சிறீசேனாவின் மாற்றுத்திட்டம்: ராஜபக்சவுக்கும் முதுகில் குத்து?

மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கும் முயற்சி பலனளிக்காமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும் பட்சத்தில் விக்கிரமசிங்கவை ஓரம் கட்டுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன தனது சதியின் மாற்றுத் திட்டம் ஒன்றைத் தயார்படுத்தி வைத்திருப்பதாக கொலொம்பொ ரெலிகிறாப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

விக்கிரமசிங்க இல்லாத புதிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் மூலம் தன் விருப்பத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என சிறீசேன இப் புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். ஐ.தே. கட்சியைச் சேர்ந்த றாஜித சேனாறட்னவும் ஜோன் அமரதுங்கவும் சிறீசேனவுடன் இது குறித்து உடன்பாடொன்றை மேற்கொள்வதற்கு முயற்சித்ததாக அப் பத்திரிகை தெரிவிக்கிறது.

மஹிந்த ராஜபக்சவைப் புறந்தள்ளிவிட்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் ஐ.தே.க. வும் சேர்ந்து துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவைப் பிரதமாராகக் கொண்டு புதிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறீசேன இணங்கியிருப்பதாகவும் ரெலிகிராப் மேலும் தெரிவிக்கிறது.

சிறீசேனவுடனான சந்திப்பைத் தொடர்ந்து சேனாரட்ன – அமரதுங்க அணி விக்கிரமசிங்கவையும் சந்தித்து தற்போதய இழுபறி நிலையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தியாதாகவும் அறியக் கிடக்கிறது.

விக்கிரமசிங்க தவிர்த்த புதிய அரசாங்கம் உருவாகும் பட்சத்தில் மகிந்த ராஜபக்ச தனது ‘பிரதம்ர்’ பதவியை இழக்க வேண்டியோ அல்லது வேறு ஏதாவது அமைச்சுகளைக் கையேற்க வேண்டியோ வரலாம் எனக் கருதப்படுகிறது.

எப்படியாயினும் தனது திட்டங்களில் எதுவொன்றாவது நிறைவேறும் நிலைமை வரும் வரைக்கும் சிறீசேன பாராளுமன்றத்தைப் பதினான்காம் திகதி வரையில் கூட்டுவதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை என்றே தெரிகிறது.