சிறீலங்கா | தமிழரை இழிவு படுத்தும் முத்திரை இனக் குரோதத்தின் வெளிப்பாடே!

Spread the love

சமீபத்தில் இலங்கை தபாற் திணைக்களத்தால் ‘தஹா அத்த சன்னிய’ (பதினெட்டுச் சன்னிகள்) என்ற தலைப்பின் கீழ் 18 முத்திரைகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு முத்திரை ‘டெமல சன்னிய’ (தமிழ்ச் சன்னி) என்ற பெயரின் கீழ் கரிய நிறமுள்ள ஒருவர் வீபூதிக் குறி, குங்குமப்பொட்டு, தலைப்பாகை போன்ற அடையாளங்களுடன் உள்ள ஒரு சித்திரத்தைத் தாங்கி வெயிடப்பட்டுள்ளது. இது தமிழரை அவமானப்படுத்தும் ஒரு செயலாகப் பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.

தமிழரை இழிவுபடுத்தும் ‘தெமழ சன்னியா’ முத்திரை

சித்த / ஆயுர்வேத வைத்திய முறையில் சன்னி என்பது ஒரு வகை நோயென்றும் அதில் பதினெட்டு வகைகள் உண்டென்றும் சொல்லப்படுகிறது. போகர் எழுதிய சித்த வைத்திய நூலில் பதினெட்டுச் சூலைகள் எனவும் கூறப்படுகிறது.

சில ஆபிரிக்கக் கலாச்சாரங்களில் காணப்படுவதைப் போலத் தீராத நோய்கள் பலவற்றைப் ‘பேய் பிடித்திருக்கிறது’ என்று பேயோட்டுதம் மூலம் (exorcism) நாட்டு வைத்தியர்கள் சிகிச்சை செய்வது வழக்கம். இந்தியாவின் தென் மாநிலங்களிலும் இலங்கையிலும் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. சிங்கள நாட்டுப்புற வைத்தியர்கள் (வெத மாத்தயா) இப் பேயோட்டும் முறையை இப்போதும் சிகிச்சைக்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆயுர்வேத வைத்தியத்தை, அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையாக மட்டுமல்லாது அதை விருத்தி செய்வதிலும் ஆர்வம் காட்டும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருக்கிறது. இதன் காரணமாக இத் தொன்மையான சிகிச்சை முறையைக் கெளரவிப்பதற்காக 18 சன்னிகள் பற்றிய முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது.

சன்னிக்கு ஆங்கிலத்தில் delirium (ஒரு வகையான சித்தப் பிரமை) என்ற கருத்தும் இருக்கிறது. சித்தப்பிரமை உள்ளவர்களுக்கு நாட்டுப்புற சிகிச்சை, பொதுவாகப் ‘பேயோட்டுதல்’ (மேற்கு நாடுகளில் exorcism செய்வது போல) மூலமாக நடைபெறுவது வழக்கம்.


பதினெட்டுச் சன்னிகள்
 • பூத சன்னி – demon of spirits
 • அபூத சன்னி – demon of madness
 • அமுக்க சன்னி – demon causing fits of vomiting
 • வேதி சன்னி – caused by the disturbance of bile and phlegm
 • வாத சன்னி – caused by the disturbance of body wind
 • பீத சன்னி – demon of fear
 • பிஹிறி சன்னி – demon of deafness
 • கணா (கண்) சன்னி – demon of blindness
 • பித்த சன்னி – demon of bile
 • கோலு (செவி) சன்னி – demon of dumbness
 • மூர்த்து சன்னி – demon of unconsciousness
 • தமிழ்ச் சன்னி (Demala sanniya) – demon of Tamil
 • குல்மா சன்னி – demon of the disease of the spleen
 • கோர சன்னி – demon of lameness
 • கிஞ்சால் சன்னி – demon of flames
 • சீதள சன்னி – demon of shivering
 • நாக சன்னி – demon of cobra
 • தேவ சன்னி – demon of deity
18 சன்னிகளை உருவகிக்கும் முகங்களைப் பிரதிபலிக்கும் சிறீலங்கா முத்திரைகள்

சடங்குகளின்போது ‘பேய்க்கென’ ஒரு உருவத்தைச் செய்து (வழக்கமாக மாவைக் குழைத்து பொம்மை வடிவில் செய்வதுண்டு) மந்திரவாதிகள் / வைத்தியர்கள் பேயோட்டும் சடங்குகளைச் செய்வதுணடு. இம் முத்திரைகளில் ஒவ்வொருரு வகையான நோய்களுக்கும் வெவ்வேறு உருவங்களை அடையாளமாக உருவகப்படுத்தியது முத்திரைகளை வடிவமைப்புச் செய்தவரின் அறியாமையாலோ அல்லது இனக் குரோதத்தாலோ அல்லது அரசியல்வாதிகளின் ஈடுபாட்டாலோதான் நடைபெற்றிருக்க வேண்டும். ஏடுகள் மூலமோ அல்லது வாய்வழியாகவோ வந்த சடங்குகளில் இப்படி அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருக்கச் சாத்தியமில்லை.

Related:  இலங்கையில் பணத்தை இடுகை செய்யுங்கள் - இலங்கை மத்தியவங்கி ஆளுனர்

‘தெமழ சன்னியா’ என்ற பெயர் ஒரு நோய்க்குக் கொடுக்கப்படிருப்பதற்கான காரணம் அறியப்பட வேண்டும். சில நோய்கள், குறிப்பாகச் சுரம், அவை உருவாகும் நாடுகளின் அல்லது மக்கள் கூட்டத்தின் பெயரால் அழைக்கப்படுவது வழக்கம். உதாரணம், African Swine, Chinese Flu, Asiatic Flu என்பன. சில வேளைகளில் தமிழர் தேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட நோய் ‘தெமள சன்னிய’ என அழைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் இந்த முத்திரை வெளியிடல் விடயத்தில் தமிழரை அடையாளமாகக் காட்டிய முறை முற்றிலும் தவறு. இதன் பின்னால் இனக் குரோதம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக அம் முத்திரையின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பில் “பாரம்பரிய சிங்களப் பேயோட்டும் சடங்கு” ( “traditional Sinhalese exoticism ritual”.) எனக் கூறப்பட்டு அதில் தமிழரின் அடையாளங்களைக் கொண்ட உருவத்தைப் பொறித்திருப்பது என்பது ‘தமிழரையும் இன்னுமொரு ‘பேயாகக்’ காட்டும் முயற்சி எனவே பார்க்கப்பட வேண்டும். இது இனக் குரோதத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றுமில்லை.

செய்தி / கட்டுரை: இலங்கையிலிருந்து எம். வரதராஜன்
Print Friendly, PDF & Email

One thought on “சிறீலங்கா | தமிழரை இழிவு படுத்தும் முத்திரை இனக் குரோதத்தின் வெளிப்பாடே!

 • November 5, 2019 at 6:46 pm
  Permalink

  this is old news. 8 ஓகஸ்ட் 2018 வெளியிடப்பட்ட முத்திரைக்கு இப்பொழுது கண்டிக்கிறார்கள்.

Comments are closed.

>/center>