ArticlesSri Lankaசிவதாசன்

சிறீசேன இழுத்த ஆப்பு

தெற்கில் வேதாளம் மீண்டுமொரு தடவை முருக்க மரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. இறங்குவதற்கு நாளாகலாம். அரசர் மைத்திரிபால சிறிசேன தன் நல்லாட்சி உடைகளைக் கழற்றிக் கொண்டு தன் இயல்பு வாழ்வுக்குத் திரும்பியிருக்கிறார். சுழற்சி அரசியலில் மாற்றமில்லை.

வழக்கம் போல ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் தமிழர் தரப்பு விடப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் காரணமல்ல. ஆனாலும் ‘கை பட்டால் குற்றம், கால் பட்டாலும் குற்றம்’ என்ற நிரந்தர கண்டத்திலிருந்து அவர்கள் வெளியே வரவே முடியாது. நான் சொல்லும் ‘தமிழர் தரப்பு’ தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் வாதிகளை.

தெற்கில் சிறீசேன ஆரம்பித்து வைத்திருக்கும் இந்த அரசியல் சதி நாட்டின் சகல மக்களுக்கும் தீங்கானது. அதிலும் தமிழ் மக்களது எதிர்காலத்தை மிகவும் பாதிக்கக் கூடியது.

இன்றய நிலையில் 16 ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லதொரு பேரம் பேசும் நிலயில் உள்ளதாகப் பலரும் நினைக்கலாம். மாறாக அவர்களைச் சிறீசேனா ஒரு திரிசங்கு நிலைக்குத் தள்ளியுள்ளார் எனவே நான் பார்க்கிறேன்.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் அடிப்படையில் இனவாதக் கோட்டிலேயே தம்மை நகர்த்துபவர்கள். பண்டா- செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்த பண்டாரநாயக்காவாக இருந்தாலும்சரி, கண்டி யாத்திரை சென்ற ஜே.ஆர். ஜயவர்த்தனாவாக இருந்தாலும்சரி, 2002 அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றவிடாது வெளி நடப்புச் செய்த ரணில் விக்கிரமசிங்கவாகவிருந்தாலுஞ்சரி இனவாத அழுத்தங்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்தவர்கள். அவர்களின் வழிவந்த, அவர்களின் அரசியல் பள்ளிகளில் கல்வி கற்ற இன்றய தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் வித்தியாசமான, மிதமான பண்புகளை எதிர்பார்க்க முடியாது. இனவாத அழுத்தங்கள் பின்னணியில் இருக்கும்வரை இப் பரம்பரையியல்புகள் வெளித்தோன்றியவாறே இருக்கும். சிறிசேனாவின் தற்போதைய நடவடிக்கையும் இப்படியான ஒன்றுதான்.

தமிழர் தரப்பு தமது 16 ஆசனங்களையும் வைத்துக்கொண்டு இரண்டில் ஒரு பகுதிக்கு வாக்களித்து புதிய பிரதமரின் கீழ் ஆட்சியைத் தொடரச் செய்யலாம். இரண்டு பகுதியினரிடமிருந்தும் சில வாக்குறுதிகளைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்வதன் மூலம் இதர சிறுபான்மைக் கட்சிகளைப் போல தமிழர் தரப்பும் சில நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனச் சிலர் கருதுகிறார்கள்.

இதர சிறுபான்மைக் கட்சிகளுக்கும் கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் பாரிய வேறுபாடுண்டு. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுத்துத் தரவேண்டும் என்ற பாரிய சுமையைக் கூட்டமைப்பு தோளில் சுமந்து கொண்டு திரிகிறது. இதர சிறுபான்மைக் கட்சிகள் அபிவிருத்தி அரசியல் என்ற பெயரில் பெரும்பாலும் அரசியலையும் அவ்வப்போது அபிவிருத்தியையும் செய்துவருகின்றார்கள். அபிவிருத்தி என்ற பெயரில் அமைச்சுப் பதவிகளே பெரும்பாலும் பேரம் பேசப்படும்.

கூட்டமைப்பு அரசியல் தீர்வை மட்டுமே பேரம் பேசலாம். அவர்களிடமிருப்பது ஆயிரம் கோரிக்கைகள். போர்க் குற்றம், ஐ.நா. விதந்துரைகளை நிறைவேற்றுதல், கைதிகளை விடுவித்தல், காணிகளை விடுவித்தல், அத்து மீறிய குடியேற்றம் என்று பல. கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்று இவற்றில் சிலவற்றையாவது நிறைவேற்ற வேண்டும் என்பவர் சிலரும், போர்க்குற்றவாளிகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டுமெனக் கூச்சலிடும் (பெரும்பாலும் புலம் பெயர்ந்தோர்) சிலரும் மேலும் சுமைகளைக் கூட்டமைப்பின் தோள்களில் ஏற்றி வைத்துக் கூச்சலிடுகின்றார்கள். ஏனைய சிறுபான்மைக் கட்சிகள் தமிழரை வைத்து அரசியல் செய்தாலும் அவர்களிடம் இப்படியான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படுவதில்லை. காரணம் கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் ஏக போக பிரதிநிதிகள்.

இன் நிலையில் கூட்டமைப்பினருக்கு இரண்டு தேர்வுகளுண்டு.  தமது பேரப் பேச்சில் முக்கியமாக, தொங்கிக் கொண்டிருக்கும் அரசியலமைப்பு மாற்றத்தை நிறைவேற்ற மஹிந்த / ரணில் தரப்புகளை வற்புறுத்துவது. அல்லது அமைச்சு பதவிகளை ஏற்று அபிவிருத்திகளைத் தொடர்வது.  ஐ.நா. விதந்துரைகளை அமுல் செய்யும்படியும், போர்க் குற்றவாளிகளை விசாரணை செய்ய வேண்டுமெனவும் இரு தரப்பினரையும் வற்புறுத்த வேண்டுமென்ற அழுத்தம் பல தமிழர் தரப்புகளிலுமிருந்தும் (குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து) வந்தாலும் அது தற்போதய சூழ் நிலையில் அது எதிர்வினையாற்றும் நிகழ்வாகவே மாறும்.

இன்றய நிலையில், ரணிலின் அரசு ஆசன எண்ணிக்கையில் பலமுள்ளதாகத் தெரிந்தாலும் அது ஒரு அட்டைக் கோபுரம் தான். மஹிந்த, சிறீசேன, மகா சங்க, சீன கூட்டணியின் தாக்குதலுக்கு அது ஈடுகொடுக்க முடியாது. சிங்கள மக்களுக்கு இந்தியா ஒரு நிரந்தர எதிரி.  இந்தியா எந்த வடிவங்களில் வியூகம் அமைத்தாலும் சிறீலங்கா கொள்கை வகுப்பாளர்கள் எப்போதுமே ஒரு படி மேலாகத்தான் இருந்து வந்துள்ளார்கள். இந்த தடவையும் அப்படித்தான். அமெரிக்காவின் எடுபிடியாக மட்டுமே இந்தியா தன் விருப்புகளைத் திணிக்க முடியும்.

நல்லாட்சியில் நாடு அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ ஸ்திரமடையவில்லை. பசித்தாலும் பொறுத்திருந்த சிங்கள மக்களுக்கு அரசியல்வாதிகள் பசியை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறார்கள். இனவாதிகளும் கலகமொன்றுக்காகக் காத்திருக்கின்றார்கள். மீண்டும் சிங்கள அரசியல் போட்டிகளில் தமிழர் பலியிடப்படப் போகிறார்கள். பழி இலகுவாகத் தமிழ்த் தலைமைகளில் தான் போடப்படப்போகிறது.

இன்று தமிழர் பகுதிகளில் மஹிந்தவின் வெற்றி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மஹிந்தவின் வரவினால் தமிழர் வாழ்வில் வசந்தம் வீசப் போவதாக கருணா, டக்ள்ஸ் போன்றோர் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். அஹிம்சைப் போராட்டமும், ஆயுதப் போராட்டமும் பெற்றுத் தரமுடியாத தீர்வை இணக்க அரசியல் மூலம் பெறுவதற்காக முயற்சிப்போம் என ஒரு தரப்பு முன்வரும்போது அவர்கள் பின்னால் மக்கள் அணிதிரள மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. புலிகளின் கட்டுப்பாடில் அழுது கொட்டியவர்கள் பலர் பின்னர் புலிகளிருந்தால் பரவாயில்லை என்றார்கள். உணர்வுகளுக்கும் பருவ காலங்களுண்டு. எனவே எதுவும் நடக்கலாம்.

திரு. சம்பந்தன் என்ற ஒற்றை நூலில் தான் கூட்டமைப்பு தொங்கிக் கொண்டிருக்கிறது. அது ஒன்றுதான் மக்கள் பலத்தோடு இருந்த கட்சி. அது தமிழர்களினாலேயே உடைக்கப்பட்டுவிடும். சர்வதேச அரங்கில் தமிழருக்காகப் பேச வல்லவர்கள், மதிப்பைப் பெற்றுத் தரக்கூடியவர்கள் என்ற வகையில் எதிர்கால நட்சத்திரங்கள் என்று எவரும் உருவாகவில்லை.

அரசியல் சாசனத் திருத்தம் நிச்சயம் அமுல் செய்யப்படும் என்று கூட்டமைப்பு திடமாக நம்பியிருந்தது. அந்த நம்பிக்கையையைக் கொடுத்ததும் சிறீசேன, கெடுத்ததும் சிறீசேன. சர்வதேச அழுத்தத்தின் பிரஹாரம் அது நிறைவேறும் எனத் திரு.சம்பந்தன் நம்பியிருந்தார். இறுதியில் சிறீசேன இனவாதிகளின் முகாமிற்குள் அடைக்கலம் பெற்றுவிட்டார். இதே முகாமிற்குள் கூட்டமைப்பும் போனால் தமிழ்ப் படுகொலையாளிகளுடன் விருந்துண்ணப் போய்விட்டது கூட்டமைப்பு மீது விமர்சனம் வைக்கப்படலாம். ரணில் சர்வதேச நியமங்களுக்குப் பயிற்றப்பட்டவர். பயப்படுபவர். கூட்டமைப்பின் நடைபாதைகளும் சர்வதேசங்களால் தீர்மானிக்கப்பட்டவையே. அவர்களுக்கு வேறு வழிகளில்லை. ரணிலின் கட்சிக்கு முண்டு கொடுத்தால் சிங்கள இனவாதிகளை ஒன்று சேர்த்து மகிந்தவின் பெரும்பான்மை ஆட்சியை ஏற்படுத்தக் காரணாமாக அமைந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு கூட்டமைப்பு உட்படுத்தப்படலாம்.

சிறீசேன இழுத்த ஆப்புக்கு கூட்டமைப்பு மாட்டுப்பட்ட நிலைமை தான். அமெரிக்கா தன் பெரிய ஆப்பைச் செருகினாலே தவிர … நிலைமை கவலைக்கிடம் தான்.