சிறீலங்கா அமைதிப்படையை ஐ.நா. தடை செய்தது -

சிறீலங்கா அமைதிப்படையை ஐ.நா. தடை செய்தது

Spread the love
ஷவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதே காரணம்

25 செப்டம்பர் 2019

போர்க்குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜென்.ஷவேந்திர சில்வா

போர்க்குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை சிறீலங்கா இராணுவத்தின் தளபதியாக நியமித்ததைக் காரணங்காட்டி, சிறீலங்கா இராணுவத்தினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என ஐ.நா. அமைதிப்படைத் திணைக்களம் முடிவெடுத்துள்ளதாக ஐ.நா.வின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

ஜெனெரல் ஷவேந்திர சில்வாவின் நியமனத்தின் மூலம் சிறீலங்கா ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.

போரின் போது ஷவேந்திர சில்வாவினாலும் அவரது படையினராலும் இழைக்கப்பட்ட மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் இருக்கக்கூடியதாக அவர் நியமனம் செய்யப்பட்டது மிகவும் கவலைக்குரியது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷல் பக்கெலெட் சென்ற மாதம் தெரிவித்திருந்தார்.

ஐ.நா. அமைதிப் படையினரின் பாதுகாப்பு சம்பந்தமான அவசரத் தேவைகள் இருந்தாலேயொழிய நாம் சிறீலங்கா படையினரை அமைதிப் பணிகளில் ஈடுபடுத்தப் போவதில்லை என ஐ.நா. பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தற்போது ஐ.நா. அமைதிப் படையினருடன் தற்போது கடமையிலீடுபட்டுவரும் சிறீலங்காவின் படையினர் அவர்களது சுழற்சித் தவணை முடிவடையும் போது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் ஆனால் வழக்கம் போல அவர்களிடத்தை நிரப்ப இன்னுமொரு படையினர் அழைக்கப்பட மாட்டார் என ஐ.நா. செயலாளர் நாயகமான அன்ரோனியோ குட்டேரெஸ் இன் பிரதிப் பேச்சாளரான ஃபார்ஹான் ஹாக் தெரிவித்தார்.

ஐ.நா. வின் ஆறு அமைதிப் பணிகளுக்குப் பங்களித்ததற்காக சிறீலங்காவின் படையினருக்குத் தன் நன்றியைத் தெரிவித்த அவர் சில்வாவின் நியமனத்தால் பெரிதும் குழப்பமடைந்துள்ளதாகத் தெரிவிதார்.

” மனித உரிமைகள் மீறல்களிலும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் சில்வாவின் பங்கு பற்றி நம்பிக்கையான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்தும் ஜெனெரல் ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதி பதவிக்கு நியமித்திருப்பது பற்றி சிறீலங்காவின் அரசாங்கத்திற்கு எங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தோம். இதன் காரணமாக, ஐ.நா. அமைதிப்படைகளின் பணிகளின்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களைத் தவிர நாங்கள் அவர்களை அமைதிப்பணிகளுக்குச் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை” என ஹாக் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  ராஜபக்ச ஆட்சியில் இலங்கையில் மனித உரிமைகளுக்குப் பேராபத்து- மனித உரிமைகள் கண்காணிப்பகம்