சீனத் தயாரிப்பு கண்காணிப்பு கமராக்களை அமெரிக்கா தடை செய்யலாம் – பாதுகாப்பு அபாயம் காரணம்

சில சீன நிறுவனங்களினால் தயாரிக்கப்படும் கண்காணிப்பு (surveillance cameras) கமராக்களை அமெரிக்கா தடை செய்வதற்கு யோசனை செய்து வருகிறது. சீநாவின் சிஞ்சியாங் மாகாண, உயிகுர் முஸ்லிம் மக்களைக் கண்காணிப்பதன் மூலம் சீன அரசு, அவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்குகிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

இக் கண்காணிப்பில் பாவிக்கப்படும் கமராக்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தயாரிக்கும் கமராக்களை அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யமுடியாதவாறு அமெரிக்க தகவற் தொடர்பாடல் நிர்வாகம் தடைசெய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஹுவாவே உள்ளிட்ட ஐந்து சீவ் நிறுவனங்கள் தயாரிக்கும் கண்காணிப்புக் கமராக்கள் தற்போது அமெரிக்க பாடசாலைகளால் பாவிக்கப்பட்டு வருகின்றன. இ நிறுவனங்கள் தயாரிக்கும் கமராக்களையே சீன அரசு தன் மக்களையும் கண்காணிக்கப் பயன்படுத்துகிறது. இவற்றினால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாமென அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஹாங்சூ ஹிக்விசன் டிஜிட்டல் ரெக்னோலோஜி கம்பனி (Hangzhou Hikvision Digital Technology Co), டஹுவா ரெக்னோலொஜி கம்பனி (Dahua Technology Co), ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் கமராக்கள் அமெரிக்க பாடசாலைகளிலும், அரசாங்க கட்டிடங்களிலும் பாவிக்கப்பட்டு வருகின்றன. இந் நிறுவனங்களையே அமெரிக்க தகவற் தொடர்பாடல் நிர்வாகம் முதலில் தடை செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, தகவற் தொழில்நுட்ப நிறுவனமான, ZTE Corp மற்றும் ஹர்ரேறா கொம்மியூநிகேசன்ஸ் கோர்ப். (Hytera Communications Corp) ஆகிய நிறுவனங்களையும் தடைசெய்ய வாய்ப்புண்டு எனவும் அறியப்படுகிறது.

கண்காணிப்பு கமராக்களினால் சேகரிக்கப்படும் தகவல்களை இணையவழியாக அனுப்பும்போது அத் தகவல்களை இடைமறித்துத் திருடுவதற்கான பொறிமுறைகள் ஏற்கெனவே அறியப்பட்டவை. நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் சில உபகரணங்கள் சேகரிக்கும் தகவல்ல்களை நேரடியாகவே உளவு பார்ப்பவர்களுக்கு அனுப்பிவைக்கும் வசதிகளையும் கொண்டுள்ளன.

அமெரிக்க தகவற் தொடர்பாடல் நிர்வாகம் (FCC) முடிவுகளை எடுக்கும் பட்சத்தில், மேற்படி நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கமரா உபகரணங்களைப் பாடசாலைகள், அரச அலுவலகங்களிலிருந்து அகற்றப்படும்படியான கட்டளைகள் பிறப்பிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஹுவாவே, ZTE போந்ற நிறுவனங்களின் உபகரணங்கள் ஏற்கெனவே இணையவழி உளவு விவகாரங்களில் பாவிக்கப்பட்டமை குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையோடு இருந்து வருகின்றன.