சிறீலங்கா ரெலிகொம் | தலைவராக சமால் ராஜபக்சவின் புதல்வர்?

Spread the love
தொடரும் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி விஸ்தரிப்பு

டிசம்பர் 10, 2019

சிறீலங்கா ரெலிகொம் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி சிறீசேனாவின் தம்பி குமாரசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவரது இடத்தில் சமால் ராஜபக்சவின் புதல்வர் ஷமிந்திரா ராஜபக்சவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பதிலாக, குமாரசிங்க சிறீசேனவுக்கு மரக்கூட்டுத்தாபனத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பம்: றோஹித, நாமல், மஹிந்த, ஷிராந்தி, யோஷித

குமாரசிங்க சிறீசேனவுக்கு மேலதிகக் கொடுப்பனவுகளுடன், மாதமொன்றுக்கு 20 மில்லியன் ரூபாய்கள் சம்பளம் வழங்கப்பட்டு வந்ததென்றும், புதிய ஜனாதிபதி அதை 2.5 லட்சத்துக்குக் குறைத்திருந்தார் என்றும் முன்னர் செய்திகள் வந்திருந்தன.

தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் குமாரசிங்கவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு மஹிந்த உடன்படவில்லையெனவும் செய்திகள் வந்திருந்தன. ஆனால் இவ்விடயத்தில் புதிய ஜனாதிபதி கோதபாயவிற்கும் இதர ராஜபக்ச குடும்பத்தினருக்குமிடையில் இணக்கப்பாடு இருக்கவில்லையெனச் சொல்லப்பட்டது.

தற்போது சிறீலங்கா ரெலிகொம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு சமால் ராஜபக்சவின் புதல்வர் ஷமிந்திர ராஜபக்சவை நியமிக்க ராஜ்பக்ச குடும்பம் தீர்மானித்துள்ளதாகவும், அதே வேளை ராஜபக்ச குடும்பத்திலிருந்து எவரையும் அரசபதவிகளுக்கு நியமனம் செய்யக்கூடாதென்ற நிலைப்பாட்டுடன் கோதாபய உள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இருப்பினும், ஜனாதிபதி ராஜபக்சவின் அதிருப்தியையும் மீறி, ராஜபக்ச குடும்பத்திலுள்ள ஏனையோர் ஷமிந்திர ராஜபக்சவை சிறீலங்கா ரெலிகொம் அதிபராக நியமிக்க முடிவுசெய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் ஜனாதிபதி ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக மஹிந்தவின் புதல்வர் யோஷித ராஜபக்சவை நியமிக்க முயன்று அது கைகூடாத நிலையில், தற்போது இன்னுமொரு ராஜபக்சவுக்கு அதிகாரமுள்ள பதவியொன்றை வழங்க ராஜபக்ச குடும்பம் முயற்சிக்கிறது.

தற்பொழுது, ஜனாதிபதியாக கோதபாய, பிரதமராக மஹிந்த, ஊவா மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதய அங்கத்தவருமான சமாலின் புதல்வர் ஷஷீந்திர குமார, பாராளுமன்ற உறுப்பினராக நாமல், பொதுஜன பெரமுன கட்சி அமைப்பாளர் பசில், முன்னாள் ஜனாதிபதி சிறீசேனாவினால் மீண்டும் பதவியுயர்த்தப்பட்டு கடற்படையில் லெப்டினண்ட் கொமாண்டர் ஆக இருக்கும் யோஷித என ராஜபக்ச வம்சத்தின் அரச ஆக்கிரமிப்பு வளர்ந்துகொண்டே போகிறது.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கையில் பணத்தை இடுகை செய்யுங்கள் - இலங்கை மத்தியவங்கி ஆளுனர்

Leave a Reply

>/center>