சிரி லங்கா (2) : ஞானசூனிய தேரரின் ‘ஒரு-நாடு ஒரு-சட்டம்’
கிசு கிசு கிருஷ்ணானந்தா
‘இவங்களுக்கு விசரே’, மீன் சந்தையில் என்னை நிறுத்தி வடிவேலர் கேட்டார்.
“ஆருக்கு?”
“உந்த ‘சீனா’க்களுக்குத் தான்.. எனக்கெண்டா விளங்கேல்ல. ஐக்கிய நாடுகள் சபை இந்த அந்தா எண்டு வெருட்டுது. அப்பிடியிருக்க இவன் ஞானசேரரைத் தலைவராய்ப் போட்டு ஒரு குழுவாம், அதுக்குப் பெயர் ‘ஒரு நாடு ஒரு சட்டமாம்’. 9 சிங்களவர், 4 முஸ்லிம்கள். ஒரு தமிழனுமில்லை. நம்ம டக்ளஸ் அல்லாட்டி அந்தாளின்ர பேரென்ன.. சிங்களவன்ர காலை நக்கவும் தயார் எண்டு பாராளுமண்றத்தில பேசின தமிழாள்…அவர் தான் முன்னாள் ஆளுனர்… அவரையாவது போட்டிருக்கலாம். அந்தாள் கேட்க முன்ன ஓமெண்டிருக்கும்” நக்கலுக்கு வடிவேலரைக் கேட்டுத்தான்.
“இல்லை ஐயா. எனக்கென்னவோ இதில பெரிய மர்மம் ஒண்டு இருக்குதுபோலத் தெரியுது. பாண்டியரோட சேர்ந்து சோழரை அழிச்சதில இருந்து இண்டுவரை ஆரோடை படு……..லும், ஆட்சியைத் தக்கவைப்பதில சிங்களவருக்கு நிகர் சிங்களவர்தான். ‘எங்களது உறவு 2,000 வருடத்துக்கு முந்தியது எண்டு கோதா சீனரைக் கட்டிப்பிடிச்சு நாட்டை ஈடுவைச்சுக் கடனை எடுத்தார். இப்ப அதுக்கு வட்டி கட்ட இந்தியாவிட்ட கடன் வாங்கிறார். மோடிக்கு பகவத் கீதையைக் காட்டினா மயங்கிவிடும் எண்ட வித்தையை அறிஞ்சு நாமலை அனுப்பியிருக்கிறாங்கள். அதுவும் மருண்டுபோயிட்டுது. படத்தைப் பாத்தனீங்களே ஐயா?”

“ஓம் அதுக்கும் இந்த ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ குழுவுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஐயா, நாடு பெரிய பிரச்சினையில இருக்குது. உரப் பிரச்சினையால கோதா நல்லா மாட்டிவிட்டார். அவரில ஒரு பழக்கம் முன்னுக்கு வைச்ச காலைப் பின்னுக்கு வைக்க மாட்டார். மானப் பிரச்சினை. இதனால நாட்டில விளைச்சலில்லை, சனம் றோட்டுக்கு இறங்கப் போகுது. அதுகளை நிப்பாட்டக்கூடியவங்கள் இந்த பிக்குகள் தான். அதிலும் இந்த குழுமாடு ஞானசேரரிட்டத் தலைமையைக் குடுத்தா எல்லாம் சரியாகப் போகு. அதுக்குப் பிறகு வீரவன்சவென்ன, ஜே.வி.பி.யென்ன, தொழிற்சங்கங்கள் என்ன எல்லாருமே பின்னால தான். அதுசரி இவ்வளவு முக்கி முழங்கின முறத்தெட்டுவ தேரர் இப்ப எங்க? வெருட்டிவிட்டாங்களா அல்லது ஏதாச்சையும் குடுத்து மயக்கிவிட்டாங்களா?”
“அது சரிதான், அப்ப ஏன் இதுக்குள்ள இந்தியாவை இழுத்தனீர்?”
“ஐயா லோயரா வந்திருக்க வேண்டிய ஆள். சரி உங்களுக்கு விளங்குதோ இல்லையோ இதைச் சொல்லிறன். கொஞ்சக் காலமாக மன்னார்க் கடலில சின்னனும் பெரிசுகளுமா அதிகம் கப்பல்கள் ஓடித்திரியுதுகள் ஏன் தெரியுமா? மன்னார் வளைகுடாவில இயற்கை வாயுப் படிமங்கள் இருக்குது எண்டதை இந்தியா கண்டுபிடிச்சுட்டுது. கிட்டத்தட்ட 300 பில்லியன் டொலர் பெறுமதியானதெண்டு ஒரு சிங்கள அமைச்சரும் சொன்னவர். அதில அமெரிக்கா, சீனா, இந்தியா, அரபு நாடுகளுக்கெல்லாம் கண். அதனாலதான் கொழும்பில இருக்கிற யுதனாமி மின்னுற்பத்தி நிலையத்தின்ர 40% த்தை அமெரிக்கா வாங்கினது. இப்போதைக்கு அதுக்கு திரவ இயற்கை வாயுவைக் கப்பல்களில கொண்டுவந்து விநியோகிப்பதுவே அமெரிக்காவின் திட்டம். பின்னடிக்கு, இந்தியாவோட சேர்ந்து மன்னார்க் கடலில இருக்கிற இயற்கை வாயுவை அமுக்கிறது தான் அவங்களின்ர திட்டம். இந்த விசயத்தில வீரவன்ச ஆட்கள் கத்திறதிலையும் விசயமிருக்குது தான். இதனால தமிழருக்கு எந்தவிதமான இலாபமுமில்லை. மாறாக சூழலும், தமிழ் மீனவர்களும் தான் மிக மோசமாகப் பாதிக்கப்படப் போறது. கொஞ்ச நாளைக்கு முதல் கரையொதுங்கின திமிங்கிலங்கள், டொல்ஃபின்கள், ஆமைகள் எல்லாத்தின்ர பழியையும் உடைஞ்ச எக்ஸ்பிரஸ் கப்பலில போட்டிட்டு இந்தியா தப்பிவிட்டுது. அவை கரையொதுங்கினதுக்குக் காரணம் இவங்கள் இந்தப் படிமங்களைப் பரிசோதிப்பதற்குப் பாவிச்ச சோனார் கருவிகள் தான் எண்டு சூழலியலாளர் கொதிச்சு எழும்பினவை. அவங்களையெல்லாம் அடாக்கிவிட்டாங்கள் இந்த அரசியல்வாதிகள். நாடு தழுவிய போராட்டங்களில சிங்கள மக்கள் குதிக்கிறதுக்குப் பல காரணங்கள் இருக்கு. பஞ்சம், பட்டினி, நோய் எண்டு ஊருப்பட்ட விசயங்கள் இருக்கு. அதை நிறுத்தக்கூடிய வல்லமை பிக்குகளிடம் மட்டுமே உண்டு. அதற்குச் சரியான ஆள் ஞானசேரர் தான். இப்ப விளங்குதே மோடர் ஆர், மோடி ஆரெண்டு?”
“அப்ப இந்தக் குழுவில ஏன் முஸ்லிம்களைச் சேர்த்த சிங்களவ்ன் தமிழரைச் சேர்க்கேல்ல?”
“இஞ்ச பாருங்கோ ஐயா. நாடு பொருளாதார ரீதியில அதல பாதாளத்தில போய்க்கொண்டிருக்கு. பெற்றோல், காஸ் இல்லாம சனங்கள் எரிஞ்சுகொண்டிருக்கு. இந்த நேரத்தில அரபு நாடுகளைப் பகைக்கிறது கூடாது. போதாததுக்கு கட்டரோ அல்லது எமிரேட்டோ ஏதோ ஒண்டு மன்னார் குடாவில காஸ் எடுக்கிறது பத்தி ஆராயிறாங்கள். இதனால அவங்களுக்கு ஒரு நல்ல முகத்தைக் காட்டவேணுமெல்லே. அதுக்குத் தான் முஸ்லிம்கள்”
“தமிழருக்கு ஏன் இடம் குடுக்கேல்லை”
“ஐயா, நீங்க இப்ப எந்த உலகத்தில இருக்கிறீங்க? இப்ப தமிழர் யார்? இந்தியா தான் தமிழர், தமிழர் தான் இந்தியா. அதாவது தமிழர் குடுக்காமலேயே தமிழரின் ‘புறொக்ஸியாக’ இந்தியா தான் இருக்கு. அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து நாலைஞ்சு பேரைச் சந்திச்சு உள்ளூர்ப் பேப்பரில மட்டும் படங்களைப் போட்டவுடன் நம்ம ஆக்களுக்கு புல்லரிச்சுப் போயிடும். “நாங்கள் எல்லாவத்தையும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறம்” என்ற வார்த்தைகள் மட்டும் கொட்டை எழுத்துக்களில் வரும் அதைப் பார்த்துவிட்டு நம்மாட்கள் நல்லூரில பிரதட்டை அடிப்பினம். எனவே, தமிழர் இருந்தென்ன இல்லாமல் விட்டென்ன எல்லாம் ஒண்டுதான். இந்தியாவை ஆலோசிக்காம இதெல்லாம் நடக்காது எண்டுதான் நான் நினைக்கிறன். எண்டாலும் தமிழர் இல்லாதது ஒரு வழிக்கு நல்லது. ஐ.நா. ஆணையாளர் தயாரிக்கிற அறிக்கை கொஞ்சம் பெரிசாகும். அதனால இப்ப பிரயோசனம் இருக்குதோ இல்லையோ ஒரு நாளைக்குப் பிரயோசனமாக இருக்கும்”
“சரி தம்பி. உன்னோட கதைச்சுக்கொண்டிருந்தா நாள் போறது தெரியாது. ஐனூறு ரூபாய்க்கு இவ்வளவு மீன்தான். இந்த இழுவைப் படகுகள் குஞ்சு குருமானையும் வளர விடுகுதில்லையே..மனிசி திட்டப்போறாள், நான் வாறன் தம்பி”
பெரிய ஆய்வாளர் எண்ட நினைப்போடு வடிவேலர் தலையில அரைத்துவிட்டு நகர்ந்தேன்…