புதிய ஜனாதிபதியின் அதிகாரங்கள்
இன்று சிறிலங்காவில் இருக்கக்கூடிய அதன் அரசியலமைப்பைக் கரைத்துக் குடித்தவரென்று கூறக்கூடிய டாக்டர் நிஹால் ஜயவிக்கிரம கடந்த ஜூன் 10ம் திகதி அடுத்ததாக வரப்போகும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பற்றி விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் புதிய ஜனாதிபதியின் அதிகாரங்கள் கிட்டத்தட்ட 1972 அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியாகவிருந்த வில்லியம் கோபல்லாவ வின் அதிகாரங்களுக்குச் சமமானதாகவிருக்கும் என்று கூறியிருந்தார். புதிய ஜனாதிபதி பதவியேற்ற மறு நாளே அதிகாரங்கள் முழுவதும் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பாராளுமன்றத்துச் சென்றுவிடும் என்பதே அவரது கருத்து. தற்போதய அரசியலமைப்பின் 42 வது கட்டளை (Article 42) இதை உறுதிப்படுத்துகிறது. அத்தோடு 45 வது கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிய ஒரு உறுப்பினரே அமைச்சராக நியமைக்கப்பட முடியும் எனவும் அரசியலமைப்பு கூறுகிறது.
அரசியலமைப்பின் 19வது திருத்தம் அதன் 51வது கட்டளையின் பிரகாரம் ஜனாதிபதி சிறிசேனவுக்கு இடைக்கால ஏற்பாடாகக் கொடுத்த அதிகாரத்தின்படி அவர் பாதுகாப்பு, மஹாவலி, சுற்றுச்சூழல் ஆகிய மூன்று அமைச்சுக்களையும் தனக்குக்கீழ் வைத்துக்கொண்டார். ஆனால் அவர் பதவியைத் துறக்கும் நாளன்று அந்த இடைக்கால அதிகாரமும் காலாவதியாகிவிடும். இவருக்குப் பின்னர் பதவியேற்கும் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் தனக்குக் கீழ் கொண்டுவர முடியாது, அது பாதுகாப்பு அமைச்சாக இருந்தாலும்கூட.
புதிய ஜனாதிபதியின் அதிகாரங்கள் சம்பிரதாய கடமைகளாகவே இருக்கும். அவர் போருக்கான பிரகடனத்தைச் செய்தாலும் கூட பாராளுமன்றத்தின் அமைச்சர்கள் ஒத்துழைக்காத பட்சத்தில் அவரது கட்டளைகள் எதுவும் நிறைவேறுவதற்குச் சாத்தியமேயில்லை. அவரால் நியமிக்கப்படும் தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சின் அதிகாரங்களை மீறிச் செயற்பட முடியாது என்கிறார் டாக்டர் ஜயவிக்கிரம.
இப்படி அதிகாரங்கள் களையப்பட்ட ஜனாதிபதி பதவிக்கு ஏன் இத்தனை பேர் போட்டியிடுகிறார்கள். அரசியலமைப்பை இவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா? அல்லது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று தற்போதைய அரசியலமைப்பை மாற்றுவதற்குத் திட்டமிடுகிறார்களா?
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதும், ஜனாதிபதியைப் பலவீனப்படுத்துவதும் ஐ.தே.கட்சியின் தலைமையைத் தக்கவைத்துக் கொள்வதுமே தலையாய கடமை என நடந்து கொள்வது போலவே தெரிகிறது. அவருக்கு எதிரியாக இருப்பது சஜித் பிரேமதாச. சஜித் பிரேமதாசவைக் கொண்டு ஐ.தே.கட்சியை உடைப்பதில்தான் மஹிந்த தரப்பு முழு மூச்சாகச் செயற்படுகிறது.
யார் ஜனாதிபதியாக வந்தாலும் 19வது திருத்தம் போட்ட விலங்குகளை உடைக்க வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றினால் தான் அது சாத்தியமாகலாம். அந்த விலங்குகளைப் போடுவதற்கு தமிழர் தரப்பும் உதவி செய்திருக்கிறது என்பதோடு தமிழர் இப்போதைக்குத் திருப்தி கொள்வது நல்லது.