• Post category:SRILANKA
  • Post published:December 17, 2019
Spread the love
டக்ளஸ் தேவானந்தா பதவியைத் துறக்க வேண்டும்

டிசம்பர் 17, 2019

தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியின் அரசியல் சித்தாந்தமும் அதன் முரண்பாடுகளும் சிறிது சிறிதாக வெளிப்பட்டுக்கொண்டுவரும் வேளையில் எமது மக்கள் அவருக்கு வாக்களிக்காதது சரியானது என்பது நிரூபணமாகிறது என இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ்க் கூட்டமைப்பு பா.உ. எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் ஜனாதிபதியை நிராகரித்தமை சரியானதே - சுமந்திரன் 1
Photo Credit: Colombo Telegraph

தேர்தலுக்கு முன்னர், தமிழ் மக்கள் கோதாபயவுக்கு வாக்களித்தால் மத்தியில் கூட்டாட்சியும், எமது மாகாணத்திற்கு அதிகாரப் பகிர்வும் கிடைக்குமென்று வாக்குறுதிகளைத் தந்த ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சிகளின் கொள்கைகளுக்கு என்ன நடந்தது? ‘இனிமேல் அதிகாரப்பகிர்வு என்ற சொல்லுக்கே இடமில்லை. வடக்கு மக்களின் அபிலாசைகளை அபிவிருத்தியினால் மட்டுமே தீர்த்துக்கொள்ள முடியுமென’ ஜனாதிபதி ராஜபக்ச திட்டவட்டமாகக் கூறிவிட்டார். எனவே, தேர்தலுக்கு முன்னர் எமது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் திரு. தேவானந்தா தனது பதவியை வைத்திருப்பது பற்றி மீள்பரிசீலனை செய்துகொள்வதே முறையானது எனச் சுமந்திரன் மேலும் கூறினார்.

13 வது திருத்தத்திற்கும் மேலாக அதிகாரப்பகிவுகளைக் கொடுப்பேனென்று மூன்று தடவைகள் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு எழுத்து மூலம் கொடுத்திருந்தார். அது சொல்லில் மட்டுமேயே தவிர அவற்றைக் கொடுப்பதற்கான உண்மையான நோக்கம் இருக்கவில்லையென்பது தெரிகிறது.

சிறுபான்மைப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொடுப்போம் என்ற வாக்குறுதியின் பேரில்தான் விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை நடத்துவதற்கு இந்தியாவிடமும் சர்வதேசங்களிடமுமிருந்து உதவிகளை அரசாங்கம் பெற்றது. அந்த வாக்குறுதிகளைக் கொடுத்த அரசாங்கதில் தான் தற்போதய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தார், எனவே அவருக்கு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பிருக்கிறது எனத் திரு சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

“தமிழரும் முஸ்லிம்களும் இலங்கையில் சிறுபான்மையினராக இருப்பினும் பல மாவட்டங்களில் அவர்கள் தான் பெரும்பான்மையினர். பெரும்பான்மையினரின் அதிகாரங்களுக்குள் சிக்காமல் தமது விவகாரங்களைத் தாமே பார்த்துக்கொள்வதற்காகவே சமஷ்டி ஆட்சியமைப்பு முன்வைக்கப்பட்டது. அதையொட்டியே மக்களும் வாக்களித்திருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த அரசாங்கம் எல்லா மக்களுக்குமானதென்றால் ஜனநாயகத்துக்கான இந்தக் குரல் மறுதலிக்கப்பட்டுவிட முடியாது.

இன்று, இப் புதிய ஆட்சியின்கீழ், எங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாகச் சொல்லும் உரிமை பாரதூரமான பின்னடைவைக் கண்டுள்ளது. எங்கள் சுதந்திர வேட்கையிலிருந்து எம்மை விலக்க முயற்சிக்கும் எந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் எமது சமூகம் ஒத்துழைப்பு வழங்கமாட்டாது. இனிவரும் நாட்கள் ஜனநாயகத்துக்குப் பெரும் சவால்களைத் தரப்போகின்றது. சமஷ்டி, ஜனநாயகம், மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக எல்லா சமூகங்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும்படி நான் அழைக்கிறேன்.

சமஷ்டி என்பது ஒரு வெறும் பெயர்ப்பலகையல்ல. மத்தியிலிருந்து நியாயமானதொரு அதிகாரப் பகிர்வையே நாம் கேட்கிறோம். முந்திய அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் மூலம் பல பிரேரணைகளை முன்வைத்திருந்தது. அது நிறைவேறவில்லை. புதிய அரசாங்கத்திலும் அவற்றைக் கொண்டுவந்து நிறைவேற்ற நாம் ஒத்துழைப்புத் தரத் தயாராகவிருக்கிறோம். அடுத்த தேர்தலுக்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. இந்தியாவின் பங்களிப்பும் ஆலோசனைகளும் அவசியாமனவை” என அவர் தனது உரையின்போது தெரிவித்தார்.

Related:  முஸ்லிம்களின் உடல் தகன விவகாரம் | விரைவில் தீர்வு காண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் வலியுறுத்து

தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் விடயத்தில், அவர்கள் திரும்பி வரவேண்டுமென்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. மாறாக, அவர்கள் அங்கேயே தங்கிவிட விரும்பினால் அது சர்வதேச சட்டங்கள், உடன்படிக்கைகளின் பிரகாரம் கையாளப்படவேண்டிய ஒன்று. தமது எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இந்தியாவிலோ அல்லது இங்கேயோ வாக்கு வங்கி அதிகரிப்புக்கான ஒரு விடயமல்ல அது. அவர்களது எதிர்கலத்தைத் தீர்மானிக்கும் அடிப்படை உரிமை அவர்களுக்கு இருக்கிறது எனச் சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மித மிஞ்சிய மண்ணகழ்வு விடயம்பற்றிக் கேட்டபோது, மஹிந்த ராஜபக்ச ஆட்சியின்போது வடமராட்சி கிழக்குப் பகுதியில் ‘மகேஸ்வரி நிதிய’ த்தின்பேரில் அரசாங்க ஆதரவுடன் நடைபெற்ற பகற்கொள்ளையின்போது பெருந்தொகையான மணல் ஏற்றப்பட்டது. தற்போது அது மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதை நிறுத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறது எனத் தெரிவித்தார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் ஜனாதிபதி பதிலேதும் கூறமுடியாதுள்ளார். குறிப்பாகச் சரணடைந்தவர்கள் விடயத்தில் இராணுவத்திடம் நம்பிக்கை வைத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்கள் விடயத்தில், தமது உறவினர்களைக் கையளித்ததன்மூலம் தாமே அவர்களது மறைவிற்குக் காரணமாகிவிட்டோமா என்ற குற்றங்களை மனதில் சுமந்துகொண்டு திரிபவர்களுக்காவது ஒரு முடிவு, ஆறுதல் தேவை. அவர்களது வாக்குமூலங்களை வெறுமனே உதாசீனம் செய்துவிட முடியாது. அவற்றை மறுக்கவும் முடியாது. அவர்களுக்குப் பதில் கூறியேயாக வேண்டும். நாங்கள் இவ்விடயத்தை அரசியலாக்குகிறோம் என்று ஜனாதிபதி தன் பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அதுவல்ல பதில். இது உயிர்கள் சம்பந்தப்பட்டது. அவர்கலது உறவினர்களுக்கு ஒரு முடிவைச் சொல்லவேண்டும்”.

வடமாகாண ஆளுனர் விடயத்தில் கருத்துத் தெரிவித்தபோது, “மற்ற எட்டு மாகாணங்களுக்கும் ஆளுனர்களை நியமித்துவிட்டு வடக்கை மட்டும் விட்டு வைத்திருப்பது ஜனாதிபதியின் தலைமைத்துவக் குறைபாட்டையே காட்டுகிறது. பலமானதும், ஒழுக்கமானதுமான தலைமைத்துவத்தைத் தருவேன் எனப் பிரச்சாரம் செய்த ஒருவர் இப்போது ஒரு முடிவை எட்ட முடியாமல் அல்லாடுகிறார். இதனால் வடமாகாணம் ஆளுனர் ஒருவரில்லாது ஸ்தம்பித்துப் போயுள்ளது. எங்களுக்கு உடனடியாக ஒரு ஆளுனர் தேவை” என அவர் தெரிவித்தார்.

நன்றி: என். லோகதயாளன் / கொழும்பு ரெலிகிராப்

Print Friendly, PDF & Email