Satire | கடி-காரம்கிருஷ்ணானந்தா

சிரி லங்கா (3) | ஞானாக்காவின் மந்திராலோசனை

‘கிசு கிசு’ கிருஷ்ணானந்தா

‘ஆரியகுளம்’ என்ற எழுத்துகள் பிரமாண்டமாக ஒளிர்ந்து அமைதியான குளத்தில் பிரதிபலிப்பதை கைகளைப் பின்னால் ரசித்துக்கொண்டு நின்றபோது ‘எட தம்பி பிடியடா’ என்ற சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் பிரேக் பிடிக்க மறுத்ததால் கால்களை நிலத்தில் உரஞ்சிக்கொண்டு வந்து இடிபட்டு நின்றார் வடிவேலர்.

“என்ன வடிவேலர் குளத்துக்குள்ள பாயிற பிளானோ?. இப்பத்தான் மேயர் மணிவண்ணன் வெளிநாடுகளைப் போல யாழ்ப்பாணத்தையும் மாத்திக்காட்டிறன் எண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து இதைச் செய்திருக்கிறார். நீங்க அதை பழையபடி சேறாக்கப் போறீங்களா?” என்றேன் நான்.



“விளக்குமாத்துக்குக் குஞ்சம் கட்டின கதை தெரியுமோ கிருசு?” என்றார் வடிவேலர் நக்கல் சிரிப்புடன்.

“ஏன் நல்லாத்தானே இருக்கு. உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை?”

“எட தம்பி வாற ரூறிஸ்ட்காரன் மூக்கைப் பொத்திக்கொண்டு நிண்டு இதை பாக்கப் போறானோ? நல்ல காலம் கொறோணா வந்து இந்த தியேட்டர்களுக்கு வாற பாலூத்திற கோஷ்டிகளை வராமச் செய்தபடியா கொஞ்சம் மூத்திர நாத்தம் குறைஞ்சிருக்கு. மணிவண்ணன் முதல்ல அதுக்கு ஏதும் செய்யவேணும்”

“ஆஹா..ஹா..அண்ணை உங்களுக்கு ஒரு கதை சொல்லுறன் கேளுங்கோ அதுக்குப் பிறகு இப்பிடி நக்கலாக் கதைக்க மாட்டீங்க. எங்கட ஊரில, யாழ்ப்பாணத்துக்கு எங்கட குடும்பம் இமிகிரேட் பண்ணுறத்துக்கு முதல்ல இருந்த ஊரில, இரண்டு அயலவர்களுக்கிடையே சண்டை வந்திட்டுது. ஒருவரின்ர வீட்டிலிருந்து வேலிக்குள்ளால மற்றவற்ற வீட்டுக்கு பாம்பொன்று போய்விட்டது. இதனால ஆத்திரமடைஞ்ச பக்கத்துவீட்டுக்காரர் கொஞ்சம் தண்ணியைப் போட்டிட்டு அயலவரோட சண்டைக்குப் போக அவர் சொன்னாராம் “சரி பாம்பு வந்திட்டுது அதுக்கு நான் இப்ப என்ன செய்யிறது, கழுத்தில மட்டை கட்டி விடச் சொல்லுறியோ? என்று” ( வேலிக்குள்ளால் நுழையாமல் இருப்பதற்காக ஆடுகளின் கழுத்தில் மட்டை கட்டும் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் அந்தக்காலத்தில் இருந்தது)

“இப்ப நீ எங்க வாறாய் எண்டு தெரியுது. சரி நீ அத விடு. அதுசரி இந்த கோதாப்பய(ல்) என்னத்துக்கு அவசரம் அவசரமாக சிங்கப்பூருக்கு ஓடினவர்?”

“அண்ணை, நாங்க நிக்கிற இடம் பிழை. அங்கால விகாரை இருக்கு. எங்கெங்க போஸ்ட்டுகள்ள காதுகளை ஒட்டிவைச்சிருக்கிறாங்களோ தெரியாது வாங்கோ இப்பிடியே போவம்” வடிவேலரையும் கூட்டிக்கொண்டு நடந்தேன்.

“அண்ணை ஜனவரி 14 மட்டுக்கும் கோதபாயருக்குக் காலம் சரியில்லையாம். அனுராதபுரத்தில இருக்கிற ஞானாக்காவின்ர ஆலோசனையிலை அவர் பார்லிமென்ர ஒத்திப்போட்டுவிட்டு ஓடிற்றாராம் எண்டு கிசு கிசு வந்திருக்கு”

“அதுக்கேன் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேணும்?”

“ஆபத்து பாராளுமன்றத்தில இருக்கிற அவரின்ர அமைச்சர்களாலயும் வரலாம் தானே?”

“நீ சொல்லுறத்திலயும் விசயம் இருக்கு”



“அண்ணை, இஞ்ச பாருங்கோ, கோதாபயர் சிங்கப்பூருக்கு ஓட, இஞ்சால பசிலர் மனிசியையும் இழுத்துக்கொண்டு துபாய்க்கு ஓடிவிட்டார். எல்லாம் ‘பிரைவேட் விசிட்’. மஹிந்தர் மட்டும் ஓட முடியேல்ல. பாவம் மனிசனுக்கு சுகமில்லை. கதிரையை விட்டு எழும்ப முடியாமத் தவிக்குது.”

“அப்ப ஏதாச்சும் சதி கிதியெண்டு?” வடிவேலர் சீரியசாகிவிட்டார்.

“அண்ணை பாத்தியளோ, கொஞ்ச நாளா பசிலரின்ர கை ஓங்கி வருகுது. நாட்டின்ர பிரச்சினையைத் தீர்க்கும்வழி அவருக்கு மட்டும்தான் தெரியுமெண்ட மாதிரி நாட்டாமையோடு நடக்கிற மாதிரித் தெரியேல்லையோ?”

“இவை ரெண்டுபேரும் ஒரே நேரத்தில வெளிநாடு போனது கொஞ்சம் சந்தேகமாகத்தானிருக்குது” வடிவேலர் தலையைச் சொறிந்தார்.

“பாருங்கோ அண்ணை, இண்டைக்கு இன்னுமொரு கிசு கிசுவும் வந்தது. ஜனவரியில பாராளுமன்றம் திறக்கும்போது பல அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், செயலாளர்கள், பாராளுமன்றக் குழுக்களின் பதவிகள் எல்லாம் தலைகீழாக இருக்கப் போகுது. திரும்பி வரும்போது ஜனாதிபதி இதை அறிவிக்கவேணுமெண்டு பசிலர் ஒத்தைக்காலில நிக்கிறாராம்”

“அப்ப ஆரின்ர தலை உருளப்போகுது எண்டு நினைக்கிற?”

“இந்த அரசாங்கத்தில இருக்கிற ஓட்டை வாய், ‘மைக் விளுங்கிகள்” பலரின்ர தலையள் உருளும். மஹிந்தானந்த அளுத்கம, கம்மன்பில, ஃபோர் சுயர். ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பி.பி.ஜயசுந்தரவ பசிலருக்குக் கண்ணில காட்ட ஏலாது. அரசாங்கத்தில இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கிற அனைவரும் வெளியேற்றப்படாவிட்டால் தன்னால் கடமையைச் செய்யமுடியாது எண்டு பசிலர் உறுதியாகச் சொல்லிப் போட்டாராம்”

“அந்த விசயத்தில அந்தாள் செய்யிறது சரி தானே, கிருசு”



“என்னப் பொறுத்தவரையில பசிலர் மற்றவையைவிட கொஞ்சம் பிறக்டிக்கலான ஆள். அரசு எடுக்கிற முடிவுகள் மக்களிடத்தில எதிர்ப்பைக் கொண்டுவருகிறது எண்டதுக்காக அதை விட்டிட்டு ஓடக்கூடாது எண்டது அந்தாளின்ர நிலைப்பாடு. இப்ப பாருங்க அண்ணை, பசிலர் இந்தியாவுக்குப் போயிட்டு வந்ததில இருந்து இந்த சிங்களத் தேசியக் கோஷ்டிகள் இலங்கையை அவர் இந்தியாவுக்கு வித்துப் போட்டார் எண்டு சொல்லி, இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கையில செய்ய இருந்த திட்டங்களை எதிர்த்து ரோட்டுக்கு இறங்கப்போறதெண்டு கூவத் தொடங்கி விட்டினம். இதில எங்கட இரட்டை முக ஜே.வி.பி. செந்தோழர்களும் சேர்ந்து கொண்டினம். சீனா வந்து துறைமுகங்களில முகாம் அடிக்கயுக்க பேசாம ‘கம்’மெண்டு இருந்துபோட்டு அமெரிக்காவும் இந்தியாவும் உதவிக்கு வருகிறபோது அவைக்குக் கடுப்பேறிட்டுது. இப்ப பருத்தித்துறை துறைமுகத்தை சீனர் வந்து பாத்துக்கொண்டு போகினமாம்”

“அப்ப கோதாவுக்கு இரண்டு பக்கத்தாலும் எக்கச்சக்கமான பிரஷர் எண்டிற. அதனால ஆரட்டையோ ஆலோசனை கேக்க ஓடிவிட்டாரோ அல்லது உண்மையில சுகமில்லைத்தானோ?

‘பிளட் பிரஷரோ’அல்லது ஞானாக்கா சொன்னது போல ‘புலட் பிரஷரோ’ தெரியாது மனிசன் ஓடிவிட்டுது. ஆரோ ஒருவன் எழுதினதைப் போல அந்தாளுக்கு இது பழக்கம். கொழும்பில தேவாலயங்களில குண்டு வெடிக்கிறதுக்கு முதல்ல இந்த மனிசன் ‘பிரைவேட் விசிட்’ எண்டு சிங்கப்பூருக்கு ஓடிப்போட்டுது. கடவுளே எண்டு இந்த முறையும் ஒண்டும் நடக்கக்கூடாது”

“அப்ப பசிலரின்ர கை ஓங்கினால், இந்தியாவின்ர கை ஓங்கினமாதிரியெண்டு நினைக்கலாமா? அதனால தமிழருக்கு ஏதாவது கிடைக்குமெண்டு நினைக்கிறியோ?”

“கூட்டமைப்புக் காறர் வைன் குடுத்த பூனை மாதிரி ஓடித்திரியிறதைப் பாத்தா ஏதோ பின்னணியில நடக்குது போலத்தான் இருக்கு. மற்றக் கட்சிக்காரர் கூட்டமைப்புக்கு எதிராகக் கொடிதூக்கினா கூட்டமைப்பு ஏதோ நகர்வு எடுக்குதெண்டுதான் பார்க்க வேணும்”

வடிவேலர் மணிக்கூட்டைப் பார்த்துக்கொண்டு ஒத்தைக்காலைப் பெடலில் வைத்தார். ஒரு சிறு காற்று வடிவேலர் சொன்ன மணத்தைக் கொண்டுவந்தது. நானும் நகர்ந்தேன்.