சிறீலங்கா: ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ரணிலின் அரசாங்கம் கவிழ்க்கப்படுமா?

சிறீலங்கா: ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ரணிலின் அரசாங்கம் கவிழ்க்கப்படுமா?

Spread the love
தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் சமீபகாலமாக மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. ஜனாதிபதி தேர்தல் இந்த வருட இறுதிக்குள் நடைபெறுமென்று தேர்தல் ஆணையகம் அறிவித்ததிலிருந்து சில கட்சிகள் அதற்குத் தம்மைத் தயார்படுத்தும் பணிகளில் மும்முரமாயிருந்தாலும் வேறு சில கட்சிகளும் அரசியல்வாதிகளும் இன்னுமொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த இரகசியமான பேச்சுவார்த்தைகளிலும் நகர்வுகளிலும் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் கசிகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது சம்பந்தமாகக் கூட்டணி அமைப்பது பற்றி ஐ.தே.கட்சியும், சிறீலங்கா பொதுஜன முன்னணியும் ஏற்கெனவே சில தீர்மானங்களை எட்டியிருப்பினும் அத் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கோ அல்லது ஏதாவது வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் கையிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கோ ஒரு சிலர் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகவும் அறியப்படுகிறது.
இதன் முதற்படியாக ஐ.தே.கட்சிக்குள் இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரானவர்களை அணிதிரட்டும் முயற்சி சில மாதங்களாகவே திரை மறைவில் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி சிறீசேன மற்றும் பசில் ராஜபக்ச போன்றோர் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த அக்டோபர் 2018 ஜனாதிபதி மேற்கொண்ட சதியின் போது இது சிறிதளவு முகம் காட்டியிருந்தது. நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது நிறைவேறாதபோது ‘அதை நிறைவேற்ற வேறு வழிகளும் இருக்கின்றன’ என்று பசில் ராஜபக்ச கூறியிருந்ததைப் பலரும் அவதானிக்கவில்லை. அதன் பிறகுதான் ஜனாதிபதி சிறீசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்தும் தூக்கினார். சட்டத்துக்குப் புறம்பான அரசு அமைக்கப்பட்டு 52 நாட்கள் ஆட்சியும் புரிந்தது. இதன் போது ‘சஜித் பிரேமதாச அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியா பிரதமாரக விரும்பினால் அவ்வரசைத் தான் அங்கீகரிப்பேன்’ என ஜனாதிபதி கூறியிருந்ததும் கவனிக்கப்பட வேண்டியது. காரணம் சஜித் பிரேமதாசவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் உள்ள பகைமை. ஐ.தே.கட்சிக்குள் ரணில் மீது அதிருப்தி கொண்ட பலரை அவதானித்த பசில் ராஜபக்ச அக் கட்சியை உடைக்கத் திட்டம் தீட்டியதாகவும் ஜனாதிபதி சிறீசேன மூலம் சஜித் பிரேமதாச முதலாவதாகக் குறிவைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரியவருகிறது. சஜித் பிரேமதாசவின் சமீபகால நடவடிக்கைகளை அவதானித்தால் இதற்கான பல ஆதாரங்கள் புலப்படுகின்றன.
பலத்த எதிர்ப்புக்களின் மத்தியிலும் சமீபத்தில் ஜனாதிபதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுச் சிறையிலிருந்தவர்களைத் தூக்கிலிடவேண்டுமென்று மிகவும் பிடிவாதத்துடன் செயற்பட்டார். இதன் மேல் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றபோது ஐ.தே.கட்சியைச் சேர்ந்த ஒரே ஒருவர் சார்பாக வாக்களித்திருந்தார். அது சஜித் பிரேமதாச தான். பாராளுமன்றத்துக்கு வெளியிலும் ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதசவிற்குமிடையில் பலமான நட்பு இருப்பது பலருக்கும் தெரிந்திருந்தது. அது மட்டுமல்ல. சமீபத்தில் கோதபாய ராஜபக்ச புத்த பிக்குக்களுக்கு ‘பிச்சை’ வழங்கிய வைபவத்தில் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டிருந்தார்.
இச் சம்பவங்கள் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் புதிய கேள்விகளை எழுப்பி வருகின்றன. இன்னுமொரு சதியொன்றிற்கு தென்னிலங்கை தயாராகிறதா? விரைவில் ஆட்சி மாற்றமொன்று நிகழவிருக்கிறதா? ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாகப் பாராளுமன்றத் தேர்தலொன்று நடபெறுவதற்கான சாத்தியங்கள் புலப்படுகின்றனவா?
சூத்திரதாரி
பசில் ராஜபக்சவின் முயற்சி திருவினையாக்கும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. ஐ.தே.கட்சிக்குள் பிளவை உண்டாக்கும் அவரது கனவு ஜனாதிபதி சிறீசேனவின் உதவியுடன் நனவாகலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டாகியிருக்கிறது. திட்டம் இதுதான். இன்னுமொரு தடவை ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவது. சென்ற தடவையை விட ஐ.தே.கட்சியும் அதன் நட்புறவுக் கட்சிகளும் பலம் குன்றியிருக்கின்றன. பலர் கட்சி தாவலாம். விக்கிரமசிங்கவின் ஆட்சி கலைக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே பாராளுமன்றத் தேர்தலை நடத்திவிடலாம். இதனால் அரசியலமைப்பில் மாற்றங்கள் எதையும் கொண்டுவர முடியாது. 20வது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை மீளவும் நிலைநாட்டலாம். தமிழர்களுக்குச் சாதகமானதெனச் சிங்களப் பேரினவாதிகள் குற்றம் சாட்டும் புதிய அரசியமைப்பை நிறைவேறாமற் செய்யலாம்.
இதற்கிடையில் ஐ.தே.கட்சியைச் சேர்ந்த சிலர் சஜித் பிரேமதாசவை ஐ.தே.கட்சியின் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதற்கு அவரும் உடன்பட்டுச் செயற்படுகிறார்.  தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அவரைப் பாவித்து ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்றுவதே திட்டம். அதிகாரங்கள் களையப்படாத ஜனாதிபதி பதவி சஜித் பிரேமதாசவுக்குத் தேவைக்கும் அதிகமான பலத்தைக் கொடுக்கும் அதற்கு விக்கிரமசிங்க பலியாக்கப்படலாம். மாறாக பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற்று புதிய அரசியலமைப்பு வரைவை நிறவேற்றுவாரானால் ‘ஜனாதிபதி சஜித்’ வெறும் சடங்கு ரீதியான அதிகாரங்களற்ற ஜனாதிபதியாகவே இருப்பார். இதைத் தெரிந்துகொண்டும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் நிற்க விரும்புகிறாரென்றால் அவர் சூத்திரதாரி பசில் ராஜபக்சவின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு இயங்குகிறார் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.
இந்த சலசலப்புகளின் மத்தியில் அதிரடி அறிவிப்புகளுக்குப் பெயர் போன நமது ஜனாதிபதி காக்கும் மெளனம் பலத்த அச்சத்தைத் தருகிறது.
அதிர்ச்சிகளால் மரத்துப்போன தமிழருக்கு இது என்னத்தைச் செய்யப் போகிறது?
சிவதாசன்
Print Friendly, PDF & Email