Science & Technology

சிறுவர்களின் ஸ்மார்ட் ஃபோன்களில் இணையப் பாவனைக் கட்டுப்பாடு – சீனாவில் நடவடிக்கை

இணையப் போதையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி

18 வயதுக்குக் குறைந்தவர்களின் ஸ்மார்ட் ஃபோன்களில் சில செயலிகளின் தொழிற்பாடுகளுக்கு நேரக் கட்டுப்பாட்டை விதிக்கும்படி சீன இணையக் கட்டுப்பாட்டு நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இவ்வாலோசனை ஏற்றுக்கொள்ளப்படின் இளையோரின் வயதுகளுக்கேற்றவாறு இணைய சேவைகள் குறிப்பிட்ட நேரங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதை நடைமுறைப்படுத்த செயலிகளை உருவாக்குபவர்கள் “இளையோர் பாவனை” (minor mode) என்றொரு அம்சத்தை உள்ளடக்கவேண்டி ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை இணையத்தின் பாவனையை முடக்கிவிடக்கூடிய வகையில் செயலிகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டுப்பாடுகளைத் திணிக்க வேண்டுமென சீனாவின் இணையக் கட்டுப்பாட்டு நிர்வாகம் (Cyberspace Administration of China (CAC)) ஆலோசனை தெரிவித்துள்ளது.

இளையவர்கள் தமது வயதுகளுக்கேற்றவாறு இணையத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் இக்கட்டுப்பாடு அமையவேண்டுமென அது பரிந்துரைக்கிறது. உதாரணத்திற்கு 16-18 வ்யதுடையவர்களுக்கு நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்களும், 8-16வயதுடையவர்களுக்கு 1 மணித்தியாலமும் 8 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு 40 நிமிடங்களும் மட்டுமே இணையத் தொடர்பு கிடைக்கும். அதே வேளை கல்வி சம்பந்தமான செயலிகளுக்கும், அவசரகால சேவை தொடர்புகளுக்கான செயலிகளுக்கும் பெற்றோரால் அனுமதிக்கப்பட்ட செயலிகளுக்கும் பாவனையை அனுமதிக்கும் வகையில் அவற்றை நிர்வகிக்கும் உரிமையை பெற்றோர்களுக்கு வழங்கவேண்டுமெனவும் இந்நிர்வாகம் கேட்டுள்ளது.

அதே வேளை சோசலிசத்தின் மூல விழுமியங்களையும் சீன பாரம்பரியத்தையும் முன்னெடுக்கும் காணொளிகள், கணனி விளையாட்டுகள் போன்றவற்றை இத் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கவேண்டுமெனவும் சீன இணையக் கட்டுப்பாட்டு நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இது சம்பந்தமான கருத்துக்களை செப்டம்பர் 2 க்கு முதல் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் அரசுக்குச் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அது உத்தரவிட்டுள்ளது.

18 வயதுக்குக் குறைந்தவர்கள் கணனி விளையாட்டுகளில் ஈடுபடுவது ஏற்கெனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில், 18 வயதுக்குக் குறைந்தவர்கள் இணையத்தில் விளையாடுவதற்கு தற்போது வாரத்துக்கு 3 மணித்தியாலங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இணையப் போதையினால் வாழ்க்கை சீரழிந்துபோவதைத் தஹ்டுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்கும் நாடாக சீனா இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டு முறைகளூடனான முகாம்களில் இணையப் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. (Image credit: ludovic-toinel-nGwyaWKFRVI-unsplash)