Health

சில புரத உணவுகள் மன அழுத்தத்துக்குக் காரணம் – ஆய்வு

அகத்தியன்

சில வகையான புரதச்சத்தைக் கொண்ட உணவு வகைகளை உண்பவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம் என புதிய ஆய்வொன்று கூறுகிறது.

உடலின் கல உருவாக்கத்திலும் சீரிய செயற்பாட்டிலும் புரதம் மிக முக்கிய பங்காற்றுகிறது. இவற்றின் அடிப்படைக்கூறான அமினோ அமிலங்கள் கலங்களின் கட்டமைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றன. இப்படி ஒரு அமினோ அமைலமான ‘புறோலைன்’ (proline) செறிவாக இருக்கும் சிலவகை புரத உணவுகளை உண்பவர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. மனிதர்களில் மட்டுமல்ல எலி, ஈ போன்றவற்றிலும் இப்பிசகுகளை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்.

ஒருவர் புரதம் செறிந்துள்ள உணவை உண்ணும்போது அவரது சமீபாட்டுத் தொகுதி புரதத்தை உடைத்து அமினோ அமிலங்களாக மாற்றுகிறது. இந்த அமினோ அமிலங்களை செங்கற்களுக்கு ஈடாக எடுத்துக்கொள்ளலாம். அவற்றை வைத்துக்கொண்டுதான் உடல் என்ற வீடு கட்டப்படுகிறது. உடலின் அத்தனை உறுப்புகளின் பகுதிகளும் இந்த அமினோ அமிலங்களாலே வெவ்வேறு தொழில்களைச் செய்யும்பொருட்டு வடிவமைக்கப்படுகின்றன. இப்படியாக உடலில் 20 வித்தியாசமான அமினோ அமிலங்கள் உள்ளன. அவற்றில் 9 மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இவை உடலினால் உருவாக்கப்பட முடியாதனவாகையால் உணவு மூலமே உள்வாங்கப்படுகின்றன.

இப்படியான ஒரு அமினோ அமிலமே புறோலைன். இதற்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பிருக்கிறதென சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. இது முக்கியமற்ற 11 அமினோ அமிலங்களில் ஒன்று. புல்லூட்டி வளர்க்கப்படும் மாடுகளின் இறைச்சி, வளர்ப்புக் கோழிகளின் இறைச்சி, ஜெலட்டின், எலும்புக் குழம்பு, ஈரல் போன்ற உணவுகள், முட்டை மஞ்சட் கரு, சிலவகை மீன்கள் ஆகியவற்றில் இவ்வகையான புரதம் உண்டு.

ஜிறோனா பயோ மெடிக்கல் றிசேர்ச் இன்ஸ்டிடியூட் மற்றும் ஸ்பெயினிலுள்ள பொம்பியோ ஃபப்றா பல்கலைக்கழகம் ஆகியன இணந்து நடத்திய இந்த ஆய்வில் ‘புறோலைன்’ செறிவுள்ள புரத உணவுக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பிருக்கிறது எனத் தெரியவந்துள்ளது. இது பற்றிய தகவல்கள்  Cell Metabolism என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளிவந்திருக்கிறது.

இதைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகள் முதலில் சில தொண்டர்களைப் பிடித்து அவர்கள் அருந்தும் உணவில் எவ்வகையான அமினோ அமிலங்கள், என்ன செறிவில் இருக்கின்றன எனக் கணித்தார்கள். பின்னர் தொண்டர்களிடம் அவர்களது மன நிலைகள் பற்றிய விபரங்கள் கேட்டறியப்பட்டன. இவர்களில் அதிகம் மன அழுத்தத்துக்கு உள்ளாகியவர்களது உணவில் ‘புறோலைன்’ என்ற அமினோ அமிலமே காணப்பட்டது என இவ்வாய்வின் தலைவராகிய டாக்டர் ஃபெர்ணாண்டேஸ்-றெயால் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இதில் இன்னுமொரு சிக்கலுமிருக்கிறது. ‘புறோலைன்’ அமினோ அமிலங்களைக்கொண்ட புரத உணவுகளை உண்பவர்கள் அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுவதென்றில்லை. இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது.

குடல் நுண்ணுயிரிகள்

நமது உணவின் சமிபாட்டை இலகுவாக்குவதில் எமக்குத் துணையாக பல பில்லியன்கள் பக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் பணிபுரிகின்றன. பெரும்பாலும் எமது குடல் போன்ற சமிபாட்டுறுப்புகளில் வாழும் இந் நுண்ணுயிர்கள் (gut microbes) செலுலோஸ் (புல்) போன்ற கடினமான தோல்களைக் கொண்ட உணவுகளை எமக்காக உடைத்துத் தருகின்றன. ஆனால் எல்லோரது குடல்களிலும் ஒரே வகையான நுண்ணுயிர்கள் தான் வாழ்வதென்றில்லை. பிறப்பின்போது தாயின் வழியாகத் தொற்றிக்கொண்டவையும், வாழும் சூழல் மற்றும் உண்ணும் உணவில் மூலம் தொற்றிக்கொள்பவையுமாக இவை மனிதருக்கு மனிதர் வேறுபடும்.

இந்த ஆய்வில் மன அழுத்தம் அதிகம் காணப்பட்டவர்களின் குடலில் வாழும் பக்டீரியாக்களையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். ‘புறோலைன்’ அமினோ அமிலம் அதிகமாகக் காணப்பட்டவர்களின் குடல்களில், அவற்றை உருவாக்கும் ஒரு வகை பக்டீரியா அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். புறோலைன் செறிவான புரதங்களை அதிகம் உண்பவர்களில் இவ்வகையான பக்டீரியா குறைவாக இருந்தால் அவர்களில் மன அழுத்தமும் குறைவாகவே இருப்பதையும் விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். எனவே ஒட்டு மொத்தமாக புறோலைன் புரத உணவ்க்கும் மன அழுத்தத்துக்கும் தொடர்புள்ளதென முடிச்சுப் போட்டுவிடவும் முடியாது.

விஞ்ஞானிகளின் இந்த அவதானிப்பை உறுதி செய்வதற்காக மனிதரில் காணப்பட்ட இந்த புறோலைன் சமிபாட்டுக்குக் காரணமான பக்டீரியாவை எலியின் குடலுக்குள் செலுத்தி அதன் செயற்பாடுகளை அவர்கள் அவதானித்தனர். ஆச்சரியமாக இந்த எலிகளும் மன அழுத்ததிற்கு உள்ளாகின. இந்த அமினோ அமிலம் எலியின் மூளைக்குள் சென்றிருப்பதை அவர்கள் அவதானித்தனர்.

இதே வேளை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட சில் ஈக்களில், இதே பக்டீரியாக்கள் உட்செலுத்தப்பட்ட பின் அவற்றின் செயற்பாடுகளும் அவதானிக்கப்பட்டன. இவ்வீக்களில் மேற்கொள்ளப்பட்ட மரபணு மாற்றம் புறோலைன் அம்கினோ அமிலத்தை மூளைக்குக் கொண்டுபோவதற்குக் காரணமான மரபணு செயலிழக்கப்பட்டிருந்தது. இந்த ஈக்களில் மன அழுத்தம் காணப்படவில்லை. காரணம் குடலிலிருந்து மூளைக்கு புரோலைனைக் கொண்டுபோவது முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தது.

எதிர்காலச் சிகிச்சை

புறோலைன் அமினோ அமிலத்துக்கும் மன அழுத்தத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றி இதுவரை எவரும் ஆராய்ந்திருக்கவில்லை. இனிமேல் இதுவும் மன அழுத்தத்திற்கான சிக்கிச்சைகளின்போது கருத்துக்கெடுக்கப்படும் என டாக்டர் ஃபெர்ணாண்டேஸ் றெயால் கூறுகிறார். மன அழுத்தத்திற்கு உணவு முறையிலான சிகிச்சை வழிகளுமுண்டு என்பதை எதிர்கால ஆராய்ச்சியாளர் உணர்ந்துகொள்வர் என்கிறார் அவர்.

குடல் நுண்ணுயிர்கள் மூளைக்குள் சென்று அங்கு மூளைக் கலங்களைப் பாதித்துவிடாமல் இருப்பதற்காக ஒரு வேலியை உடல் ஏற்கெனவே போட்டு வைத்திருக்கிறது. Blood – Brain barrier எனப்படும் ஒரு வகையான சவ்வு இவ் வேலியாக அமைகிறது. ஆனாலும் இந்நுண்ணுயிர்களினால் உற்பத்தியாக்கப்படும் நச்சுக் கழிவுகள் ஏதோ வகையில் இச் சவ்வை ஊடறுத்துக்கொண்டு மூளைக்குள் சென்று அங்கு ஏற்படுத்தும் தீய விளைவுகளால் முதுமை மறதி (dementia), மனப் பதட்டம் (anxiety) போன்ற மூளை சம்பந்தப்பட்ட வியாதிகள் வருகின்றன என நீண்டகாலமாகச் சந்தேகிக்கப்படும் ஒரு விடயம். இதற்காகத் தான் தமிழர் மருத்துவமான சித்த / ஆயுர்வேத வைத்திய முறைகளில் வருடத்துக்கு ஓரிரு தடவைகள் பேதி குடித்து வயிற்றைக் ‘கழுவிக் கொள்வது’ வழக்கம். இதையும் இன்னுமொரு விஞ்ஞானி ஒருநாள் தன் ஆய்வுக்குட்படுத்திக் கொள்ளலாம்.