Spread the love
புலம்பெயர் தமிழ் அமைப்புகள்

கொரோனாவைரஸ் ஆரவாரங்களுக்குள், மனித உரிமைகள் மீதான சிறிலங்காவின் சுய தனிமைப்படுத்தல் கவனிப்பாரற்றுப் போகிறது எனவும், பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச பரிகாரமே தேவைப்படுகிறது,சர்வதேச பொறிமுறை உடனடியாகத் தேவை எனவும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலிய தமிழர் பேரவை (Australian Tamil Congress (ATC)), பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamils Forum (BTF)), கனடிய தமிழர் பேரவை (Canadian Tamil Congress (CTC)), ஐரிஷ் தமிழர் பேரவை (Irish Tamils Forum (ITF), ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு அமைப்பு (United States Tamil Action Group (USTAG)) ஆகிய அமைப்புகள் ஜெனிவாவில் இருந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும், பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதிலும், இதனால் ஏற்பட்ட சமூக பொருளாதார இழப்புகளை நிவர்த்தி செய்வதிலும் உலகளாவிய ரீதியில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எமது முழுமையான ஆதரவைத் தருகிறோம்” எனது தெரிவித்துள்ளன.

அதே வேளை, மார்ச் 13 ம் திகதி சடுதியாக நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43 வது அமர்வின்போது, தமிழர் தரப்புக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமான, பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைக் கிஞ்சித்தும் மதிக்காத சிறிலங்காவைப் பற்றி சர்வதேச சமூகம் நன்கு அறிந்துகொண்டுள்ளது.பெப்ரவரி 26 அன்று, சிறிலங்கா வெளியிட்ட இழிவான அறிக்கையின் மூலம், 2015 இல் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 ஐயோ , அல்லது, சீர்திருத்தத்தையும், இடைக்கால நீதி வழங்கலையும் ஊக்குவிக்கும் அதன் தொடர்ச்சியான தீர்மானங்கள், 34/1 மற்றும் 40/1 ஆகியவற்றையோ நிறைவேற்றவேண்டிய கடமை தமக்கில்லை எனத் தெரிவித்திருந்தது. இவ்வறிவிப்பு தமிழருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை என்பதோடு, சிறிலங்காவின் ஏமாற்று வேலை, இழுத்தடிப்பு பற்றி நாம் சர்வதேசத்துக்கு முன்கூட்டியே எச்சரித்துமிருந்தோம்.


1948 இல் பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் சுதேசிய தமிழ் மக்கள், அடிப்படை மனித உரிமைகளுக்காகவும், தமது பாரம்பரிய பிரதேசங்களைப் பாதுகாக்கவெனத் தமிழ்த் தலைவர்களும், பெளத்த சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களும் மேற்கொண்ட உடன்படிக்கைகளும், ஒப்பந்தங்களும் முறிக்கப்பட்டதனால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

ஐ.நா.மனித உரிமை சபையின் உறுப்பினர்கள், அதன் நற்பெயரைக் களங்கப்படுத்தும் செயலை அனுமதிக்கக் கூடாது. 2015 இல் வெளியிடப்பட்ட மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை (OISL) உறுதிப்படுத்தியுள்ளதற்கமைய, 2009 போரின்போது சிறிலங்கா அரசின் பாதுகாப்புப் படைகள் தமிழ்ச் சமூகத்தின் மீது மேற்கொண்ட மனித உரிமை மீறல்களிலிருந்து, ஐ.நா. (R2P) பாதுகாக்கத் தவறியமை (சார்ள்ஸ் பெட்றி அறிக்கை இதுபற்றி விளக்கமாகக் கூறுகிறது) குறித்தும் போரின் பின்னான அரசின் நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா. சபை ஒரு விரிவான மீளாய்வாய்ச் செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

Related:  வட-கிழக்கில் வீட்டுத் தோட்டம் | செல்வின் இரெனூஸுடன் ஒரு உரையாடல்


போரின்போதும், அதன் பின்னரும், சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான வெகுசன அட்டூழியங்கள் குறித்து சிறிலங்காவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமொன்றைத் தமது அதிகார வரம்புக்குட்பட்ட வகையில், சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகள் செய்யவேண்டுமென நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் உள்ளக நல்லிணக்க, பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் அனைத்தும் தோல்வியியையே தழுவின என்பதைச் சுட்டிக்காட்டி, சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International ), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch ) உட்பட்ட எட்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சிறிலங்கா மீதான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு, 43 வது அமர்வின்போது (பெப்ரவரி 20, 2020), ஐ.நா. சபையைக் கேட்டுக்கொண்டிருந்தன. சர்வதேச நீதிமான்களின் ஆணையமும் (The International Commission of Jurists ) பெப்ரவரி 28, 2020 அன்று ஐ.நா. சபையில் வைத்து விடுத்த அறிக்கையில், ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னர் நிறுத்துவது, ஐ.நா சபையினால், வேறு ஒரு சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துவது அல்லது இதர நாடுகளின் சர்வதேச அதிகார நியமங்களை பிரயோகிப்பது ஆகியவையே சிறிலங்காவில், சர்வதேச சட்டங்களுக்கமைந்த, நம்பத்தகுந்ததும், நிரந்தரமானதுமான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எமக்கு இப்போதுள்ள தேர்வுகள்’ எனத் தெரிவித்துள்ளது.

றொஹிங்கியா மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பாக மியன்மார் மீது சமீப காலங்களில் இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமையை நாம் கண்டுள்ளோம். ராஜபக்சக்களின் கடந்தகாலச் செயற்பாடுகளும், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னான, அரச நிர்வாகத்தின் துரிதமான இராணுவமயமாக்கலும், சிறிலங்கா ஒரு சர்வாதிகார நாடாக மாறுவதற்கான முன்னறிவுப்புகளாகத் தெரிகின்றன. இக் காரணங்களினால், ஏற்கெனவே இருக்கக்கூடிய (போர்க்குற்ற) ஆதாரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு, சர்வதேச சமூகம் முதற்படியாக, ஒரு குறிப்பிட்ட சர்வதேசப் பொறிமுறையொன்றை மிக விரைவில் உருவாக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

சிறிலங்கா தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பத்து வருடங்களுக்கு மேலாகக் கால அவகாசத்தை, சர்வதேசம் வழங்கியிருந்தும் கூட அதனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. சிறிலங்கா அரசாங்கமும் அதன் நீதிமன்றங்களும் நடைபெற்ற குற்றங்களின் தீவிரத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவைகளாகவே காட்டி நிற்கின்றன. குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்காமல், அரசாங்கத்திலும், குடிமை நிர்வாகத்திலும் உயர் பதவிகளை வெகுமதிகளாக வழங்கும் அதே வேளை, பாதிக்கப்பட்ட, உயிர் தப்பிய தமிழ் மக்களும் அவர்களது உறவினர்களும் தொடர்ந்து துயரத்தில் வாடி வருகிறார்கள்.

உலகம் அவர்களை இன்னுமொரு தடவை கைவிட முடியாது எனப் புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email