ColumnsOpinionSpiritualityசிவதாசன்

சிவ நடனம்

அசை சிவதாசன்

சிவதாசன்

சமீபத்தில் முகநூல் நண்பர் ஒருவர் ‘தான் நடராஜர் சிலையை விருந்தினர் அறையில் வைப்பேனே தவிர படிப்பறையில் அல்ல’ என்றொரு குறிப்பை எழுதியிருந்தார். தொழுகை அறை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது அவரைத் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியத்தைத் தராது. அவர் ஒரு கடவுள் எதிர்ப்புவாதி அல்லது மத எதிர்ப்புவாதி என்று வைத்துக் கொள்ளுங்கள். நண்பரைப் பொறுத்தவரையில் நடராஜர் சிலை ஒரு கலை வடிவம் மட்டுமே. அதில் பல தத்துவங்கள் பொதிந்திருக்கிறது என்பதை அவர் நம்புவதில்லை.

பொதுவாகவே நமது கீழைத்தேய அறிவுலகம் பற்றி நம்ம்மவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. பகுத்தறிவு வாதிகள் என்று தமக்குத் தாமே பெயர் சூட்டிக்கொண்டு நமது முன்னோர்கள் விட்டுப்போன பொக்கிஷங்களை எல்லாம் மூட நம்பிக்கை என்ற ஒரே கூடைக்குள் எறிந்து விட்டு பல தலைமுறைகளின் அடையாளங்களையும் அழித்துக் கொண்டதுதான் அவர்கள் செய்த தமிழ்ப் பணி.

பிரித்தானியர் இந்தியாவை விட்டுப் போகும்போது மகாபாரதத்தை எடுத்துச் சென்று மொழி பெயர்த்தார்களாம். ‘அதையும் நாங்கள் செய்யாவிட்டால் பல அறிய பொக்கிஷங்களை இழந்ததுபோல் இதையும் இழந்துவிடுவீர்கள்’ என்று அவர்கள் கூறியதாக சொல்வார்கள். ஜோன் மார்ஷல் அவர்கள் தான் சிந்துவெளி அகழ்வாய்வுக்ளைச் செய்தவர். முஹஞ்சதரோ ஹரப்பா அகழ்வுகளில் இருந்து சிவ வழிபாட்டின் தொன்மையினை இந்தியாவுக்கு எடுத்துக் கூறியவர். காந்திஜியைத் தேசத்தின் தந்தை என்று தலையில் வைத்துக் கொண்டாடினாலும் ‘சத்திய சோதனையைத்’ தாண்டி காந்தியை உலகிற்கு அவர்களால் கொண்டு செல்ல முடியவில்லை. அதைச் செய்ததும் இந்தியாவின் எதிரியான பிரித்தானியாவின் அற்றன்பரோ தான்.

மகாபாரதம், இராமாயணம் எல்லாம் வெறும் புனை கதைகள். அப்படி எதுவும் நடக்கவேயில்லை என்று சொல்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இன்றைய குஜராத்தை அண்மிய கடலின் அடியில் துவாரகா நகாரின் இடிபாடுகளை நவீன விஞ்ஞானத்தினால் நிரூபிக்க முடிந்திருக்கிறது. இராமர் பாலத்தின் தடயத்தை 2013 இறுதியில் செய்மதிப் படங்கள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாது இராமர் பாலத்தின் வயது அண்ணளவாக 1.70 மில்லியன் வருடங்கள் என்று கணித்திருக்கிறார்கள். இதில் வியப்பு என்னவென்றால் இராமாயணம் நடைபெற்றது திரேத யுகத்தில் என்றும் அதன் காலம் 1.75 மில்லியன் வருடங்கள் என்று வேதமும் கூறுகிறது.

சிவபெருமானைப் பற்றிய பல வியாக்கியானங்களையும் விளக்குவதற்கு விஞ்ஞானம் துணைக்கு வருகிறது. சிவனுடைய பிரபஞ்ச நடனம் சக்தியின் பல வடிவங்களின் வெளிப்பாடு எனக் கூறப்படுகிறது. சிவன் நித்திய இயக்கத்தில் இருக்கிறார் என்றும் அவரது இயக்கம் நிறுத்தப்படும்போது உலக அழிவு ஏற்படுகிறதென்றும் சொல்வார்கள்.

பிரிற்ஜோவ் கப்ரா என்பவர் தனது ‘ராவோ ஒப் பிசிக்ஸ்’ (The Tao of Physics) என்ற நூலில் சடப் பொருள் பற்றிய இந்துமத விளக்கத்தைப் புகழ்ந்து நவீன இயற்பியலின் அணுத் துகள்களின் புதிர்களை இந்துமதம் மூலமே விடுவிக்கலாம் என நிறுவுகிறார். வேதம், மத அடையாளங்கள், கலை மற்றும் நவீன இயற்பியல் என்பவற்றுக்கிடையேயான தொடுப்புகள் பற்றி அவர் தனது அவதானிப்புகளை முன்வைக்கிறார். ஒவ்வொரு அணுத் துகள்களின் இயக்கங்களும் ஒவ்வொரு நடனமேதான். அலையொன்றின் எழுதலும் தாழ்தலும் எப்படி ஒரு சுற்று இயக்கத்தைக் (cycle) காட்டுகின்றதோ அது போலவே படைப்பும் அழிப்பும் ஒரு நித்திய சுழற்சியாக நடைபெற்று வருகின்றது. நவீன இயற்பியல்வாதிகள் சிவனுடைய நடனத்தையே அணுத்துகளின் நடனமாகவும் பார்க்கின்றனர். சிவனுடைய அழிப்பினைக் குறிக்கும் நடனமாக உருத்திர தாண்டவமும் படைப்பினைக் குறிக்கும் நடனமாக ஆனந்தத் தாண்டவமும் இயற்பியலாளரால் பார்க்கப்படுகிறது.

இதை நிரூபிக்கும் வகையில் ஜெனிவாவில் அமைந்துள்ள இயற்பியல் ஆய்வு மையத்தில் 2004 இல் விஞ்ஞானிகள் இரண்டு மீற்றர் உயரமுள்ள நடராஜர் சிலை ஒன்றை நிறுவியுள்ளனர்.

நடராஜர் சிலையில் உள்ள அம்சங்கள் பற்றிய பல பின் கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒன்று அவரது தலைக் கிரீடத்துக்குக் குறுக்காக அலை வடிவத்தில் இருக்கும் கிரணங்கள் போன்ற அம்சம். இது பற்றி ஒரு நண்பரிடம் வினவியபோது அது சிவனின் பிரபஞ்ச சக்தி உலகமெங்கும் பரவுவதைக் காட்டுகிறது என்று தான் கருதுவதாகச் சொன்னார். இன்னுமொருவர தனது கட்டுரையொன்றில் அந்த அலைவடிவிலான பொருள் சிவனின் திரிசடைகள் என்றும் சிவனின் நடனம் ஓயாது நடைபெறுவதை ஒரு கணத்தில் புகைப்படம் பிடித்தால் எப்படி காற்றில் மிதக்கும் தலைமுடி தோற்றம் தருமோ அதை சிற்பி இந்த வடிவத்தில் தந்திருக்கிறார் என்றும் எழுதியிருந்தார். அது சரியான விளக்கமாகவே எனக்குப் படுகிறது.

அது போலவே சிவனின் வலது கையில் இருக்கும் உடுக்கு. பொதுவாக நாம் அறிந்த தோல் வாத்தியங்களை இசைப்பவர்கள் – அது மேற்கத்திய இசைக் கருவியான ‘ட்ரம்’ ஆக இருந்தாலென்ன கீழைத் தேசங்களில் இசைக்கப்படும் ‘டமருகம்’ ஆக இருந்தாலென்ன – இசைப்பை நிறுத்துவதற்கு முதல் குறுகிய இடைவேளையோடு கூடிய ஒலியை எழுப்பிய பின்னர் தான் நிறுத்திக் கொள்வார்கள். இதை ‘சாப்புக் கொடுப்பது’ என இசைக் கலைஞர்கள் கூறுவார்கள். அதுபோல நடராஜருடைய டமருகத்தில் நடனம் முடியும் காலத்தில் ஒரு சாப்புத் தொனி உண்டாகிறது என வேதம் சொல்கிறது. இது சிவனின் உடுக்கிலிருந்து நடனத்தை முடிக்கும்போது எழுப்பப்படும் பதினான்கு அடிகள். இச் சத்தங்கள் சாதாரண மக்களுக்கு வெறும் தொனிகளாகக் கேட்டாலும் அவை ஒவ்வொன்றும் ‘அட்சரக் கோவைகளாக’ ஒலித்தன எனவும் அவற்றைத்தான் ஆவணி அவிட்டத்தில் கோவில்களில் சொல்கிறார்கள் எனப்படுகிறது.

இப்படி நடராஜர் சிலையிலிருக்கும் ஒவ்வொரு அம்சங்களும் ஒவ்வொரு கதையைக் கூறுவன. ஆனால் மேலைத் தேயத்திலிருந்து ஒருவர் வந்து ‘ ஆஹா’ ‘ஓஹோ’ என்று அந்த அம்சங்களைச் சொல்லி புகழ்கின்றபோதுதான் நாமும் கூத்தர்களாக மாறுவோம்.

அறிவியலில் அதிர்வெண் என்றொரு பதமுண்டு. ஒரு பொருள் திட்டவட்டமாக ஒற்றை வடிவத்தைக் கொண்டிருக்காது பற்பல நிழற் சாயல்களையும் கொண்டிருக்குமானால் அப் பொருள் அதிர்ந்து கொண்டிருக்கிறது அல்லது நித்திய இயக்கத்தில் இருக்கிறது என அறிவியல் சொல்கிறது. ஆனால் எங்கள் பார்வைப் புலனின் சாளரம் ஒரு சாயலை மட்டுமே உட்புக அனுமதிக்குமானால் அது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு இசைவாக்கப்பட்டிருக்கிறது எனச் சொல்லலாம். ஒவ்வொரு உயிருள்ள பொருளும் தமது தேவைகளுக்கேற்ப புலன்களைத் தீட்டி வைத்துள்ளன. இரண்டு வெவ்வேறு பொருட்களின் அதிர்வுகள் ஒத்திசையும் பட்சத்தில் அச் செயற்பாட்டின் பலம் இரட்டிப்பாகிறது (இச் செயற்பாட்டின் ஒரு உதாரணம் பட்டம் விடும்போது ‘விண் கூவுதல்’).

ஒளிக் கற்றையில் எழு நிறங்கள் இருப்பதாகப் படித்திருக்கிறோம். காரணம் எங்கள் பார்வைப் புலன் அந்த ஏழு நிறங்களை மட்டுமே பகுத்தறிவதற்கு இசைவாக்கம் பெற்றிருக்கிறது. அறிவியற் கருவிகளின் கண்டுபிடிப்புகளின் பின்னர் இந்த ஒளிக் கரையின் எல்லை நிறங்கள் என்று நாமறிந்து வைத்திருக்கும் ஊதா – சிவப்பு நிறங்களையும் தாண்டி புற ஊதா, உட்சிவப்பு என்று பல நிறங்கள் எமக்குத் தெரிய வருகின்றன. செவிப் புலன்களுக்கும் இதே நிலைமைதான்.

எந்தவித நிறங்களாயிருந்தாலென்ன, எந்தவித ஒலிகளாயிருந்தாலென்ன அவை ஒவ்வொன்றும் பொருளொன்றின் மாறுபட்ட அதிர்வுகளின் வெளிப்பாடுகள்தான் என்கிறது அறிவியல். இங்கு நான் சொன்ன ‘பொருள்’ என்பது கூட நித்திய இயக்கத்தில் இருக்கும் அணுவின் துகள் தான். இந்த நித்திய இயக்கம் தான் பொருளைச் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த இயக்கம் நிறுத்தப்படுமேயாகில் பொருளுமில்லை, உலகமுமில்லை.

**ஜூன் 18 2004 அன்று ஜெனீவாவில் உள்ள அணுத்துகள் ஆராய்சி மையத்தில் சிவதாண்டவ சிலை நிறுவப்பட்டது.

Jan 11, 2014