சிரி லங்கா (5): சேர் கோதாபயவின் ‘மான் கீ பாட்’
கிசு கிசு கிருஷ்ணானந்தா
” என்ன கிருசு, கொஞ்சநாளா இங்கால காணேல்ல. நானும் மீன் கடைக்கு வாற நேரமெல்லாம் உன்ர மோட்டார் சைக்கிள் நிக்கிறதோ எண்டு பார்க்கிறனான். ஊஹூம் . என்ன நடக்குது?” வடிவேலர் ஆரம்பித்தார்.
“நான் ஊருக்குப் போய் ஆமணக்கு விதை கொஞ்சம் கொண்டுவந்தனான்”
“ஏன் ஆமணக்கு விதை?”
“அந்தக் காலத்தில வீடுகளில விளக்கெரிக்கிறதுக்கு ஆமணக்கைத்தான் பாவிச்சவை எண்டு என்ர அம்மம்மாக் கிழவி சொன்னது ஞாபகமிருக்குது. நாடு போற போக்கைப் பாத்தா விளக்கெரிக்க மண்ணெண்ணையும் இருக்காது போல. அதுதான்…”
“அது தான் பசில் பிரதர் இந்தியா போய் கடனெடுத்தண்டு வந்திட்டாரே. இனி எல்லார் வீட்டிலையும் அவர் விளக்கேத்தின மாதிரித்தான்”
“நீங்களும் அந்த 6.9 மில்லியன் சிந்தனையில தான் இருக்கிறீங்க. பசில் பிரதர் கொண்டுவந்த காசில 10 வீதத்தை விட்டுப் போடோணும். இலங்கைக்கு எண்ணை, காஸ், உணவுப் பொருள் எண்டு இறக்குமதி செய்யிறவங்களெல்லாம் ராஜபக்சக்களுக்கு நெருக்கமானவங்க தான். எப்பிடிப் பாத்தாலும் இந்தக் காசு திரும்பவும் ராஜப்க்சக்களிந்ர பொக்கேட்டுக்குள்ள தான் போகப் போகுது. எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ஆமணக்கு விதைகளை வாங்கி வைச்சிருங்கோ”
“எனக்கெண்டா ஒண்டும் விளங்கேல்ல. எனக்கே இப்பிடியெண்டா இந்த ஊடகக் காரங்களுக்கெல்லாம் இது எப்பிடி விளங்கப் போகுது? சும்மா கலர் கலரா அடிச்சுத் தள்ளிச் சனங்களை கியூவில நிக்க வைச்சிடுறாங்க”
“சனங்கள் பாவம் தான். இஞ்ச பாருங்கோ வடிவேலர், இலங்கையின்ர நிதிப் பிரச்சினைக்குப் பல காரணங்கள் இருக்கு. அதுக்கு முதல் காரணம் ஜனாதிபதி புரபசர்மாரையும் ஆமிக்காரரையும், ஆமிக்காரரையும், அப்போதைகப்போது அனுராதபுரம் ஞானாக்காவையும் ஆலோசனைக்கு வைச்சிருந்தது. இவை ஒருவரும் நிலத்தில கால் வையாத ஆக்கள். முதல் கோணல் முற்றும் கோணல் எண்டு இவையளின்ர ஆலோசனைகள் அந்த மனிசனை ஆரம்பத்திலயே இடறி விட்டது”
“விளங்கேல்லத் தம்பி”
“வெளிநாடுகளில இந்த கொன்சர்வேட்டிவ் கட்சிக்காறர் சொல்லிற ஒண்டு ‘வரிச்சுமையைக் குறைச்சா சனத்தின்ர பொக்கெட்டுகளில காசுப்புழக்கம் அதிகரிக்கும். அதை அவை செலவழிக்க, உற்பத்தி பெருகும் அதால பொருளாதாரம் வளரும்’. இந்த மனிசன் எங்கயோ இதைக் கேட்டிட்டுது போல, ஜனாதிபதியா வந்தவுடனே ‘வீ.ஏ.ரி.’ எண்ட விற்பனை வரியை , 15 வீதத்தில இருந்து 8 வீதமாகக் குறைச்சுப் போட்டுது. இதனால கஜானாவில சேரவேண்டிய பணம் சேரேல்ல. அப்ப ஆரம்பிச்சது பிரச்சினை”
“அப்ப கோவிட் குமரியில அவர் குற்றம் சுமத்தேலாது”
“அப்பிடியில்ல, மனிசன் ஆமியில இருக்கிறபோதில இருந்து தான் பிடிச்ச புலிக்கு மூண்டு கால் எணட நிலைப்பாட்டில இருக்கிற ஒரு ஆள். அதனால இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் கோவிட்டும், முந்தின அரசும், உலகப் பிரச்சினைகளும் தான் காரணம் எண்டு அந்தாள் அடிச்சுச் சொல்லுது. அதுக்குள்ள ஒளிச்சிருந்து நாட்டு மக்களுக்கு ‘மான் கீ பாட்’ உபதேசம் வேற.”
“அப்ப இந்த இந்தியா, சீனாவிட்ட வாங்கிற கடனெல்லாம் எங்க போகுது கிருசு?”
“இஞ்ச பாருங்கோ வடிவேலர். இதுக்கு உங்களுக்கு ஒரு நீண்ட பொருளாதார வகுப்பு எடுக்க வேண்டியிருக்கு. சைக்கிளை வேலியோட சாத்திப் போட்டு இதில இருங்கோ முதலில. இலங்கையின்ர காசுப் பிரச்சினைக்கு, மற்ற நாடுகளைப் போல இரண்டு விடயங்கள் காரணமாயிருக்கு. ஒண்டு, ‘பலன்ஸ் ஒஃப் பேமெண்ட் பிரச்சினை’ (Balance of Payment (BOP)) எண்டு சொல்லுவினம். இது என்னெண்டா, ஒரு நாடு, வெளிநாடுகளோட செய்யிற வர்த்தகத்தில கொடுக்குமதிக்கும் வாங்குமதிக்குமுள்ள வித்தியாசம். அதாவது நாடு இறக்குமதிகளுக்குச் செலவழிக்கிற காசை விட ஏற்றுமதிகளால சம்பாதிக்கிற காசு அதிகமாக இருந்தால் அது நல்லது. கஜானாவுக்கும் காசு சேரும். இதை BOP பொசிட்டிவ் எண்டு சொல்லுவினம். ஆனா நம்ம நாடோ மற்ற மாதிரி. BOP நெக்கட்டிவ். விளங்குதா?. பொசிட்டிவ் ஆக இருந்தா, இந்தக்காசு ரிசேர்வில் இருக்கும். இதையே ஃபொறெக்ஸ் றிசேர்வ் எண்டு சொல்லுவினம். இது பெரும்பாலும் டொலரில இருந்தாத்தான் வெளிநாட்டு இறக்குமதிகளுக்குக் கொடுக்கலாம். ஓகே. இப்ப இந்த் றிசேர்வுக்குக் காசு சேர்க்க இன்னும் சில வழிகள் இருக்கு. அதில முக்கியமான இரண்டு, சுற்றுலாத்துறை மற்றது எங்கட வெளிநாட்டுக் கூலிகள் அனுப்புற காசு, அதுதான் அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போன பொம்பிளையள் கஷ்டப்பட்டு வேலைசெய்து ஊரில ஊதாரியளாகத் திரியிற புருசன் மாருக்கு அனுப்பிற காசு. கோவிட் இந்த இரண்டு வருமானத்திலயும் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டுது.
ஆனா வெளிநாட்டில இருந்து எண்ணை, காஸ், பால் மா, உணவுப் பொருட்கள், உரம் எண்டு பல சாமான்கள் நாட்டுக்குத் தேவை. இதுக்குக் குடுக்கிறதுக்கு றிசேர்வில பணம் போதாது. இதைச் சமாளிக்க அரசாங்கம் இரண்டு நடவடிக்கைகளை எடுத்துது. ஒண்டு சில இறக்குமதிகளுக்குத் தடை விதிச்சுது. இதில பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில இருந்து வாற உணவுப் பொருட்கள். ஒன்றியமும் சும்மா ஆளில்ல. அந்த சோழியன் குடும்பி ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தர வேண்டுமெண்டா எங்கட பொருட்கள் மேல நீங்க விதிச்ச இறக்குமதித் தடையை நீக்க வேணும் எண்டு நிபந்தனை போட்டது”
“அப்ப மனித உரிமைகள், பயங்கரவாதத் தடைசட்டத்தை நீக்கிறது, தமிழர் பிரச்சினை தீர்க்கிறது எல்லாத்தையும் இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் எண்ட குதிரையில கட்டிற எங்கட ஆய்வாளர் அலசல்கள் எல்லாம் பொய்யே”?
“அண்ண, அர்சியலில இதெல்லாம் சகஜம். எல்லாரும் பிழைக்கத்தானே வேணும். அதை விடுங்கோ. இந்த விசயத்தில அரசாங்கத்தின்ர றிசேர்வில காசு இல்லையெண்டா இப்பிடியான சில நடவடிக்கைகளை அது எடுக்கத்தான் வேணும். இதைச் சமாளிக்கத்தான் அரசாங்கம் இரண்டாவது வழியில போனது. அதுதான் இந்தியா சீனாவிட்டக் கடன் வாங்கி இந்த இறக்குமதியளச் செய்து சனத்தைக் குழம்பாமப் பாத்துக்கொள்ளிறது”
“அப்ப நீ சொன்னது போல ஏற்கெனவே வாங்கின கடனுக்கு என்ன நடந்தது?”
“இதில இன்னுமொரு பிரச்சினை இருக்குது நான் அதை இன்னும் தொடவில்ல. ஒரு நாட்டில பணத் தட்டுப்பாடு ஏற்படேக்குள்ள அந்த நாடு பண முறிகளை (soverign bond) வித்துப் பணத்தை சேகரிப்பதுண்டு. உள்நாட்டுச் செலவீனத்துக்குப் பணம் போதாதபோது இப்படி பண முறிகளை அரசாங்கம் விற்கும். அவை ‘டொலர்’ போன்ற வெளிநாட்டு நாணயத்தில் இருந்தால் அதை சர்வதேச பணமுறி (international soverign bonds (ISB)) எனச்சொல்லுவர். அதாவது உங்களிட்ட இருந்து அரசாங்கம் 1 மில்லியன் டொலரை வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாக ஒரு பத்திரத்தைத் தரும் அதில எப்ப இந்த பத்திரம் காலாவதியாகும், அதற்கான வட்டி வீதம் என்ன என்பதுபோன்ற உத்தரவாதம் அச்சிடப்பட்டிருக்கும். இதையே பண முறி எனச் சொல்லுவர். இது உள்நாட்டு நாணயத்திலும் இருக்கலாம் அல்லது வெளிநாட்டு, பெரும்பாலும் டொலரிலும், இருக்கலாம். இது தனியாரினால் அல்லாமல் ஒரு நாட்டின் அரசாங்கத்தால விநியோகிக்கப்படுகிற பண முறிகள் எண்டபடியால பணம் திருப்பப்படுவது உறுதி. அதனால தான் இதை ‘சவரின் பொண்ட்ஸ்’ என்கிறார்கள். இப்பிடி ஏற்கெனவே அரசாங்கம் விநியோகித்த பணமுறிகள் சில, ஜனவரி மாதம் முதிர்ச்சி பெற்றபோது அப் பணத்தை வட்டியுடன் திருப்பி அரசாங்கம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. இப்பிடியான கடன்களைத் திரும்ப பேரம் பேசிப் புதுத் தவணைகளைப் பெற முயற்சிக்க வேணும் என எதிர்க்கட்சிகளும் படிச்சவர்களும் சொல்லிப் பாத்தினம். இதையே ‘றி ஸ்ட்றக்ஷர்’ (restructuring) எண்டு சொல்லுவினம். ஆனால் அரசாங்கம் அதில அதிகம் நாட்டம் காட்டவில்லை. இதுக்குக் காரணம் இப்பிடி நல்ல வட்டியோட அரசாங்கத்துக்குக் கடன் கொடுத்தவர்கள் பலர் ராஜபக்ச நட்புவட்டத்தில இருக்கிறவர்கள் எண்டும் நாடு அப்பிடி இப்பிடி இருக்கிறபடியால அந்தக் காசை அவர்களுக்குத் திருப்பி அரசாங்கம் கொடுத்து அவர்களைக் காப்பாத்தி விட்டதெண்டும் ஒரு கதை. வருகிற ஜூலை இப்பிடி இன்னுமொரு பணமுறி முதிர்ச்சி வரப்போகுது. அதைத் திருப்பப் போதுமான பணம் றிசேர்வில் இருக்குதோ தெரியாது. இதனால தான் இறக்குமதிகளுக்குத் தேவையான உடனடிப் பணத் தேவைக்கு பசில் பிரதர் இந்தியாவுக்கு ஓடினவர்”
“சர் நீ சொல்லிறது விளங்குது. இந்தியா தான் குடுக்கிற கடனுக்கு நிபந்தனை எண்டு அதையாவது வைக்குமோ?”
“ஓம். அதுக்கு வாறதுக்கு முதல்ல நான் இன்னொண்டையும் சொல்ல வேணும். ஞாபகமிருக்குதோ ராஜபக்ச ஆடகளின்ர முதலாவது ஆட்சிக் காலத்தில, அதாவது மஹிந்த ஜனாதிபதியாக இருந்தபோது, நாடு முழுவதும் காப்பட் ரோட்டுகளைப் போட்டிருக்கிறாங்கள் எண்டு நம்மட வெளிநாட்டு ஆக்கள் ‘யாழ்ப்பாணம் அந்தமாதிரி இருக்கு’ எண்டு குண்டில தட்டிப் புழுகினவை?. அதில உண்மை இல்லையெண்டும் இல்ல. ஆனா சீனா தான் குடுத்த கடனில, சீன கொம்பனியளுக்கு ஒப்பந்தத்தைக் குடுக்கிறதால ராஜபக்சக்களின்ர பொக்கெட்டுகளுக்க காசைத் தள்ளிவிட்டு, வேலைகளுக்கு சீனர்களையே பாவித்து, அந்தக் கடனை அப்பிடியே திருப்பி எடுத்தது. நாடு தான் கடனில மூழ்கினதே தவிர ராஜபக்சக்களும் சீனாவும் பணக்காரராகிவிட்டினம். இது தான் இந்தியக் காசுக்கும் நடக்கும் எண்டு நான் நினைக்கிறன். அதாவது தான் குடுக்கிற கடனுக்குத் தன்னிட்ட இருந்துதான் பெற்றோலையும், காசையும், உணவுப் பொருட்களையும் வாங்கவேணுமெண்டு நிபந்தனைகளைப் போடலாம். ஆனா அதைவிட இந்தியா கடன் குடுக்கிறதுக்கு, பணம் சம்பாதிக்கிறதை விட இலங்கையில தான் முதலீடுகளைச் செய்யிறதின் மூலம் சீனாவைப் போல நிரந்தரமாகக் காலைப் பதிக்கிறதுதான் நோக்கம், அதுக்குத்தான் இப்பிடிக் கடனைக் குடுக்கிறதெண்டு நான் நினைக்கிறன். திருகோணமலை எண்ணைக் குதம், மன்னார் நிலக்கீழ் எண்ணை ஆராய்ச்சி போல அரசாங்கத்தின்ர முதலீட்டுத் திட்டங்களும், அதானி குழுமத்தின்ர மன்னார் காத்தாடி மின்னுற்பத்தித் திட்டமும் இந்தியாவின்ர இந்த எண்ணத்தை நிறைவேற்றும் எண்டு நான் நினைக்கிறன். இதனால தான் விமல் வீரவன்ச போன்ற இந்திய எதிரிகள் பசில் பிரதர் இலங்கையை இந்தியாவுக்கு வித்துப் போட்டர் எண்டு குரலெழுப்பினம்”
“அப்ப இந்த பொன்னற்ற பெடி நாலைஞ்சு பள்ளிக்கூடப் பிள்ளையளை ஏத்திகொண்டு ஒரு தட்டி வண்டிலிலை கலர் கலராச் சோடிச்சுக்கொண்டு 13 வேண்டாம் எண்டு கத்திறதும் அதைப் பேப்பர்கள் ‘பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்ட ஊர்வலம்’ எண்டு எழுதிறத்தையும் பாத்தா இந்தியா இந்தக் கடனைக் குடுத்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை எடுத்துத் தரப் போகிறதெண்டெல்லோ நான் நினைச்சன்”
“உங்களைப் போலத் தான் கனபேர் நினைக்கினம். இதில பாருங்கோ வடிவேலர், கொஞ்ச ராஜதந்திரமும் இல்லாம இல்ல. அதாவது முதலில இந்தியா கொழும்பு துறைமுகத்தில கிழக்கு முனையத்தை எடுத்து அபிவிருத்தி செய்யிறதில தான் கவனம் செலுத்தினது. அந்த விசயத்தில சீனா தடியை விட்டுக் குழப்பிப் போட்டு இப்ப தான் அதை எடுத்துச் செய்யுது. இதுக்குப் பிறகு இந்தியா தென்னிலங்கையில ஒரு முதலீட்டையும் செய்ய முன்வரேல்லப் பாத்தீங்களோ? ஏனெண்டு நினைக்கிறியள்? தென்னிலங்கையில இந்திய முதலீடுகளுக்கு ஒரு போதும் பாதுகாப்பில்லை. அதனால அது இப்ப வடக்கு கிழக்கில மட்டும் தான் தன்ர கவனத்தைச் செலுத்துது. தன்னுடைய முதலீடுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெண்டா வடக்கு கிழக்கில ஸ்திரமான ஆட்சி, பொருளாதாரம் இருக்க வேணும். இதனால வடக்கு கிழக்குக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எடுத்துத் தாறது இந்தியாவுக்குப் பாதுகாப்பானது. இந்தக் கடனுதவியின்ர பின்னணியில அது இருந்தாலும் அதை ஒருநாளும் இந்தியா வெளியில சொல்லவேணுமெண்டு நான் எதிர்ப்பார்க்கேல்ல. ஆனா 13 ஆவது திருத்தம் ஏற்கெனவே அரசியலமைப்பில இருக்கிறபடியா காணி, பொலிஸ் அதிகாரங்களையும் குடுத்து முழுமையாக அமுல் செய்யச்சொல்லி பசில் பிரதருக்கு அது சொல்லியிருக்கலாம். பசிலும் கடனை எடுக்கிறதுக்காக அதை அமத்தி வாசிச்சிருக்கலாம் எண்டு தான் நான் நினைக்கிறன். இதை விட்டிட்டு பொன்னற்ற பெடி கேட்கிறமாதிரி , அதில நியாயம் இருந்தாலுங்கூட, ‘ஒரு நாடு, இரு தேசம்’ என்ற கோட்பாட்டை முன்வைக்கிறது உள்நாட்டு விவகாரங்களில தலையிடுகிற மாதிரி விமல் போல ஆட்கள் திருப்பிப் போடுவாங்கள். 13 ஐ அமுல் செய்யச்சொல்லிக் கேக்கிறது ஏற்கெனவே ஒத்துக்கொண்ட விசயத்தை அமுல் செய்யும்படி கேக்கிறது தானே. முழுமையாக அமுல் செய்யப்பட்டா அட் லீஸ்ட் இந்த காணி பறிப்பையாவது நிப்பாட்டலாம். அதைத் தான் கூட்டமைப்பும் கேட்குது.”
“சுமந்திரன் பாட்டியும் கொஞ்சம் நெஞ்ச நிமித்திக்கொண்டு திரியிறதைப் பாத்தா ஏதோ பின்னணியில நடக்கிற மாதிரித்தான் படுகுது. அது சரி இப்பிடியெல்லாம் ஏன் என்ர மண்டை யோசிக்குதில்ல? எதுக்கும் கொஞ்ச ஆமணக்கு விதையில கொஞ்சம் தா. மனிசிக்குக் காட்ட வேணும். அது ரவுணுக்குள்ள வளந்த மனிசி”
நாலைந்து விதைகளை மடிக்குள் சொருகிக்கொண்டு சைக்கிளில் பறந்தார் வடிவேலர்.
- மான் கீ பாட் என்பது இந்தியப் பிரத்மர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி நிகழ்ச்சி