‘சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகளை விடுதலை செய்யுங்கள்!’-ஞானசார தேரர்
டிசம்பர் 8, 2019
“அங்கு (சிறையில்) இருக்கும் விடுதலைப்புலி கைதிகளைப் பற்றி ஞாபகப்படுத்தத் தேவையில்லை. அவர்களில் பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள். சிலர் மீது இன்னும் வழக்குப் பதியப்படவில்லை. நாங்கள் அவர்களில் பலரைச் சந்தித்தோம். வாழ்வின் சில தருணங்களில் அவர்கள் தவறிழைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘நீங்களும் அப்போது வடக்கில் இருந்திருந்தால் அதையேதான் செய்திருப்பீர்கள்’ என்கிறார்கள். இப்போது அவர்கள் செய்வதற்கு எதுவுமில்லை. அவர்கள் உண்மையைப் புரிந்துவிட்டார்கள். அவர்கள் சமூகமயப்படுத்தப்பட வேண்டும், ஆனால் அவர்களுக்கு அச்சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை”
ஞானசார தேரர்
துமிந்த சில்வா, விடுதலைப்புலிகள் உட்பட சகல அரசியற் கைதிகளையும் விடுதலை விடுதலை செய்யவேண்டுமெனவும் அதற்கென விசேட ஆணையமொன்றை ஜனாதிபதி நியமிக்கவேண்டுமெனவும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார்.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவைக் கொலைசெய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அமைக்கப்படும் ஆணையம் இவர்கள் எல்லோருக்கும் எதிராகப் பதியப்பட்டுள்ள வழக்குகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“மன்னிக்கப்பட வேண்டிய சிறைக்கைதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்காது உடனே விடுதலை செய்ய வேண்டும். ருவான்வெலவிலிருந்த ஒருவரை எனக்குத் தெரியும். அவர் ஒரு சமயவாதி. ஐந்து வருடங்களுக்கு மேலாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அங்கு 70 வதுக்கு மேற்பட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் முதியோர் இல்லங்களில் இருக்க வேண்டியவர்கள். அவர்கள் காரணமின்றி இறக்கப்போகிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.
இவர்களில் பலர் அரசியற் காரணங்களுக்காகவும், சட்டத்தைத் துர்ப்பிரயோகம் செய்தமைக்காகவும் சிறைக்குச் சென்றவர்கள். அவர்கள் பந்துகளைப் போல் உதைக்கப்படுகிறார்கள். இவ் விடயமாக ஒரு ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்கும்படி நாங்கள் ஜனாதிபதியிடம் கேட்கிறோம்.
அங்கு சுனில் ரத்னாயக்கா போன்று பல அரசியற் கைதிகள் இருக்கிறார்கள். அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் உண்மைகள் இருக்கலாம். சில வேளகளில் சில தவறுகள் நேர்ந்து விடுகின்றன.
இங்கு (சிறையில்) இருக்கும் விடுதலைப்புலி கைதிகளைப் பற்றி ஞாபகப்படுத்தத் தேவையில்லை. அவர்களில் பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள். சிலர் மீது இன்னும் வழக்குப் பதியப்படவில்லை. நாங்கள் அவர்களில் பலரைச் சந்தித்தோம். வாழ்வின் சில தருணங்களில் அவர்கள் தவறிழைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘நீங்களும் அப்போது வடக்கில் இருந்திருந்தால் அதையேதான் செய்திருப்பீர்கள்’ என்கிறார்கள். இப்போது அவர்கள் செய்வதற்கு எதுவுமில்லை. அவர்கள் உண்மையைப் புரிந்துவிட்டார்கள். அவர்கள் சமூகமயப்படுத்தப்பட வேண்டும், ஆனால் அவர்களுக்கு அச்சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை” என ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது ஞானசார தேரர் தெரிவித்தார்.