Satire | கடி-காரம்கிருஷ்ணானந்தா

சிரி லங்கா (1): சோழியன் குடுமி


கிசு கிசு கிருஷ்ணானந்தா

“எண்டாலும், இவன் பெடியன் கஜேந்திரனை இப்பிடி நடத்தியிருக்கக்கூடாது பொலிசு” என்றபடி பக்கத்தில் வந்து அமர்ந்தார் வடிவேலர். என்னைக் கண்டவுடன் அவருக்கு அரசியல் பொத்துக்கொண்டு வந்துவிடும். பாத்தனியே அந்த வீடியோவை என்றபடி இடுப்பில் செருகியிருந்த ஐஃபோன் 11 ஐ வெளியில் இழுத்தார்.

” ம் பறுவாயில்லை, ஐயா எல்லாத்திலும் அப்ருடேற் தான்”. அவரது பொக்குவாயை ‘நைக்கி’ முகக்கவசம் மறைத்திருந்தது. விறு விறுவென்று ஒரு பள்ளிக்கூடப் பையனின் வேகத்தில் உருட்டி அந்த வீடியயோவைக் காண்பித்தார். எம்.பி. கஜேந்திரனைப் பொலிசார் கையாண்ட விதம் அருவருப்பாகத் தானிருந்தது. “பரதேசியள் திருந்த மாட்டாங்கள்” எண்டு பெருமூச்சு விட்டார்.

“இவரும் விட்டது பிழைதானே” என்றுவிட்டு வடிவேலரைப் பார்த்தேன். அவரை நோண்டினால் இன்னும் நிறைய விடயங்கள் வெளியே வரும் என்ற நம்பிக்கை.

“என்ன பிழை? தியாகி திலீபனுக்கு விளக்குக் கொழுத்தியது பிழையே?”

“இல்லை ஐயா. எல்லாம் ரைமிங் ஐயா. அங்க நியூயோர்க்கில தங்கட தலைவருக்கு எதிராகக் கொடிபிடிக்கிறாங்கள் எண்ட ஆத்திரத்தில இருந்தவங்கள். இதை ஒரு பழிக்குப்பழியாகச் செய்திருப்பாங்கள். பொதுமுடக்க விதியை மீறினார் எண்டு கைது செய்திருக்கிறாங்கள். என்ன இருந்தாலும் அவர் ஒரு எம்.பி. எல்லே. சட்டத்தை மீறலாமா”

“இந்தப் பெடியனும் சும்மா ஆளில்லை. இப்ப இந்த வீடியோவை எல்லாரும் ஐ.நா.வுக்கு அனுப்பியிருப்பினம். பாரும் அவங்கள் இப்ப என்ன செய்யப்போறாங்கள் எண்டு”

“ஐயா, ஐ.நா. அமெரிக்காவின்ர பொம்மை. எங்கட பசில் பிரதரை அவங்கள் கூப்பிட்டு நல்லா ஓதி அனுப்பினவங்கள். வந்ததும் வராததுமா திருகோணமலையில 30 ஏக்கர் காணியும், இப்ப மின்சாரக் கொம்பனியில் 40% த்தையும் அமெரிக்காவுக்கு வித்துவிட்டார் பசில் பிரதர். அங்கால அம்பாந்தோட்டையை ரணில் சீனாவுக்கு வித்துவிட்டார். 2009 இல நாங்க கத்திக்குளறேக்க அமெரிக்கா அவங்கட பக்கம் தான் நிண்டது. எனவே ஐ.நா. வந்து புடுங்கிக் கொட்டப்போகுது எண்டு கனவு காணாதேங்கோ”

“அது சரி இந்த மன்னார்க் கடல் பிராந்தியத்தில எரிவாயு வளம் இருக்குதெண்டும் அதில அமெரிக்காவுக்கு ஒரு கண் எண்டும் ஒரு கதை. அதைப் பற்றி என்ன நினைக்கிற?”

“மன்னார்க் கடலில சமீபகாலமாக இந்திய நிறுவனங்கள் ஆய்வுகளைச் செய்தவை. அப்ப அவை பாவிச்ச ‘சோனார்’ கருவிகளால தான் பல கடல் மிருகங்கள் செத்ததும் சாகாததுமாக் கரையொதுங்கினவை எண்டு ஒரு சூழல் செயற்பாட்டாளர் சொல்லியிருந்தவர். சோனார் எண்டது சத்த அலைகளைப் பாவித்து நிலத்தின் கீழுள்ள படிமங்களை அறியும் ஒரு கருவி. இச்சத்தம் திமிங்கிலம், டொல்பின், ஆமை போன்ற மிருகங்களை நிலைகுலையச் செய்துவிடுகிறது என அந்த சூழல் செயற்பாட்டாளர் குற்றம் சாட்டியிருந்தவர். இவங்கள் எரிஞ்ச கப்பலில இருந்து வந்த நச்சுப் பதார்த்தங்களினாலதான் அம் மிருகங்கள் இறந்துபோனதாகக் கதையைத் திருப்பி விட்டிட்டாங்கள் என அச்செயற்பாட்டாளர் சொல்லியிருக்கிறார். எது உண்மையோ தெரியாது ஆனால் இப்பதான் மன்னார்க் கடலில கிட்டத்தட்ட 300 பில்லியன் பெறுமதியான எரிவாயுப் படிமங்கள் இருக்குதெண்டு எரிபொருள் அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில எல்.என்.ஜி. நிறுவனத்தின்ர 40% வீதத்தை அமெரிக்கா வாங்கியிருக்குது. சீனாவுக்கும் இதில ஒரு கண் இருந்தது அதனால் தான் இந்தியா அமெரிக்காவை இதுக்குள்ள இறக்கியிருக்குது எண்டும் சொல்லப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக எலாம் வெளிச்சத்துக்கு வரும்தானே”



“அட இப்பிடியெல்லாம் நடக்குதே?. சோழியன் குடுமி சும்மா ஆடாது தானே. அப்ப தமிழரின்ர கதை அம்போ தானா?”

“தமிழரைக் கடவுள் தான் காப்பாத்த வேணும் எண்டு அந்தாள் சொந்நது சும்மா இல்லை. அவர் சொன்ன கடவுள் இயற்கை தான்” அதுசரி கனடாவிலை மகன் எப்பிடி இருக்கிறார்?”

“ஓ…அவன் அங்க சரியான பிசி. அங்க இப்ப எலக்சன் நடந்த்தெல்லே. அவன் ஸ்காபரோவில கரி ஆனந்தசங்கரிக்கு வேலை செய்தவன். அவர் 64% வாக்குகளால வெண்டிருக்கிறேர். இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவேணும் எண்டு புழுகினான்”

“நல்லது தானே. ஐயாத்துரையரும் தெரிவிழாவிலை வந்து கம்பு சுத்திப்போட்டுப் போய் எங்களை ஏமாத்தேலாது. இந்தமுறை அவர் ஏதாவது செய்வாரெண்டுதான் நானும் எதிர்பார்க்கிறன்”.

“சரி வீட்ட இருந்து ரெக்ஸ்ட் வந்திட்டுது. மனிசி காகிள்ஸ்சில ‘சிக்கிண் லெக்ஸ்’ வாங்கிக்கொண்டுவரச்சொன்னது. சரி வாறன்.” வடிவேலர் தனது மோட்டர் சைக்கிளில் ஆஸ்பத்திரி வீதியால் பறந்தார்.