Satire | கடி-காரம்கிருஷ்ணானந்தா

சிரி லங்கா (6) : மீரிஹன சம்பவங்கள் மஹிந்தரின் பங்கு என்ன?

கிசு கிசு கிருஷ்ணாநந்தா

“என்ன வடிவேலர் இண்டைக்கு கென்ரக்கி சிக்கிண் சாப்பாடு போல. மகன் கனடாவில இருந்து காசு அனுப்பினவரோ. ரூபா விழுந்ததோட சில கனடியச் சனம் பிளேன் எடுத்து வந்து நேரடியாகக் காசைக் கொண்டுவந்து யாழ்ப்பாணத்தில குடுத்திட்டுப் போகுதுகள்” இடக்கு மடக்காக அகப்பட்டுக் கொண்ட வடிவேலர் நெளிந்தார்.

“இல்லையடாம்பி நான் இப்ப கென்ரக்கி டிலிவரி செய்யிறன். முந்தி மோட்டர் சைக்கிளிலை செய்தவங்கள் எல்லாம் பெற்றோல் இல்லாதத்தில விட்டிட்டு ஓடிட்டாங்கள். இப்ப பழைய சைக்கிள்களை வைச்சிருக்கிற எங்களுக்குத்தான் வாய்ப்பு. அதுசரி என்ன கொழும்பு எல்லாம் அல்லோல கல்லோலப் படுகுது. கோட்டருக்கு காலம் நெருங்கீட்டுது போல?”

“ஓம் இப்ப மந்திரிசபை ஒட்டுமொத்தமா றிசைன் பண்ணிப் போட்டுது. எனக்கெண்டா இதெல்லாம் அவங்களின்ர நாடகமெண்டுதான் நினைக்கச் சொல்லுது”.

“அப்ப இடைக்கால அரசாங்கம், காபந்து அரசாங்கம் எண்டெல்லாம் வாற கதை?”

“அது ஒரு கால அவகாசம் வாங்கிறதுக்கான ஒரு பம்மாத்து வேலை தான். இதில மஹிந்தர் தன்ர பதவி விலகல் கடிதத்தைக் குடுத்ததாகவும் அதை கோட்டர் எடுக்கவில்லை எண்டும் ஒரு கதை ஓடுதெல்லோ? அது மஹிந்தவின்ர ஐடியா தான். உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, மஹிந்த குசினிக்கும் பசிலருக்குமிடையில பல வருசங்களா ஒரு பனிப் போர் ஓடிக்கொண்டிருக்கு. குசினிக்கோ மகனைப் பிரதமர் ஆக்க விருப்பம். பொடியன் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளையெண்டாலும் தகப்பன் மாதிரி இனிக்கக் கதைக்கப் பழகிவிட்டான். அது வேற. ஆனா இந்த பொருளாதாரப் பிரச்சினையைக் காட்டி ஒதுக்கப்பட்டிருந்த பசிலருக்கு நிதி மந்திரிப் பதவியைக் குடுத்து, நாட்டை நிமித்திறதுக்கு கோட்டர் ஒரு சந்தர்ப்பத்தைக் குடுத்தார். அதுக்கு அவர் இந்தியா, அமெரிக்கா பக்கம் சாரவேண்டி ஏற்பட்டுது. இது வீரவன்ச போல தீவிரவாதிகளுக்கும், சீனாவினால் வாங்கப்பட்ட தொழிற்சங்கவாதிகளுக்கும் பிடிக்கேல்லை. பின் கதவால அவங்கள் எல்லாரும் மஹிந்தவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கினம். எனவே பசிலரைத் தடுக்குப் போட்டு விழுத்திறதில இவை எல்லோருக்குள்ளயும் ஒரு ஒற்றுமை இருக்கு. பாத்தீங்களெண்டா, இந்த ‘பவர் கட்’ எண்டிற விசயத்தை முற்றாகத் தீர்மானிக்கிற ஆட்கள் இலங்கை மின்சாரசபைத் தொழிற்சங்கங்கள் தான். அவங்கள் அப்பவே நுரைச்சோலை மின்நிலையத்தில சில தடங்கல்களை ஏற்படுத்திப் பிடிபட்டவங்கள். என்னதான் பெற்றோல், டீசலை இந்தியா குடுத்தாலும் இந்த ‘இந்திய எதிர்ப்பு’ சக்திகள் ஒருபோதும் இந்திய உதவியை அனுசரித்து அதுக்கு நன்றியாக இருக்கப் போவதில்லை. எனவே அப்பாவி மக்கள் மீது கஷ்டங்களை ஏற்படுத்தி கோட்டர்-பசிலரின் திட்டத்தை இப்ப அவங்கள் முறியடிச்சுப் போட்டாங்கள். பாருங்கோ இந்த ‘பதவி விலகல்’ விவகாரத்தை இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த நாமல் பெடியன் முனகத் தொடங்கி விட்டான். எனவே இவ் விலகல் விவகாரம் ஏற்கெனவே ‘குசினி’ யில் கலந்தாலோசிச்சு எடுக்கப்பட்டது எண்டுதான் நினைக்கிறன்”

“அது தான் நானும் பார்த்தன், கொஞ்ச நாளா பசிலர் மிஸ்ஸிங். அந்த மனிசன் இந்தியாவின்ர காலை விழுந்து காசையும் வாங்கிக் குடுத்துப் போட்டுது. பாவம் அவருக்கும், இந்தியாவுக்கும் பாய் பாய் காட்டப் போறாங்கள் போல இருக்கு”

“நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். இஞ்ச பாருங்கோ வடிவேலர், 2009 இறுதிப் போர் நடக்கேக்க மஹிந்தவும் மிஸ்ஸிங். கோட்டாவுக்கு பிளாங்கெட் அதிகாரத்தைக் குடுத்துப் போட்டு அவர் வெளிநாடு போயிட்டார். கோட்டருக்கும் ஃபொன்சேகாவுக்கும் இடையில அப்ப பயங்கரமான முறுகல் இருந்தது. பொன்சேகா, என்ன இருந்தாலும் ஒரு புரபசனல் சோல்டியர். சில இராணுவ சட்டதிட்டங்களை அவர் மதித்து நடந்தவர். கோட்டருக்கு அது தெரியவும் மாட்டுது. அவற்ற அணுகுமுறை கும்பலடி. சாகிறவன் சாகட்டும் பிழைக்கிறவன் பிழைக்கட்டும் எண்டது தான் அந்தாளின்ர முறை. வெற்றி கிடைச்சதும் அதை முழுவதும் தன்னுடையதாக்கி ஆட்சியை அமைத்தவர் தான் இந்த மஹிந்த. இப்ப நிலைமை மாறுது எண்டவுடன் பசிலரிலை பழியப்போட்டுவிட்டு ஆள் எஸ்கேப். ஜனாதிபதி எப்பிடியும் இன்னுமொரு கும்பலடி மூலம் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கவேணும் என இப்போதைக்கு அவர் ஓதியிருப்பார். பசிலரை அகற்றினவுடனே ‘பவர் கட்’ குறையும், வேணுமெண்டா இருந்துபாருங்கோ. சனங்கள் எல்லாத்தையும் மறந்துபோட்டு தாங்களும் தங்கட பாடும் எண்டு போயிடுங்கள். அப்ப இந்த மஹிந்த கோஷ்டி திரும்பவும் பின்கதவுகளால வரும். அப்ப அவங்கள் எல்லாரும் ‘இந்தியாவுக்கு நாட்டை வித்துப் போட்டாங்கள்’ எண்டு கத்திக்குழற ஆரம்பிப்பாங்கள். தொழிற்சங்கங்கள் சிவப்புத் துண்டுகளோட வீதிக்கு இறங்குவாங்கள். அப்ப ஜனாதிபதி ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிக்க மாட்டார். பசிலர் இல்லாத, கும்பிடு கள்ளர்களான ராஜபக்சக்கள் மீண்டும் தமது சால்வைகளோட கச்சாமிகளின் கால்களில விழத் தேசியக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும்”

“அப்ப திரும்பவும் தமிழர் பாடு அம்போ தான். நானும் நினைச்சன் கோட்டர் கூப்பிட்டு இந்தக் கூட்டமைப்போட கதைச்சது ஏதோ நமக்கு ஒரு தீர்வைக் கொண்டுவரப் போகுதெண்டெல்லோ”

இதில வடிவேலர் ஒரு பெரிய விசயம் இருக்கு. என்னெண்டா, இதெல்லாம் நடக்கிற ரைம்மைப் பாருங்கோ. இந்தியாவிட்ட கடன் வாங்கிற நேரத்திலதானே நடந்தது. இந்தியாவிட்ட உதவி பெறுகிற நேரமெல்லாம் அவங்களுக்கு இருக்கிற ஒரு துரும்பு ‘தமிழர் பிரச்சினை’. ஆனா அது காரியத்தை சாதிக்கும் மட்டும்தான். இதில ஒரே ஒரு ஆள்தான் இந்தியாவோட மோதியும் தமிழருக்குத் தீர்வு கொடுக்கவேணுமெண்டு நிண்டது. அது ரணசிங்க பிரேமதாசா. அதைப் பிறகு கதைப்பம். மற்றவங்கள் எல்லாரும் இந்தியாவையும், தமிழ்க் கட்சிகளையும் தொடர்ந்து பாவித்துக்கொண்டே இருக்கிறவங்கள்”

“அப்ப கூட்டமைப்பு அனைத்துக்கட்சி மாநாட்டில கலந்திருக்கக் கூடாது எண்டு சொல்லுறியோ?”

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில கலந்துகொண்டது சரி. ஆனால் அதுக்குப் பிறகு தனியாக ஜனாதிபதியச் சந்திச்சது தவறு. அதைப் பின்வழியால் இரகசியமாகச் செய்திருக்க வேணும். தமிழருக்குச் சாதகமா எதைக் கதச்சாலும் அதை தமிழருக்கு எதிராகத் திருப்ப மஹிந்த கோஷ்டி தயாராக இருக்கு. அதில வீரவன்ச குழுவும், காவிகளும், தொழிற்சங்கங்களும், ‘படித்த’ இனவெறியர்களும் இறுக்கிறாங்கள். கோட்டரிடம் விசுவாசமான இராணுவம் மட்டுமே இருக்குது”

“மஹிந்த அணி கோட்டரைப் பாவிக்குது எண்டு நீ சொல்லுற?”

“இல்லாட்டி இப்ப மக்கள் எழுச்சி இலங்கை முழுவதும் பரவியிருக்கும். கோட்டர் எடுத்த ஊரடங்குச் சட்டம் எண்ட கும்பலடி நடவடிக்கையாலதான் உடனே சனம் கட்டுப்பாட்டுக்குள்ள வந்தது. அதுவரை ஒளிச்சிருந்த வெள்ளை வேட்டி மஹிந்த, வீடியோ பரிவாரங்களோட தம்பியைப் பாக்க ஓடோடி வாறார் பாத்தீங்களோ. உண்மையான பாசமுள்ள அண்னனாக இருந்தா இராணுவ பாதுகாப்போட எண்டாலும் ரகசியமா வந்து பார்க்கலாம் தானே. ஏன் வீடியோக் காரரும், ஊடகங்களும்? அதில இருந்து தெரியேல்லையா அந்தாளின்ர அரசியல் வேடத்தை? இத்தினைக்கும் கோட்டர் கூட கலவரம் முடிஞ்சும் இன்னும் அறிக்கை விடவில்லை”

“இந்த காபந்து அரசாங்கத்தின்ர காலத்தில என்ன நடக்குமெண்டு சொல்லுற. அரசாங்கம் இந்தியாவோட செய்த ஒப்பந்தங்களைக் கான்சல் பண்ணுமோ?”

“அரசாங்கம் செய்த சர்வதேச ஒப்பந்தங்களைக் கான்சல் பண்ணுமெண்டு நினைக்கேல்லை. உள்நாட்டில செய்ததுகளை கிழிச்சு எறியுமோ தெரியாது. ஆனால் வடக்கில இந்தியா செய்த அபிவிருத்தி ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்திடப்பட்டுவிட்டனவோ தெரியாது. சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை ஈடாக எடுத்தது போல, இந்தியா குடுத்த கடனுக்கு எதையாவது ஈடாக எதையாவது எழுதிவைத்திருக்கோ தெரியாது. ஆனா என்னத்தைத் தான் இந்தியா செய்தாலும் இதில இந்தியா இன்னுமொரு தடவை நாறப் போகுது எண்டுதான் தெரியுது. சனம் அரசாங்கத்தை முற்றாகத் தூக்கி எறியுமட்டும் இந்தியா கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம் போலத் தெரியுது. இந்த பனிப் போரில மீண்டும் மஹிந்தர் வெண்டு, பசிலர் தோத்தால், அது தமிழரின்ர தோல்வியா மட்டுமல்ல இந்தியாவின்ர தோல்வியாகவுமே பார்க்கப்படுமெண்டு நினைக்கிறன்”

“சரி, அப்ப ரணிலின்ர ‘பிரதமர்’ கனவு?”

“மற்றவங்கள் எல்லாரையும்விட ரணில் ஒரு படிச்ச மனிசன். ஒண்டைப் பாத்தீங்கள் எண்டா உங்களுக்குத் தெரியும். கோட்டுச் சூட்டோடை இங்கிலாந்தில படிச்சிட்டு வந்த பண்டாரநாயக்கா எப்ப அந்த உடுப்பைக் கழட்டி எறிஞ்சுபோட்டு தன்ர தேசிய உடைகளை அணிஞ்சுதோ அப்ப அந்தாளின்ர குணம் தெரிஞ்சிட்டுது. இந்த மஹிந்த கோஷ்டியும், இந்தியாவில சங்கிகளும், தங்களின்ர உடைகளால தான் தேசியம் பேசுவினம். ரணில் அப்பிடியில்லை. ரணிலுக்கு நீண்டகால இலங்கைக்கான ஒரு திட்டம் இப்பவும் இருக்குது. தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வைக் குடுக்கவேணுமெண்டு அந்தாள் இப்பவும் நினைக்குது. இனத் துவேசத்தைப் பேசித் தேர்தலிலை வெல்ல அநதாள் முனையவில்லை. தமிழருக்குத் தீர்வைக் குடுத்து நாட்டிலை அமைதியை ஏற்படுத்தினால் உலகமும் உதவிசெய்யும் என அந்தாள் நம்புது. அதுக்காகவே அந்தாள் தேசிய அரசாங்கம் எண்டு ஒன்றை அமைத்தால் தான் அதுக்கு பிரதமராக வேண்டுமானால் வருவேன் என்று கூறியிருக்குது. அச் செய்தி வந்தவுடன் “நான் பதவி விலகுவதாக வந்த செய்தி பொய்” என்று மஹிந்த அறிக்கை விடுகிறார். இதிலிருந்து தெரிகிறது, கோட்டரின் ‘தேசிய அரசாங்கக்’ கோட்பாட்டைச் சிதைத்ததே மஹிந்ததான். எனவே தான் கோட்டர் வீட்டுக்கு முன் நடந்த கிளர்ச்சிக்கும் மஹிந்தவுக்கும் தொடர்பிருக்கிறது என நான் நம்புறன்”

“ம்…ம்… இப்பிடியெல்லாம் யோசிக்கிற மண்டை எனக்கில்லை. நான் வாறன்..” ஆறிப் போன கோழியுடன் மனிசியைச் சமாளிக்கும் எண்ணத்தோடு சைக்கிளில் வீடு விரைந்தார் வடிவேலர்.