விவகாரம் என்ற பின் கழற்றிய கைகுண்டு மடிக்குள் வந்து விழுந்திருக்கிறது. அலோசியஸ் என்ற தமிழர் தமது வரிப்பணத்தைத் திருடிக்கொண்டு சிங்கப்பூருக்கு ஓடிவிட்டார் எனக் கூவிக் கூவி அரசியல் செய்த மகிந்த இப்போது அப்பணத்தைவிடப் பலமடங்கு பெரிய சீனி ஊழலில் சிக்கிவிட்டார். இதை வீரவன்ச கம்பனி எந்த நேரமும் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே ஸ்டியரிங்கை வீரசேகர கையிலெடுத்துவிட்டார். சீனி ஊழலில் ராஜபக்சவின் பங்கு என்ன?

சஜத் மவ்சூனும் ராஜபக்சக்களும்

நாட்டின் சுய உற்பத்தியை அதிகரித்து தனக்கு வாக்களித்த விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நந்தசேன, அதுதான் நமது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பல இறக்குமதிக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். உண்மையில் அது ஒரு நாடகம். அரசாங்கத்தின் கல்லாப்பெட்டியில் காசு இல்லை. அதன் திறப்பு நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்சவிடம்தான் இருக்கிறது. இறக்குமதிகளுக்கு அள்ளிக்கொடுக்கப் பணம் இல்லை. வெளிநாட்டு வருமானம் வற்றிக்கொண்டு போனது. எனவே ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.

இத் திட்டத்தின்கீழ், ஜூன் 2020 இல், தற்போதைய நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச இறக்குமதி செய்யப்படும் சீனி மீது ரூ.50 வரியை அறிவிக்கிறார். அக்டோபர் 13 இல் இதற்கான வர்த்தமான அறிவித்தல் வெளியாகும்போது அது திடீரென்று 25 சதமாகக் குறைக்கப்படுகிறது.

இதற்கு முன்னரே நந்தசேனவின் ஆத்மார்த்த நண்பரான சஜத் மொவ்சூனுக்கு சகல திட்டங்களும் தெரியும். பல இறக்குமதி வியாபாரங்களுக்குச் சொந்தக்காரரான அவர் 100,000 தொன்கள் சீனியைக் கப்பலில் ஏற்றிவிட்டிருந்தார். இலங்கை சுங்க விதிகளின்படி மாதமொன்றுக்கு 45,000 தொன்கள் சீனியையே இறக்குமதி செய்யலாம்.

சுங்க விதிகளையும் மீறி, சஜத் மவ்சூனின் 100,000 தொன் சீனியும் இலங்கை வந்து இறங்கியதன் பின்னர், அக்டோபர் 27 இல் சீனி மீதான சுங்க வரி ரூ. 40 என அறிவிக்கப்படுகிறது. சஜத்தின் சீனிக்கு வரி 25 சதம் மட்டுமே. இதனால் இலங்கை அரசாங்கத்தின் கல்லாப்பெட்டிக்கு வரவேண்டிய 16 பில்லியன் ரூபாய்கள் வராமலே போய்விட்டது. இதில் மோசடி என்னவென்றால், வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்து 1 மாதத்துக்குள் புதிய வரியை அறிவிக்க முடியாது என்பது சட்டம். ஆனால் மஹிந்த அச்சட்டத்தை மீறுகிறார். 25 சத வரி நடைமுறையில் இருந்த காலம் அக்டோபர் 27 முதல் நவம்பர் 13 வரை, வெறும் 18 நாட்கள் மட்டுமே. சஜத்தின் 100,000 தொன் சீனியுடன் கப்பல் ஏற்கெனவே புறப்பட்டிருந்ததால் இக் கால இடைவெளிக்குள் அது 25 சத வரியுடன், சீனியை இலங்கைக்குள் கொண்டுவந்துவிட்டது. முற்கூட்டிய தகவல்கள் தெரிந்திருந்தாலே தவிர, வேறு எந்தவொரு இறக்குமதி நிறுவனத்தினாலும் இந்த 18 நாட்களுள் சீனியை இறக்குமதி செய்திருக்கவே முடியாது.

இங்குதான் சீனி மாமாக்களின் மோசடி உச்சம் பெறுகிறது. அதாவது 25 சத வரியுடன் இறக்குமதி செய்யப்பட்ட சீனியினால் மக்கள் எந்தவித இலாபத்தையும் பெறவில்லை. 40 ரூ. வரியோடு பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அதே விலையில்தான் சஜத்தின் சீனியும் விற்கப்பட்டது. இதனால் 16 பில்லியன் ரூபாய்கள் அரசாங்கத்தின் கல்லாப்பெட்டிக்குப் பதிலாக சஜத்தின் பெட்டிக்குள் போனது. (பங்காளிகள் எப்படிப் பங்கு பிரித்தார்கள் என்னும் விடயம் enter button அழுத்தும் வரை கிடைக்கப்பெறவில்லை).

நிதியமைச்சுக்கு வரவிருந்த 16 பில்லியன் ரூபா வருமானவையை அது இழந்துபோய்விட்டது என மார்ச் 12, 2021 அன்று பாராளுமன்ற நிதிக்குழுத் தலைவர் அனுரா பிரியதர்சன யாப்பா உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறார். அதே நாளில், ‘சிங்களப் பாடசாலைகளில் பெளத்தம் கட்டாயபாடமாக்கப்படவேண்டும்’ என மஹிந்த ராஜபக்ச அறிவிக்கிறார். ஊழல் அவரில் ஒட்டிக்கொள்ள மறுக்கிறதா அல்லது சிங்கள பெளத்தம் அதைப் பார்க்க மறுக்கிறதா தெரியாது.

ஷங்கிரி-லா தொடர்பு

சஜத் மவ்சூனுக்கும் ராஜபக்சக்களுக்கும் அப்படியென்ன தொடர்பு?

100,000 தொன்கள் சீனியை இறக்குமதி செய்த வில்மா ட்றேடிங் என்ற நிறுவனத்தின் சொந்தக்காரரும் ஷங்கிரி-லா ஓட்டல் குழுமத்தின் சொந்தக்காரரும் ஒருவர், அவர்தான் சஜத் மவ்சூன். ஷங்கிரி-லா ஓட்டல் இருக்கும் நிலம் ஒருகாலத்தில் ராஜபக்சக்களுக்குரியது. சஜத் மவ்சூனுக்கு அந்நிலத்தை விற்றதற்கான கொமிசன் நாமல் ராஜபக்சவுக்குப் போனது என்பது இன்னுமொரு கொசுறு. இங்கு இருக்கும் 2100 ஆசனங்களுடைய மண்டபத்தில் தான் 2018 இல் கோதாபாயவுக்கு விருது வழங்கப்பட்டது. கோதாபயவின் அந்தரங்க ஆலோசனைக்குழுவான வியத்மகவின் கூட்டங்கள் இங்குதான் நடைபெறுகின்றன. சஜத் மவ்சூன் இதற்கான வசதிகளைச் செய்துகொடுக்கிறார்.

நல்லாட்சி அரசாங்கத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாகவும், அரசாங்கத்தின் வருமானத்தை ஊழல் மகாராஜாக்கள் அபகரித்துவிட்டதாகவும் மேடைகள் தோறும் பீற்றித் திரிந்த மத்திய வங்கி bond scam எனப்படும் ஊழல் ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டுவந்தது. அதில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் அலோசியஸிடமிருந்து 6.9 பில்லியன் ரூபாய்கள் மீளப்பெறுவதற்காக வழக்குப் போடப்பட்டிருக்கிறது. அப்பணம் மீண்டும் ஐ.தே.கட்சியில் முதலிடப்பட்டதாக இன்னுமொரு கொசிறும் உண்டு. இந்த மத்திய வங்கி ஊழலைவிட இரண்டு மடங்கிற்கு மேலானது சீனி ஊழல். ஆனால் அதை உரக்கக் கூவக்கூடிய எதிர்க்கட்சிகள் இலங்கையில் இல்லை.

ஊழலுக்குப் பெயர்போன ராஜபக்ச பரம்பரை

மஹிந்த ராஜபக்சவின் தற்போதைய பெறுமதி $18 பில்லியன். விடுதலைப் புலிகள் பதுக்கிவைத்திருந்ததாகக் கூறப்படும் பெருந்தொகையான தங்கமும் பணமும் அவரிடம் சிக்கியது எனவும் கூறுவார்கள். ஆனால் அதற்கு முன்னரே அவருக்கு சுனாமி பணத்தை அள்ளிக்கொண்டுவந்து கொட்டியிருந்தது. சுனாமிக்கென கிடைத்த பணத்தைக் கபளீகரம் செய்துவிட்டாரென மஹிந்த மீது பதியப்பட்டிருந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி சரத் என்.பண்டாரநாயக்கா கூறிய வார்த்தைகள் ” சிறைக்குள் அனுப்பப்படவேண்டிய ஒருவரை நான் ஜனாதிபதியாக்கிவிட்டேன், என்னை மன்னிக்கவேண்டும், என்னை மன்னிக்க வேண்டும், என்னை மன்னிக்க வேண்டும்” . இதைப் பின்னர் சரத் என்.சில்வா உறுதிப்படுத்தியிருந்தார்.

போர் முடிவுற்றதும் முகாம்களிலிருந்தவர்களும், பல முன்னாட் போராளிகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஒரு நடவடிக்கை தென்னிலங்கையில் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைப் படகுகளில் ஏற்றிவிடுவது. கடற்படையில் அனுசரணையுடன் ராஜபக்சக்களின் மேற்பார்வையில் இது நடைபெற்றது. படகுகளில் சென்றவர்களை இடைநடுவில் கடற்படை மறித்துத் திரும்பவும் அவர்களிடம் பணம் பறிக்கப்பட்டதெனவும் கதைகள் வந்தன. அப்படிச் சென்றவர்கள் கடலில் தாண்டு போனவர்கள் பலர். கொல்லப்பட்டார்களா என்பதும் தெரியாது. கோதாபயவைப் பொறுத்தவரையில் இலங்கையில் தமிழ் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டுமென்பதே குறி. கொல்லப்படாதவர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றிவிடுவதில் அவருக்கு நிறைய உடன்பாடுண்டு. இதில் பின்னர் அவுஸ்திரேலியா தன் பங்கிற்கு கூடப்பணத்தை அள்ளியெறிந்த பின்னர்தான் இக் கடற்பயணங்கள் குறைந்தன.

ஆச்சரியமென்னவென்றால் இதற்கு உடந்தையாகச் செயற்பட்டவர் கொழும்பிலிருந்த ஒரு தமிழ்ப் பெண் வழக்கறிஞர். தமிழ்த் தேசியத்துக்கு ஒரு வகையில் நெருக்கமானவர். அவர் பணம் பண்ணினாரோ அல்லது வெளியில் போக விரும்பியவர்களுக்கு உதவிகளைச் செய்தாரோ தெரியாது. அவருடைய வீட்டுக்கு ராஜபக்சக்கள் போய்வரும்போது வீதிகள் மூடப்பட்டன என அப்போது குசுகுசுக்கப்பட்டது. சரணடைந்து காணாமற் போன விடுதலைபுலிகள் பற்றிக் கேட்கும்போதெல்லாம் கோதாபய ஒரு விடயத்தைச் சொல்வார். “எல்லாரும் வேறு பெயர்களில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்” என்று.

பசில் ராஜபக்ச இவ்விடயத்தில் straight forward. மிஸ்டர் 10% எனப் பெயரெடுத்தவர். மூளை சாலி. பல தமிழர்களது தென்னந்தோட்டங்களுக்கு இப்போது இவர்தான் உரிமையாளர். நாமல் ராஜபக்சவிடம் தந்தையாரின் இனிக்கப்பேசும் பண்பு இருப்பதைபோலவே பணம் பண்ணும் தந்திரமும் இருக்கிறது.

ராஜபக்சக்கள் ஊழல் காரர்கள் என்பது உலகுக்கும் தெரியும். அதனால் மற்றவர்களு கைகள் சுத்தமென்பதில்லை. அவர்களும் சீனிக்கள்ளர்கள்தான். போத்தல்களில் கையைவிட்டுத் திருடும் சின்னக்கள்வர்கள், கைளைக் கழுவத் தெரியாத மொக்குக் கள்வர்கள்.

மகிந்த ராஜப்கசவுக்கு வயதாகிறது. சீனி வியாதி வேறு. எனவே பலிலுக்காக அவரது ஆசனத்தைத் தக்கவைக்கவேண்டும். It’s long overdue. அதற்குள் இன்னுமொரு கொசிறு. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னாலான திட்டமிடலில் பசிலுக்கும் பங்குண்டெனவும் அதனால்தான் ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை பற்றி அமத்தி வாசிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

இதையெல்லாம் அறிந்த உள்வீட்டுக்காரர்களான விமல் வீரவன்ச போன்றவர்கள் கிளர்ந்தெழுகிறார்கள். வீரசேகரா போன்றவர்களை விட வீரவன்ச பரவாயில்லை. அவர் நிற்குமிடத்தில் கொஞ்சம் இடதுசாரிகளும் நிற்கிறார்கள். எனவே அவர்களது புரட்சி விரைவில் வெடிக்கும், வெடிக்கவேண்டுமென எதிர்பார்க்கலாம்.

Stay tuned…