சிறீலங்காவில் அமெரிக்கத் தளம் | இலங்கையர்களுக்கு அனுமதியற்ற நுழைவு வழங்குவதற்கான பரிசு?
நுழைவு அனுமதி பெறாமல் அமெரிக்கவுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் குடிமக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக சிறீலங்காவையும் சேர்த்துக்கொள்ளப போவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கிறது. அமெரிக்க நுழைவு அனுமதி தவிர்ப்புத் திட்டம் (U.S Visa Waiver Program (VWP)) ஏற்கெனவே நடைமுறையிலுள்ள திட்டமெனினும் தற்போது இத் திட்டத்தில் மேலும் 10 நாடுகளைச் சேர்த்துக்கொள்ள அது முடிவெடுத்துள்ளது. இப் பத்து நாடுகளில் சிறீலங்காவும் ஒன்றாகும் என ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார்.
இத் திட்டம் காலத்துக்குக் காலம் மறுபரிசீலனை செய்யப்படும்போது சில நாடுகள் அகற்றப்படுவதும், சில நாடுகள் சேர்த்துக்கொள்ளப்படுவதும், சில மீளிணைக்கப்படுவதும் நடைபெறுவது வழக்கம். இதன் பிரகாரம் இத் திட்டத்திலிருந்து 2002 இல் அகற்றபட்ட ஆர்ஜென்ரீனாவும் 2003 அகற்றப்பட்ட உருகுவேயும் தற்போது மீளிணைக்கப்படுகின்றன. ஏனைய புதிதாக இணைக்கப்படும் நாடுகள்: சிறீலங்கா, தென் ஆபிரிக்கா, கென்யா, ஜமைக்கா, ஹொங் கொங், சேய்ஷில்ஸ், மலாவி மற்றும் ஜோர்ஜியா ஆகும்.
பயங்கரவாத ஒழிப்பைக் காரணம் காட்டி சிறீலங்காவில் இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா முன்வைத்த வேண்டுகோளை சிறீலங்கா ஏற்றுக்கொண்டதற்குக் கைமாறாகவே இச் சலுகை சிறீலங்காவின் குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது.
இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது இந் நாடுகளின் குடிமக்கள் முன் அனுமதி இல்லாமலேயே அமெரிக்காவிற்குள் நுழையலாம் என்பது மட்டுமல்ல தொடர்ந்தும் 180 நாட்கள் வரை தங்கியுமிருக்கலாம். 180 நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதற்கு நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். 180 நாட்கள் தங்கும் அனுமதி சுற்றுலா அல்லது வியாபார நோக்கங்கங்களுக்கான நுழைவாகவும் இருக்கலாம்.
இத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தனது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், மனித அபிவிருத்தி அட்டவணையில் முன்னேற்றம் காணுதல், சிறந்த கடவுச் சீட்டுப் பராமரிப்பு திட்டத்தைக் கொண்டிருத்தல் ஆகிய விடயங்களில் தகமை பெற்றிந்தால் மட்டுமே இச் சலுகையை அந்நாடுகள் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குப் புறப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே பயண அனுமதிக்கான மின்வழி உத்தரவைப் (Electronic System for Travel Authorization (ESTA) online) பெற்றிருக்க வேண்டும்.
இருப்பினும் இரட்டைத் தேசீய உறுப்புரிமை (dual nationality) கொண்ட பின்வரும் நாட்டவர்கள் நுழைவு அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்: சிரியா, ஈராக், ஈரான், சுடான், லிபியா, சோமாலியா, மற்றும் யேமன் போன்றவையே அவை.