Spread the love
கடனில் மூளும் இலங்கையை அபகரிக்கும் சீனா?

சிவதாசன்

அக்டோபர் 30, 2019

சிறீலங்கா | துறைமுக நகரம் (Port City) இன்று அரசிடம் கையளிப்பு 1

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே, கடலை நிரப்பி 4.46 சதுர கி.மீ. பரப்பளவில் சீன நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகம் இன்று உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன முன்னிலையில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வமான நிகழ்வின்போது நகர அபிவிருத்திச் சபையிடம் இக் கையளிப்பு நடைபெற்றது.

225 பில்லியன் ரூபாய் (US$ 1.4 billion) செலவில் சைனா ஹார்பர் எஞ்சினியரிங் கம்பனி (பிறைவேட்) லிமிட்டட் (China Harbour Engineering Company (Pvt) Ltd.) (CHEC), எனும் சீன நிறுவனத்தால் இன் நகரம் நிர்மாணிக்கப்பட்டது. இதற்கான நிலத்தை இலங்கை அரசின் நகர அபிவிருத்தி அதிகார சபை ‘செக் போர்ட் சிற்றி கொழும்பு (பிறைவேட்) லிமிட்டட்’ (CHEC Port City Colombo (Pvt) Ltd.) என்னும் நிறுவனத்துக்கு குத்தகையாக வழங்கியிருந்தது. இது இலங்கையில் பதியப்பட்ட ஒரு சீன நிறுவனம்.

இதில் 1.16 சதுர கி.மீ. பரபரப்பளவுள்ள நிலத்தைத் 99 வருட குத்தகைக்கு விடும் அதிகாரம் இச் சீன நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. பெரு நகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு இதற்கான சம்மதத்தைச் சீன நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது.

துறைமுக நகரத்திட்டம், இலங்கையின் நீண்டகால பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமான ஒன்றெனவும் பெருமளவு வெளிநாட்டு முதலீடுகளை அது ஈர்க்குமெனத் தான் நம்புவதாகவும் இவ் விழாவில் பேசிய ஜனாதிபதி சிறீசேன தெரிவித்தார்.

2015 இல் தனது அரசாங்கம் பதவிக்கு வந்தபோது, கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தத்தைத் மீளப் பரிசீலித்து, பேரம் பேசி, இத் திட்டத்தின் மூலம் நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் வந்துவிடாமல் நகரத்தின் நில உரிமையை இலங்கை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றி எழுதியதாகவும் ஜனாதிபதி பேசும்போது தெரிவித்தார். துறைமுக நகரின் நில உரிமையை நகர அபிவிருத்தி அதிகார சபை வைத்துக்கொள்ளும் அதே வேளை அதன் பாவனையை சீன நிறுவனமான ‘செக்’ (CHEC) நீண்டகாலக் குத்தகைக்கு எடுத்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம்
சிறீலங்கா | துறைமுக நகரம் (Port City) இன்று அரசிடம் கையளிப்பு 2
அம்பாந்தோட்டை துறைமுகம்

அதே வேளை 1.5 மில்லியன் டாலர் செலவில் சீனாவின் முதலீட்டில் அம்பாந்தோட்டையில் நிறுவப்பட்டுள்ள துறைமுகம் சீனாவின் நிர்வாகத்தின் கீழ் ஒரு ‘சீனக் காலனி’ யாக மாற்றம் பெறுகின்றது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இத் துறைமுகத்தின் உரிமையை இலங்கை அரசின் சிறீலங்கா துறைமுக அதிகார சபையும் சைனா மேர்ச்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனமும் பகிர்ந்துகொண்டிருந்தன. இருப்பினும், கடன் சுமை தாங்க முடியாமல் 2017 இல் சீன நிறுவனம் மேலும் 1.1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து இத் துறைமுகத்தின் 85% உரிமையையும் 99 வருட குத்தகையையும் பெற்றுக்கொண்டது.

தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் அதன் சர்வதேச கடன் சுமையைச் சமாளிக்குமளவுக்கு செலாவணியை உழைப்பதில்லை. இந்த நிலையில் 2019-2023 காலப்பகுதியில் வட்டியும், திருப்பிக் கொடுக்க வேண்டிய முதலுமாக 17 பில்லியன் டாலர்கள் இலங்கைக்குத் தேவைப்படுகின்றது. மொத்தமாக இருக்கும் 55 பில்லியன் டாலர் கடனில் சீனாவின் பங்கு 10%.

அம்பாந்தோட்டை துறைமுகம் கை மாறியதற்குப் பின்னர் தான், இந்து சமுத்திரத்தின் ஆதிக்கம் சீனாவிடம் படிபடியாக நகர்வதைக் கண்டு அமெரிக்கா, இந்தியா, யப்பான் ஆகிய நாடுகள், விழித்துக்கொண்டுள்ளன.

சீனாவின் நிர்வாகம் கையேற்கு முன் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அன்னிய கப்பல்கள் அதிகம் வருவதில்லை என்பதால் துறைமுகம் நட்டத்திலேயே இயங்கிக்கொண்டிருந்தது. சிறீலங்காவின் நிர்வாகத்தில், 2017 இல், 175 கப்பல்கள் மட்டுமே அங்கு நங்கூரம் பாய்ச்சின. 2018இல், சீன நிர்வாகத்தில் 300 கப்பல்கள் இத் துறைமுகத்துக்கு வந்திருந்தன. அம்பாந்தோட்டையிலிருந்து ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, தென்னமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நடைபெற்ற ஏற்றுமதி 60% தால் அதிகரித்தது.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் சைனோபெக் என்ற சீன பெற்றோ கெமிக்கல் நிறுவனம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கப்பல்களுக்கு எண்ணை வழங்கும் தளமொன்றை நிறுவுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது அத் துறைமுகத்துக்கு வரும் கப்பல் போக்குவரத்தை இன்னும் அதிகரிக்கும். இத் தளத்தை நிறுவுவதற்கான கப்பலும் கருவிகளும் ஏற்கெனவே துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துவிட்டன. இலங்கையின் அபகரிப்பில் சீனா அசுர வேகத்தில் செயற்படுகின்றது.

கடனில் மூழ்கி இருக்கும் இலங்கை வெளிநாட்டு முதலீடுகளுக்காகத் தவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையைச் சாதகமாகப் பயன்படுத்தி சீனா இலங்கையில் தன் முதலீடுகளை விரைவாக்கி வருகிறது. அதன் கையிலிருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் இதற்கு வசதியாகப் போய்விட்டது.

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் சீனாவுக்கு நட்பானவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென்பதிலும் சீனா படு தீவிரமாகச் செயற்படுகிறது. ஜே.வி.பி. யின் ஆதரவிலிருக்கும் துறைமுக நகரத் தொழிலாளர் சங்க அங்கத்தவர்கள் மத்தியில் இவ் விடயத்தில் சீன ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட்டதென்று சமீபத்தில் செய்தி வந்திருந்தது.

சீனாவின் கணக்கு சரியாகத்தான் இருக்கும்போலிருக்கிறது.

Print Friendly, PDF & Email