சிறீலங்கா – தமிழரது எதிர்காலம்?

மஹிந்த ராஜபக்ச ஒரு மஹா தந்திரசாலி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அதே வேளை முன்னாள் விதானையார் மைத்திரிபால சிறீசேன முட்டாள் பட்டத்தில்இருந்து அதி முட்டாள் பட்டம் பெற்றுக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். சிறுபான்மைக் கட்சிகள் சாணக்கியமாகச் செயற்பட்டிருக்கிறார்கள், அதிலும் த.தே.கூ. தார்மீகமாகவும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

சிறீசேன சுய புத்தியில் என்றுமே நடந்து கொண்டவர் அல்ல. சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து மஹிந்த தரப்பை விலக்கி வைக்க சந்திரிகா குழு விரித்த வலையில் முதலில் விழுந்தது சிறீசேன. பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் உடுக்கடியில் அவர் சன்னதம் கொண்டார். சிறீசேனவை ஓரம் கட்டி விக்கிரமசிங்க நடந்து கொண்டது அவருக்குத் தீராத கடுப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்குள் ஏற்பட்ட விரிசலைத் தந்திரவாதி ராஜபக்ச தனக்குச் சாதகமாகப் பாவித்துக் கொண்டார்.

ராஜபக்சவுக்கு ஆலோசகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு உய்த்துணரும் விவேகம் அவருக்கும் இருக்கிறது. அவரது சகோதரர்களும் ஒருவருக்கொருவர் துரோகம் செய்யும் பழக்கம் இல்லை. அவரைச் சுற்றி ஒரு நம்பிக்கையான கூட்டம் இருக்கிறது. சிறீசேனவுக்கு அப்படி ஒரு ஆதரவு வட்டம் இல்லை. ஆலோசனை வழங்குவதற்கும் எவருமில்லை. சிறீசேன முன்பு ஒரு தடவை ராஜபக்சவின் முதுகில் குத்தியவர். இது ராஜபக்சவின் தருணம்.

ராஜபக்சவின் நோக்கம் பாராளுமன்றத்தைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பை மாற்றுவது. தற்போதய அரசியலமைப்பு அவர் மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதைத் தடை செய்துவிட்டது.  விக்கிரமசிங்கவின் அரசு தொடர்ந்தால் ராஜபக்ச குழுவில் பலர் சிறைக்குச் செல்ல நேரிடலாம். பிரதமராக வருவதற்கு செய்த சதியும் பலனளிக்காமல் போய்விட்டது. எனவே பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலொன்று அவசியமாகியது.

2018 கருத்துக் கணிப்பில் ராஜபக்ச தரப்பு 40.47% மும் சிறீசேனவின் SLFP/UPFA கூட்டு 12.7% மும் மக்களாதரவைப் பெற்றிருக்கின்றன. எனவே ஆட்சியமைக்கத் தேவையான ஆசனங்களைப் பெறத் தன்னால் முடியும் என்ற நம்பிக்கை ராஜபக்சவிடம் இருக்கிறது. சிறீசேனவை புறந்தள்ளிவிட்டு அவரது ஆதரவு வாக்குகளை இலகுவாகப் பெற்றுவிட ராஜபக்சவினால் முடியும். சிறீசேனவின் குழறுபடிகள் அவர் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பை வெகுவாகக் குறைத்து விட்டன என்பதை அறிந்த ராஜபக்ச அவரை உள்ளே வைதிருப்பதை விட விலத்தி விடுவதே மேல் எனக் கருதியிருக்கலாம். ஆட்சியமைக்கும் போது தேவையானால் சிறிசேனவைத் திரும்பவும் வாங்கிவிட முடியும் என்பதுவும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

த.தே.கூ. ஆதரவளிக்காதமையினால் தான் தன்னால் ஆட்சியமைக்க முடியவில்லை என்ற விடயத்தை ராஜபக்ச தரப்பு தென்னிலங்கையில் கசியவிட்டிருக்கிறது. மீண்டுமொரு தடவை தமிழர் தலை மீது குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. சிறியதொரு அளவிலாவது இனக் கலவரமொன்று தோன்றுவது ராஜபக்ச தரப்பின் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்யும். இறுதிப் போரில் மூர்க்கத்தோடு செயற்பட்ட 53 வது படைத் தளபதியும் கோதபாயவின் அடிவருடியுமான கமால் குணரட்ன ஏற்கெனவே இனவெறுப்புச் சக்திகளுக்குத் தூபமிட்டுக் கொண்டிருக்கிறார்.

இச் சூழ்நிலையில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க. வும் விரும்பியோ விரும்பாமலோ இனவெதிர்ப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடவே தள்ளப்படுவர். சிறுபான்மைக் கட்சிகளோடு கூட்டமைப்பு வைப்பின் அதுவே ராஜபக்சவின் துரும்புச் சீட்டாக மாறும்.

தமிழர் தரப்பு மீண்டுமொரு தடவை பக்க விளைவினால் (collateral damage) தாக்கப்படும் தரப்பாகவே இருக்கப் போகிறது. த.தே.கூ எவ்வளவு தூரம் தனது பங்காளிகளைத் தக்க வைத்துக் கொள்ளுமென்று சொல்ல முடியாது. இதர உதிரிகள் வாக்குகளைப் பிரிக்கும் கருவிகளாக மட்டுமே இருப்பார்கள்.

ராஜபக்ச தரப்பு வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்தி அரசியலை முன்வைத்துப் பிரசாரம் செய்யும். ரணில் – சிறீசேன நல்லாட்சியில் அபிவிருத்தி எதுவுமே நடைபெறவில்லை என்பதற்கான சாட்சிகளாக கம்பளத் தெருக்களில் மாடுகள் தூங்குவதையே காட்டுவார்கள். ராஜபக்ச அரசு பட்ட கடனின் வட்டியைக் கட்டுவதற்கு நல்லாட்சி பிரசவித்த அமைதியும் அதன் பால் வந்த வெளிநாட்டார் சுற்றுலாப் பணமும், வெளிநாட்டுத் தமிழரின் முதலீடுகளும் காரணமாயிருந்தன என்பதைப் புரிந்து கொள்ளாத தமிழர்களது கூச்சல்கள் வட கிழக்கில் வானைப் பிளக்கவே செய்யும். உரிமை அரசியல் கொஞ்சக் காலத்துக்கு ஓய்வெடுக்கத் தள்ளப்படலாம்.

என்ன இருந்தாலும் தமிழரது வரலாற்றில் இத் தேர்தல் ஒரு திருப்பு முனையாகவே இருக்கப்போகிறது. இத் தேர்தலில் த.தே.கூ. மீண்டுமொரு தடவை பலமான, பேரம் பேசும் கட்சியாக தெரிவு செய்யப்படாவிட்டால் அதன் தலைவர் திரு. சம்பந்தன் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுண்டு. கூடவே திரு சுமந்திரனும் ஒதுங்கித் தன் சுய தொழிலைப் பார்ப்பதற்கான சாத்தியமுமுண்டு. அப்படி நடைபெறின் தமிழரசுக் கட்சி அல்லது த.தே.கூட்டமைப்பின் முடிவும் அதுவேயாகவே இருக்கும். இவர்கள் இருவரது தகைமைகளையும் கொண்ட அரசியல்வாதிகள் இது வரை தமிழர் தரப்பில் இனம் காணப்படவில்லை.

தமிழருக்கு ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வொன்றைத் தரக்கூடியவர் ராஜபக்ச என்று நம்பும் தமிழர் நிறையவே இருக்கிறார்கள். சிங்களத் தரப்பு அதற்கு ஒருபோதும் அனுமதியாது. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சர்வதேச அழுத்தமொன்றினால்தான் சாத்தியமாகும். அவர்களது கவசமும் கருவியும் ஜனநாயகம் மட்டுமே. தமிழர் இவற்றை இது வரை புனிதமாவே அணிந்து வந்திருக்கிறார்கள். அதற்கான மதிப்பையும் கெளரவத்தையும் சர்வதேசம் கொடுத்து வருகிறது. வருகின்ற தேர்தலில் அவை கழற்றப்படுமாயின் எம்மைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.