சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கப்படும் | ஐ.நா.மனித உரிமைகள் சபை தீர்மானம்

சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கப்படும் | ஐ.நா.மனித உரிமைகள் சபை தீர்மானம்

Spread the love

சிறீலங்கா 2015 இல் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதென ஐ.நா. மனித உரிமைகள் சபை இன்று (மார்ச் 21, 2019) தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. A/HRC/40/L.1 என இலக்கமிடப்பட்ட இத் தீர்மானமானது “நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னெடுத்தல்” என்ற தலைப்பில் பிரகடனப்படுத்தப்படுகிறது. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஏகமனதுடன், வாக்களிப்பு எதுவும் நடத்தாது, இத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றன.

இத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னின்றுழைத்த மத்திய குழுவில் கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, வட மகெடோனியா, பிரித்தானியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

அடிப்படையில் இத் தீர்மானத்துக்கும் முன்னைய 34/1, 30/1 தீர்மானங்களுக்கும் எந்தவித வித்தியாசமுமில்லை. இவ்விரு தீர்மானங்களுக்கமைய சிறீலங்கா சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இராணுவம் கையகப்படுத்திய காணிகளை விடுவித்தல், காணாமற் போனவர்கள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு முடிவுகளை எட்டுதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது மாற்றுதல் போன்றவைகள், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள உள்நாட்டு வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குதல் என்பன  அவற்றுள் சில.

இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறீலங்கா போதியளவு முன்னேற்றங்களைக் காட்டவில்லை என்பது தமிழர் தரப்பின் குற்றச்சாட்டுகளில் ஒன்று. அதனால் இந்த தடவை சிறீலங்காவிற்கு கால அவகாசம் கொடுக்கக் கூடாது என சில தமிழமைப்புக்களும், மாணவரமைப்புக்களும் புலம் பெயர் தமிழமைப்புக்களும் ஐ.நா. சபையில் உள்ளரங்குகளிலும் வெளியரங்குகளிலும் போர்க்குரல்களை எழுப்பின.

ஐ.நா. மனித உரிமை விசாரணைகளிலிருந்து சிறீலங்கா முற்றாக வெளியேற வேண்டும். எங்கள் விவகாரங்களை நாமே பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்ற கோஷங்களோடு மஹிந்த ராஜபக்ச தரப்பினர் சிறீலங்காவில் போர்க்கொடி தூக்கினர்.

இதற்குள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பாஷெலெட் தனது அறிக்கையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறீலங்காவின் மந்தமான போக்கு பற்றியும் கடுமையாகக் கருத்து தெரிவித்திருந்தார்.சிறீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கப்படும் | ஐ.நா.மனித உரிமைகள் சபை தீர்மானம் 1

இப் பின்னணியில் ஐ.நா.வின் தீர்மானம் எப்படி இருக்கப் போகிறது, எப்படி இருக்க வேண்டும் என்பதில் தமிழர் தரப்பில் பலர் பலத்த விவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். சிறீலங்கா அரசைப் பொறுத்தவரையில் மஹிந்த தரப்பின் எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய அதே தருணத்தில் ஐ.நா. வை முற்றாக நிராகரிப்பதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையிட்டும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியிருந்தது.

ஐ.நா. வைப் பொறுத்தவரையில் அதற்கு மூன்று தேர்வுகள் இருந்தன.

  1. முன்னைய தீர்மானங்களைக் காலாவதியாக விட்டு விட்டு சிறீலங்காவின் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தல்.
  2. சிறீலங்காவைத் திருப்திப்படுத்தும் வகையில் முன்னைய தீர்மானங்களைக் கைவிட்டுப் புதிய ஒன்றை உருவாக்குதல்.
  3. முன்னைய தீர்மானங்களில் மாற்றம் செய்யாமல் சிறீலங்காவிற்கு மேலும் கால அவகாசம் கொடுத்தல்.

தேர்வு 1 இன்படி அடுத்த கட்ட நடவடிக்கையாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறீலங்காவைப் பரிந்துரை செய்தல். இதைச் செய்யக்கூடியது ஐ.நா. பாதுகாப்புச் சபை அல்லது ரோம் விதிகள் (2002) ஐ அங்கீகரித்த (121) நாடுகளில் ஒன்று. இவற்றில் அமெரிக்கா, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் எதுவுமே அடங்காது. தமிழருக்கு நட்பான நாடுகள் எதுவும் இல்லாததுடன், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஒத்துழைக்காத நிலைமையில் இது சாத்தியமானதொரு தேர்வாக இருக்க முடியாது.

தேர்வு 2 இன்படி, முன்னைய தீர்மானங்களைச் சிறீலங்காவும் சேர்ந்து இணைந்து நிறைவேற்றியது. அதில் முக்கியமான விடயம் கலப்பு நீதிமன்ற விவகாரம். இது சிறீலங்காவிற்குப் பாதகமானது என்றும் அதனால் இதிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டுமென்றும் தென்னிலங்கை சிங்கள தீவிரவாதிகள் போராடுகிறார்கள். இன் நிலைமையில் புதிய தீர்மானமொன்றில் கலப்பு நீதிமன்ற விடயத்த உள்ளடக்க சிறீலங்கா ஒத்து வராது. எனவே புதிய தீர்மானம் எதுவாயினும் அது நீர்த்துப் போன ஒன்றாகவே இருக்கும்.

தேர்வு 3 இன்படி கடந்த சில மாதங்களாக சிறீலங்காவில் நடைபெற்ற அரசியல் தில்லு முல்லுகளிலிருந்து அரசு மிகவும் சாமர்த்தியமாகத் தப்பியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிறீலங்காவின் சட்ட இயந்திரம், அரசியலமைப்பு ஆகிய ஜனநாயக சாதனங்கள் எதிர்பார்ப்புக்கமைய தொழில்பட்டமை. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி கொஞ்சம் மக்கர் பண்ணியிருந்தாலும் மீதி இரண்டு அங்கங்களும் அரசை நிலை நிறுத்தின. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இவை தொழிற்படவே இல்லை. அத்தோடு காணாமற் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்றையும் 2017 இல் அரசு உருவாக்கியிருந்தது. இதை அவதானித்தது மட்டுமல்ல ஐ.நா. மனித உரிமை ஆணையகம் தனது அறிக்கையிலும் சிலாகித்திருந்தது. வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய சூழல் நாட்டில் இல்லை என்ற அரசின் வாதத்தை ஐ.நா. ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையைக் கடந்த சில மாதங்கள் மட்டுமே தூக்கிக் கொடுத்துவிட்டன. இன் நிலையில் கால அவகாசம் கொடுப்பது மட்டுமே சிறந்தது என்ற முடிவுக்கு ஐ.நா. வந்திருக்கிறது.

தமிழர் தரப்பிலுள்ள தேர்வுகள்

தமிழர் தரப்பில் இரண்டு விதமான எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.  ஒன்று ஐ.நா. வை ஒரு பயமுறுத்தும் சாதனமாகவே பயன்படுத்த வேண்டும். போர்க்குற்ற விசாரணைகள், இனப்படுகொலை போன்றவை ஒரு வகையில் நல்லுணர்வு தரும் (feel good) விடயங்களே தவிர நடைமுறைச் சாத்தியமற்றவை என்பது.

கலப்பு நீதிமன்றம் மூலம் போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்ததது. அதற்கு முக்கிய காரணம் சிறீலங்கா நீதிபதிகளும் இணைந்து ஒரு தீர்ப்பை வழங்கும் போது அதற்கு அந்த நாட்டின் பிரஜைகளான இராணுவத்தினரோ அரசியல்வாதிகளோ கட்டுப்பட்டே ஆகவேண்டும். மாறாக தனியே வெளி நாட்டு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த சிறீலங்கா அரசு மறுக்கலாம். இக் காரணங்களுக்காக கலப்பு நீதிமன்றம் ஒன்று தேவை என்பதை ஐ.நா. வலியுறுத்தியிருந்தது.

அத்தோடு, ஐ.நா. ஆணையரின் அறிக்கை இன்னுமொரு பரிந்துரையையும் செய்திருக்கிறது. அதாவது ‘சர்வதேச நீதிபரிபாலன தத்துவம்’ ( principle of universal jurisdiction) என்பதுதான் அது. ஒரு நாட்டில் நீதிபரிபாலனம் செவ்வனே செயற்படுகிறது என அந்நாடு கூறுமானால் அந்நாட்டின் நீதிமன்றங்களிலேயே அங்கு போர்க்குற்றம் புரிந்தவர்களை சர்வதேச சட்ட நியமங்களுக்கமைய (உள் நாட்டுச் சட்ட வரையறைகளுக்கு அமையவல்ல) விசாரணை செய்ய வேண்டும்.

மேற்கண்ட இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றிற்கு சிறிலங்கா இணங்கினாலே போதும். மாற்றமடையாத இன்றய ஐ.நா.வின் தீர்மானமும் ஆணையரின் அறிக்கையும் இரண்டு பொறிகளை வைத்திருக்கின்றன. அவகாசம் கொடுப்பது கருவாடு வைப்பது எனவே பார்க்கப்பட வேண்டும்.

இன்றய சூழலில் தமிழருக்கு இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் சர்வதேச அழுத்தம் மட்டுமே. எந்தவொரு சக்தி வாய்ந்த நாடோ அல்லது எந்தவொரு சக்தி வாய்ந்த அயல் நாடோ தமிழருக்கு ஆதரவாக இல்லாத நிலையில் ஐ.நா. ஒன்றே நாம் பாவிக்கக் கூடிய சிற்றாயுதம். ராஜபக்ச ஆட்சியில் ஐரோப்பா ஜி.எஸ்.பி. வரிச் சலுகையைத் தளர்த்தியதால் சிறீலங்கா பொருளாதாரம் சிதைந்தது. ரணில் சர்வதேச வர்த்தகத்தை நம்பி வாழ்பவர். எனவே சர்வதேச அழுத்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய தருணம் ரணிலின் ஆட்சிக் காலமே. போர்க்குற்ற விசாரணைகள் என்ற அழுத்தத்தின் விளைவு தமிழருக்குச் சாதகமானதொரு அரசியல் தீர்வானால் அதை ஏற்றுக்கொள்ளத் தமிழர் தரப்பு தயாராக இருக்கிறது.

இரண்டாவது எண்ணத்தைக் கொண்ட தமிழர்களும் இருக்கிறார்கள். ரணிலை நம்ப முடியாது. சிங்களவர்களை நம்ப முடியாது. சர்வதேச தலையீடு ஒன்றின் மூலமே தமிழரது சுயாட்சியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது. அதன் வடிவம் ஆகக் குறைந்தது சமஷ்டி ஆட்சியாகத்தான் இருக்க வேண்டுமென்பது. முடிவு தமிழருக்குப் பெருவிருப்புடையதானாலும் சர்வதேச தலியீட்டுக்குரிய தருணம், அது எந்த வடிவத்திலிருந்தாலும், இப்போதைக்குச் சாத்தியமானதொன்றல்ல. சிங்களவர்களை நம்ப முடியாது என்பது தெரியாமலில்லை. தமிழர் தரப்பு சர்வதேசத்திடமே நீதி கோருகிறது. சர்வதேசத்தின் அழுத்தம் தான் அரசிலமைப்பை மாற்ற அழுத்தம் கொடுக்கிறது. சர்வதேசத்தின் அழுத்தம் தான் தமிழர்களின் நிலங்களை விடுவித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அழுத்தம் தான் இன்று அரசுக்குக் கால அவகாசத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது.

தமிழர்களது போராட்ட களம் ஐ.நா. மட்டும் தான். மற்றதெல்லாம் பயிற்சிக் களங்களே.

சிவதாசன்

மார்ச் 21, 2019

 

Print Friendly, PDF & Email