Sri LankaVolunteer Orgs.

சிவன் அருள் இல்லம் | ‘சுனாமிக் குழந்தைகளின்’ வெற்றிக் கதைகள்


ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்கிலத்தில் எழுதிய இக் கட்டுரை அவரின் அனுமதி பெற்று ‘மறுமொழி’ இணைய சஞ்சிகையில் தமிழில் பிரசுரமாகிறது. மொழி மாற்றத்தில், மொழி பிசகினாலும் கருத்துப் பிசகு நேராமல் இருக்கவேண்டுமென முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது – ஆசிரியர்

“தர்மம் வீட்டில் ஆரம்பிக்கிறது”. ஆழிபேரலையால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பரோபகார இல்லத்தில் ஆரம்பித்த ‘சிவன் அருள் இல்லம்’ இன்று வட, கிழக்கு, மலையகம் வியாபித்து நிற்கும் ஒரு வெற்றிக் கதை.

சிவன் அருள் இல்லத்தின் கதை

2004 மார்கழி ஆழிப்பேரலை அனாதைகளாக்கிய குழந்தைகளுக்கு ஒரு கூரை வேண்டுமென ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘சிவன் அருள் இல்லம்’. அன்பு உள்ளங்களால் தானம் செய்யப்பட்ட நிதியுடன் 2004 இல் ஆரம்பிக்கப்பட்ட இத் தர்ம ஸ்தாபனம், இன்று வட மாகாணம் முழுவதும் கிளைகளைப் பரப்பி நிற்கும் ஒரு வருமானமீட்டும் வர்த்தக ஸ்தாபனம். வாலிப பராயத்தை அடைந்த இச் சுனாமிக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இத் தொழில்முயற்சி இப்போது வட- கிழக்கிலுள்ள போரினாற் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை அளித்து வருவதோடு அதன் உற்பத்திகள் இப்போது ஐரோப்பா, அவுஸ்திரேலியா எனக் கண்டங்கள் கடந்து பாவனைக்குள்ளாகின்றன. இது தான் சிவன் அருள் இல்லத்தின் கதை.

சுரேனின் கதை: சிவன் அருள் இல்லத்தின் பிறப்பு

சுரேன் சொர்ணலிங்கம், லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட, உலகப் பிரசித்திபெற்ற ‘நைக்கி’ (Nike) பாதணி வியாபார நிறுவனத்தின் நிர்வாக முகவர். டிசம்பர் 2004 குளிர்கால விடுமுறைக்காகத் தாயகம் சென்றார். பெந்தோட்ட கடற்கரையில் நணபர்களுடன் உல்லாசமாக விடுமுறையைக் கழிக்கச் சென்றவருக்கு கடவுள் வேறுவிதமான திட்டமொன்றை வைத்திருந்தார். உல்லாசக் கடற்கரை உலாவை ஒரு நாள் பிந்திப் போட்டுவிட்டு கொழும்பு நகரிலுள்ள அவரது சட்டத்தரணி நண்பர், மோஹன் பாலேந்திராவின் அழைப்பையேற்று அவரது வீட்டில் நத்தார் விடுமுறையைக் கழிப்பதற்கு உடன்பட்டார்.

அடுத்து கொழும்பில் அவர் கேள்விப்பட்டது ஆழிப் பேரலையின் அழிவுகளை. தொலைக் காட்சியில் அப் பேரனர்த்தத்தைப் பார்த்த இருவரும், ஏற்கெனவே பெந்தோட்டைக்குச் சென்றுவிட்டிருந்த அவர்களது நண்பர்களையும், உறவினர்களையும் பற்றி அறியப் பகீரதப் பிரயத்தனம் எடுத்தார்கள். அவர்கள் எல்லோருமே பாதுகாப்பாக இருந்தார்கள். படகுகளின்மீது இருந்த அவர்களைப் பேரலை தீண்டவில்லை. அதன் குறி கரையின் மீது தான் இருந்தது. இறப்புக்களும் அழிவுகளும் கரைகளில் மட்டுமே.

கிழக்கு மாகாணத்தில் அனர்த்தம் கோரத்தாண்டவமாடியிருந்ததை அறிந்த சுரேனும் மோஹனும் தங்கள் சொந்தப்பணத்தில் புறக்கோட்டைக் கடைகளை வாரி எடுத்தார்கள். பாரவண்டி ஒன்றை வைத்திருந்த அவர்களது நண்பர் ஒருவரின் உதவியுடன் அவசர உதவிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு அனர்த்தம் மோசமாக நடைபெற்ற இடங்களுக்கு விரைந்தார்கள்.

முல்லைத்தீவு முதல் மட்டக்களப்பு வரை, அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்கள் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. இப் பிரதேச மக்கள் தொண்டு நிறுவனங்களின் கைகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். சுரேனின் தொழிலனுபவமே வழங்கல் துறை தான். எனவே நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்று வழங்குவது அவருக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. தனியாரிடமிருந்து தான தருமங்களைப் பெற்று, ஒருங்கிணைத்து நிவாரணப் பொறிமுறை ஒன்றை நிர்மாணித்துவிட்டார்.



சுரேனும் மோஹனும், அனர்த்தப் பிரதேசங்களுக்கு விநியோகம் செய்யத் தயங்காத, இயலுமான பாரவண்டிகளை சேவைக்கு அமர்த்தினார்கள். பொதிகளை ஏற்றிக்கொண்டு பாரவண்டிகள் அனர்த்த பிரதேசங்களுக்கு விரைந்தன. குழந்தைகளுக்குத் தேவையான பால்மா, தண்ணீர், மருந்துகள் என முதல் வண்டிகளில் அனுப்பப்பட்டன. கம்பளிகள், தாழ்ப்பாள்கள், உறைவிட அமைப்பிற்கான பொருட்கள் அடுத்தடுத்த வண்டிகளில் பயணித்தன.

சுரேனின் அனர்த்த நிர்வாகத்தில் இப்போது தொண்டர்களும் இணைந்துகொண்டனர். சிலர் உள்ளூர்க்காரர். சிலர் விடுமுறையைக் கழிக்க வந்த வெளிநாட்டார். நீண்ட பெரிய பட்டியல்களுடன் கொழும்பிலுள்ள கடைத் தெருக்களில் இவர்கள் அலைந்தார்கள். மோஹனின் நண்பியான குலா விக்னராஜா பிரித்தானிய தொழில்நுட்ப நிறுவனமொன்றின் நிதி முகாமையாளர். விடுமுறைக்காக கொழும்பு வந்தவருக்கு வேறு கடமை காத்திருந்தது. சுரேன், மோஹனின் தொண்டுநிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை விமான நிலையத்தில் தாமதிக்காமல் வழங்கல் நிலயங்களை அடையச் செய்வது அவரது பொறுப்பு. சுங்க அதிகாரிகளை இலாவகமாகவும், நளினமாகவும் கையாளும் திறமையை பிரித்தானியா அவருக்குக் கற்றுக்கொடுத்திருந்தது. அத்தியாவசிய பொருட்கள் தாமதமின்றி நகர்ந்தன.

தொண்டர்களுக்குப் பஞ்சமில்லை. உலகம் முழுவதிலுமிருந்து தொண்டர்கள் குவிந்தார்கள். சிங்களம், தமிழ், முஸ்லிம், பேர்கர் என இன மத பேதமின்றி அவர்கள் இணைந்தார்கள். மனிதனால் உருவான சிவில் யுத்தத்தின் மத்தியில் கடவுளால் உருவாக்கப்பட்ட இயற்கையின் யுத்தத்தால் இன்னலுறும் எளிய மக்களுக்குக் கரங்கொடுக்க எளிய மக்களே முன்வந்தார்கள். ஆபத்தான பாதகளில் உயிர்களைத் துச்சமென மதித்து பாரவண்டிகளில் பொதிகளைச் சுமந்தவர்கள் பெரும்பாலும் சிங்களவர்கள். ஆரம்பத்தில் சந்தேகத்துடன் பார்த்த அரசாங்கம் பின்னர் இப் பாரவண்டிகளுக்கு தகுந்த அனுமதிப் பத்திரங்களைக் கொடுத்து வழித்தடங்கல்களின்றி வழ்ங்கல்களை இலகுவாக்கியது.

ஏப்ரல் 2005 இல் சுரேன் லண்டனுக்குத் திரும்பினார். அவரது சகோதரி மஞ்சுவும், அவரது கணவர் ஜயேந்திரன் (ஜயா) நமசிவாயமும் அனர்த்த பிரதேசங்களுக்கு வந்தார்கள். மன்னார் திருக்கேதீஸ்வரம் கோவிலிடமிருந்து ஒரு காணியைப் பெற்று அதில் ஆழிப்பேரலையால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கென ஒரு இல்லம் அமைத்தார்கள்.

ஜயாவின் கதை: சிவன் அருள் இல்லத்தின் வளர்ச்சி

சிவன் அருள் இல்லம், மட்டக்களப்பிலிருந்து கொண்டுவரப்பட்ட 35 குழந்தைகளுடன் ஆரம்பமாகியது. அவர்களில் சிலர் அனாதைகள்; சிலருக்கு ஒரு பெற்றோர் இருந்தார்கள். சிலருக்கு தாத்தா, பாட்டியென இருந்தாலும் அவர்களின் மோசமான ஏழ்மை காரணமாக இக் குழந்தைகளைப் பராமரிக்க முடியாத நிலைமை. குழந்தை ஒருவரைப் பரமாரிக்க அதன் குடும்பத்தினர் வலுப்பெறும்போது அக்குழந்தை வீட்டுக்குத் திருப்பியனுப்பப்பட்டது. ஏனையவர்கள் ‘இல்லத்தில்’ வைத்துப் பராமரிக்கப்பட்டார்கள்.

குழந்தைகள் கோவிலின் மடத்தில் தங்கினார்கள். அங்கு அவர்களுக்கு உணவும், உறங்க இடமும் கொடுக்கப்பட்டது. மூன்று வேலையாட்கள் அவர்கள் நலன்களைக் கவனித்தார்கள். உள்ளூர் அரசாங்க பாடசாலையொன்றில் அவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டது. அப்போது அது மூன்று உலோகக் கூரைத் தகடுகளால் மறைக்கப்பட்ட ஒரு கொட்டிலாக இருந்தது. ஏற்கெனவே, 6 முதல் 15 வயது வரையிலான 40 குழந்தைகளுடனும், இரண்டு ஆசிரியர்களுடனும் அப்பள்ளி இடப் பெருக்கத்துக்காகத் திண்டாடிக்கொண்டிருந்தது. திடீரென அங்கு 35 பிள்ளைகள் கொண்டுவந்து திணிக்கப்பட்டபோது அதன் இடத் தேவை இரண்டு மடங்காகியது. சிவன் அருள் இல்லம், ரோட்டரிக் கழகம், லண்டன் கிங்ஸ் கொலிஜ் மருத்துவக் கல்லூரி ஆகிய நிறுவனங்களினதும், தனியாரினதும் தான தருமங்களுடன், மூன்று அறைகளும், அடிப்படை உபகரணங்களுடனுமான கட்டிடம் எழுப்பப்பட்டது. ஒரு விஞ்ஞான கூடம், இசைக் கூடம், கணனிக் கூடம் என அப்பாடசாலை புதுமை பெற்றது.



முதலாவது குழுவான 35 குழந்தைகளின் வாழ்வு உறுதி பெற்றதும், ஜயாவும் மஞ்சுவும் லண்டனுக்குத் திரும்பினர். லண்டனில், ஜயா மருத்துவராகவும், மஞ்சு ஆசிரியராகவும் கடமை புரிந்தனர். அடுத்த 3 வருடங்களுக்கு, 2007 வரை ஜயா, மஞ்சு, சுரேன் ஆகியோர் நிதி திரட்டுதலில் இறங்கினர். 2006 இல் சிவன் அருள் இல்லத்துக்கு அருகில் ஊஞ்சல்களுடனும், சறுக்கு வசதிகளுடனுமான குழந்தைகளுக்கான நவீன பூங்கா ஒன்றை அமைத்தனர். 2007 இல் 100 பிள்ளைகள் தங்கக்கூடிய ஹொஸ்டெல் ஒன்றை நிர்மாணித்தனர். புதிய கட்டிடத்தில் பெண் பிள்ளைகளைத் தங்க வைத்து, ஆண்களைத் தொடர்ந்தும் கோவில் மடத்திலேயே வைத்துப் பராமரித்தனர்.

2007 ஆம் ஆண்டளவில் மொத்தம் 70 குழந்தைகள் இல்லத்தில் தங்கியிந்தனர். ஆகக் குறைந்த வயதுடையது 2 மாதக் குழந்தை. சிவன் அருள் இல்லம் இப்போது அரசாங்கத்திந் சமூக சேவைகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகியது. இதனால், அரசாங்கத்தின் குழந்தைகள் பாதுகாப்பு திணைக்களத்தால் அனுப்பப்படும் குழந்தைகளையும் அது பராமரிக்கவேண்டி ஏற்பட்டது.

2009 இல் போர் முடிவுற்றதும், உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான குழந்தைகள் இங்கு பராமரிப்புக்காக அனுப்பப்பட்டனர். இப்போது குழந்தைகளின் தொகை 150 ஐ எட்டியது. உலகளாவிய ரீதியில் சேகரித்த நிதியுதவியுடன், 100 படுக்கைகளுடனான ஆண்களுக்கான ஹொஸ்டல் ஒன்று கட்டப்பட்டது. 2010 இல் இல்லம் 200 குழந்தைகளுக்குப் புகலிடமாகியது.

போருக்குப் பின்னான காலங்களில், முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட அகதிகளின் வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளையும் செய்தது. ஏறத்தாள, 5,000 குடும்பங்கள், கடைகள், கோழி வளர்ப்பு, சிறுதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க இல்லம் உதவி செய்தது. ஆனால் இவற்றில் நூறில் ஒன்றே வெற்றி பெற்றது. இத் தோல்வியைப் பாடமாகக் கொண்டு, இல்லம் தனது உத்தியை மாற்றிக்கொண்டது. ஒரு தொழிற்சாலையை அது ஆரம்பித்து வறிய குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்தது. இல்லத்தின் பராபரிப்பில் வளர்ந்த குழந்தைகளும் வாலிப பராயத்தை எட்டியிருந்தார்கள். இவ் வாலிபர்களுக்கு வேலைகளைப் பெற்றுக்கொடுப்பதும் சிரமமாகவிருந்தது. அனாதைகளும், திக்கற்றவர்களும் சமூகத்தால் இழிவாகப் பார்க்கப்பட்டார்கள். முதலாளிகள் இவர்களுக்கு வேலைகொடுக்கப் பின்நின்றார்கள். இதனால் இவர்களுக்கு வேலை வாய்ப்புக்களைக் கொடுப்பதற்காக இல்லம் தொழில் முயற்சிகளில் இறங்கியது.

இல்லம் இருந்த இடத்தில் ஒரு சிறிய வெதுப்பகம் (bakery) ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. நிலமொன்றைக் கொள்முதல் செய்து அதில் தென்னை மரங்கள் நடப்பட்டன. பால் மாடுகள் வளர்க்கப்பட்டு பாலும் வெண்ணையும் தயாரிக்கப்பட்டன.



வெற்றியின் முதற் பாய்ச்சல்

2012 இல் இல்லத்தின் முயற்சிகளுக்கான முதலாவது பாய்ச்சல் நிகழ்ந்தது. வாசனைத் திரவியங்களை (spices) உற்பதி செய்வதற்கான தொழிற்சாலையொன்றை இல்லம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இந் நடவடிக்கையைப் பாதுகாப்புப் படைகள் சந்தேகத்துடன் நோக்கினார்கள். தொழிற்சாலைக்கு அவர்கள் அடிக்கடி வந்து பார்த்துப் போனார்கள். சில காலத்துக்குப் பிறகு அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் ஒரு உணவுத் தொழிற்சாலை என்பதை அவர்கள் அறிந்து திருப்தியடைந்தார்கள்.

210 முதல் 2014 வரை தொழிற்சாலை நட்டத்தையே கண்டது. ஆரம்ப முதலீடு இயந்திரங்களின் கொள்வனவோடு வற்றிப் போனது. 2014 இல் ‘அமெரிக்க உதவி’ (USAID), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization (ILO))

ஆகிய அமைபுக்களுக்கு அனுப்பிய விண்ணப்பங்களின் மூலம் தலா ரூ20 மில்லியன் உதவிப்பணம் கிடைத்தது. இப் பணத்தின் உதவியுடன், இல்லம் புதிய கட்டிடங்களை அமைத்து புதிய இயந்திரங்களையும் வாங்க முடிந்தது. மேலும் அமெரிக்க உதவியுடனும், லண்டனிலுள்ள தனியார் ஒருவரின் 50,000 பவுண்டுகள் கொடையுடனும், தொழிற்சாலைக்கு அருகில் ஒரு ஹொஸ்டெல் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டது. இரண்டரை ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை வியாபித்தது. இந்த ஹொஸ்டலில் பெண் தொழிலாளர்கள் வாரம் முழுவதும் தங்கிப் பணிபுரியலாம். வார இறுதி நாட்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள்.

அரிசி மாவு, மிளகாய்த் தூள் போன்ற பண்டங்கள் பிரித்தானியாவிலும், அவுஸ்திரேலியாவிலும் மிக விருப்பத்துடன் வாங்கப்படுகின்றன. இச் சிறிய வெற்றியுடன் ஆரம்பித்த இல்லத்தின் முய்றசி இப்போது கிளீநொச்சி நகரத்தில் இயங்கும் பெரியதொரு தொழிற்சாலையில் நிற்கிறது. இங்கு பணி புரிபவர்களில் பெரும்பாலோர் உடலியக்கம் குறைந்தவர்கள், திக்கற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தேவையானபோது, மூத்த நிர்வாக ஊழியர்களும், முகாமைத்துவ ஊழியர்களும் அவர்களது தொழிற் திறமைகளுக்கேற்ப தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்படியானவர்களைக் கண்டறிவது சிரமமான காரியமல்ல. போரினால் இடம்பெயர்க்கப்பட்ட பலர் தமது திறமைகளுக்கு மீண்டும் செயல் கொடுக்க ஆர்வத்தோடு முன்வருகிறார்கள் என்கிறார் சுரேன்.

தற்போது திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு அருகே இல்லம் ஒரு சைவச் சாப்பாட்டு உணவகமொன்றை ஆரம்பித்திருக்கிறது. முல்லைத்தீவிற்கருகே, புதுக்குடியிருப்பில் இரண்டாவது வெதுப்பகம் ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறது. பால் பண்ணை, கோழி வளர்ப்பு, மூலிகை வளர்ப்பு என வேறு பல தொழில் முயற்சிகளையும் ஆரம்பித்திருக்கிறது,



ஆரம்பத்தில் எமது பராமரிப்பில் இருந்த குழந்தைகளில் 16 பேர் தற்போது பல்கலைக் கழகங்களில் கல்வி பெறுகிறார்கள். 14 பேர் எங்கள் தொழிற்சாலைகள், வெதுப்பகங்கள், உணவகம், பாற் பண்ணை, ஒருங்கிணைந்த பண்ணை ஆகியவற்றில் தொழில் புரிகிறார்கள். மேலும் 100 குழந்தைகள் வெற்றி வரலாறுகளைப் படைப்பதற்காக எங்கள் இல்லத்தில் வளர்ந்து வருகிறார்கள். இவர்கள் விளையாட்டு, இசை, கலை, நடனம் ஆகியவற்றில் பங்கேற்று மாவட்ட, தேசிய ரீதியில் விருதுகளையும் பெற்றிருக்கிறார்கள் என்கிறார் ஜயா.

கிழக்கு மாகாணத்திலும், மலையகத்திலும், தகவற் தொழில்நுட்பம் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தொழிற் கல்விகளை இலவசமாகக் கற்பிக்கும் வசதிகளையும் செய்து வருகிறோம். வேறு பல திட்டங்களும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வருமென ஜயா கூறுகிறார்.

சிவன் அருள் இல்லத்தில் ஜயாவைத் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்: sivanarulillamuk@gmail.com