Sri Lanka

சிறிதரன் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரானார்

நேற்று (21) திருமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கட்சித் தலைவர் தேர்தலுக்கான இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பா.உ. சிறிதரன் சிவஞானம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் 75 வருட கால வரலாற்றில் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும். கட்சியின் தற்போதைய தலைவர் திரு மாவை சேனாதிராஜா பதஹ்வி விலகுவதைத் தொடர்ந்து புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.

இத் தேரதலில் த.தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. ஏப்பிரஹாம் சுமந்திரன், திரு. சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பா.உ. ஆகிய திரு சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் தலைமைப் பதவிக்காகப் போட்டியிட்டிருந்தனர். இறுதியில் போட்டியிலிருந்து விலகாமலேயே திரு யோகேஸ்வரன் தனது ஆதரவைச் சிறீதரனுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார். இப்போட்டியைத் தவிர்க்க, கட்சியின் பாரம்பரிய நடைமுறையான ‘போட்டியின்றித் தலைவரைத் தெரிவதற்கான’ முயற்சிகளில் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் உட்படப் பலரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனராயினும் அவை எதுவும் பலன்தரவில்லை. ஆனாலும் இரண்டு பேருக்கு மேல் போட்டியிடும்போது தேர்தல் நடத்தப்படவேண்டுமென்பது கட்சியின் யாப்பில் இருக்கிறது.

சிவஞானம் சிறீதரன் 2010 இல் முதன் முதலில் யாழ் மாவட்டத்திலிருந்து தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2015, 2020 தேர்தல்களிலும் அவர் தொடர்ந்து தெரிவாகினார்.

இத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கட்சியின் 43 மத்திய குழு உறுப்பினர்களும், 285 மாவட்ட செயற்பாட்டாளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள்.

தேர்தலுக்கு முன் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதர போட்டியாளர் திரு யோகேஸ்வரன் சகிதம் உரையாற்றும்போது “நிலத்திலும் புலத்திலும் வாழும் தமிழர்களிடையேயான இடைவெளியை நீக்குவதற்காகத் தான் உழ்ழிக்கப்போவதாக” திரு சிறீதரன் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் முன் பேசும்போது “நான் தலைவர் சிறீதரனின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் பணியாற்றிக் கட்சியின் குறிக்கோள்களை நிறைவேற்ற உழைப்பேன்” எனச் சூளுரைத்தார்.

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றத் தலைவராகப் பணியாற்றுவார்.