சிரியா | வஞ்சிக்கப்படும் குர்திஷ் மக்களின் ‘தேசியக் கனவு’
சிவதாசன்
அக்டோபர் 10, 2019

சிரியாவில் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி குண்டு மழை பொழிகிறது. இது அவர்களுக்கு முதலாவது மழையல்ல. இப்படித் தான் முடியுமென்று அவர்களுக்குத் தெரியாவிட்டால் வரலாற்றை அவர்கள் படிக்கவில்லை. வஞ்சிக்கப்படுவதே அவர்களது வாழ்க்கையாகி விட்டது.
குர்திஷ் மக்களில் கணிசமான பங்கு (12.6 மில்லியன்) துருக்கியில் வாழ்கிறார்கள். 6 மில்லியன் ஈரானிலும், 6 மில்லியன் ஈராக்கிலும், 2 மில்லியன் சிரியாவிலும் 1.5 மில்லியன் ஜேர்மனியிலும், மிகுதி தமிழரைப்போல் உலகம் முழுவதிலுமாக ஒரு தேசமாக ஆனால் நாடற்றவர்களாக வாழ்கின்றனர். அவர்கள் ஒரு தேசமாகச் சிந்திக்கிறார்கள். அவர்களிடம் நாடு கடந்த அரசாங்கம் இல்லையென்பது வேறு விடயம்.
வரலாறு
உலகத்திலேயே நாடற்ற பாரிய இனக்குழுமம் ஒன்று உண்டென்றால் அது குர்திஷ் இனம் தான். நாடற்ற தேசமென குர்திஸ்தான் அழைக்கப்படுமானால் அதன் சனத் தொகை 35 மில்லியன், உலகெங்கும் சிதிலமாக்கப்பட்டு வாழும் இனம். மதங்களாலும் குலங்களாலும் பிரிந்துபோயுள்ள இனம்.
பலம் வாய்ந்த ஒட்டோமான் சாம்ராஜ்யம் முதலாம் உலகப்போரின் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது சுவுற்சர்லாந்திலுள்ள லூசான் நகரத்தில் ஒரு ஒப்பந்தம் (Treaty of Lausanne) எழுதப்பட்டது (1920-1923). இழந்துபோனது போக எஞ்சியுள்ள பிரதேசங்களை ‘துருக்கிக் குடியரசு’ க்குள் முடக்கிக் கொடுத்து துருக்கியை ரயிலேற்றி விட்டனர், அப்போதய சண்டியர்களான பிரித்தானியாவும் பிரான்சும். துருக்கியில் பெருமளவு குர்திஷ் மக்கள் வாழ்ந்தும், இலங்கைத் தமிழர்களைப் போலவே அப்போது குர்திஷ் மக்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இச் சண்டியர்களால் அப்போது தமது வசதிக்கேற்பத் துண்டுபோடப்பட்ட குர்திஷ் மக்களும், மத்திய கிழக்கும் கூடவே, இப்போதும் தொடர்கிறது.

1927 இல் துருக்கியிலுள்ள குர்திஷ் மக்கள் குர்திஷ் அரராற் குடியரசைப் (Kurdish Republic of Ararat) பிரகடனப்படுத்தித் தனிநாட்டுப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் சண்டியர்களின் ஆதரவு இருந்தும் துருக்கியின் அழுத்தத்தால் அது கைவிடப்படவே வஞ்சிக்கப்பட்ட குர்திஷ் மக்களின் போராட்டம் துருக்கியால் துடைத்து எடுக்கப்பட்டது.
பின்னர் 1950 களில் அப்டல் கரிம் காசிம் ஆட்சியின்போது அமெரிக்கா ஈராக்கி குர்திஷ் மக்களை உசுப்பிவிட்டு 1963 இல் காசிம் ஆட்சியைக் கவிழ்த்தது. ஆட்சி கவிழ்ந்தவுடனேயே குர்திஷ் போராளிகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. குர்திஷ் போராளிகள் நிர்மூலமாக்கப்பட்டனர்.
1975 இல் ஈராக்கிய குர்திஷ் மக்களுக்கு மீண்டும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு அவர்களது தேசியத் தீ யிற்கு மீண்டும் எண்ணையை ஊற்றியது அமெரிக்கா. ஆயுதங்களைக் கொடுத்து மகிழ வைத்தது. குர்திஷ் படையை ஒரு அரிகண்டம் தருவதற்காக ஒரு பிம்ப் பாக மட்டுமே வளர்த்தது. சி.ஐ.ஏ. யின் ஆலோசனைக்கு எதிராக அப்போதய ஜனாதிபதி நிக்சன் குர்திஷ் படைகளை வளர்த்தெடுத்தார். அப்போது ஈரான் – ஈராக் பிணக்கு முற்றியிருந்த நேரம். ஈரான் – ஈராக்கிடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திட்டது கூடத் தெரியாமல் அமெரிக்காவினாலும் ஈரானினாலும் கைவிடப்பட்ட குர்திஷ் படைகளைச் சதாம் ஹுசேன் துடைத்தெடுத்தார். 35,000 பேர் மடிய 200,000 அகதிகளை இது தோற்றுவித்தது.
1978 இல் மீண்டும் தேசிய உணர்வு தலைக்கேறியது. ஆகஸ்ட் 15, 1984 இல் PKK எனப்படும் குர்திஷ்தான் உழைப்போர் கட்சி ( Kurdistan Workers Party) மக்கள் எழுச்சியை ஆராம்பித்து வைத்தது. துருக்கியிலிருந்த குர்திஷ் மக்களில் 40,000 பேர் செத்து மடிந்தார்கள். குர்திஷ் மக்கள் வாழ்ந்த ஒவ்வொரு நாடுகளிலும் அவர்கள் எதிரிகளாகவே பார்க்கப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் அழிவும் கூடவே வாழ்ந்தது.
மார்ச் 1988 இல் ஈராக்கில் ஹலாப்ஜா என்னுமிடத்தில் அமெரிக்காவின் நண்பனான சதாம் ஹுசேன் ‘நரம்பு வாயுவைக்’ கொண்டு குர்திஷ் மக்களைக் கொன்றொழித்தார். அப்போதய ஜனாதிபதி றொனால்ட் றேகன் சொன்னது ‘ அவர் எங்களுடைய …மகன்’ என்று. உலக மனித உரிமைப் படைகள் எதுவும் வாய் திறக்கவில்லை.

2007 இல், சதாமின் ஈராக் முடிவுற்றதும், அமெரிக்க நண்பரான துருக்கி எல்லை கடந்துபோய் ஈராக்கிய குர்திஷ் மக்களைத் தாக்க அமெரிக்கா பாதையமைத்துக் கொடுத்தது.
********
குர்திஷ் மக்களின் அரசியல் மற்றவர்களுக்குப் பாடம் கற்பிக்குமளவுக்கு சிக்கல்களும் புதிர்களும் நிறைந்தது. அவர்களும் தமிழரைப் போலவே (?) படித்தவர்கள், பலவித கலாச்சார விழுமியங்களை இறுகப்பற்றிக்கொண்டிருப்பவர்கள், சுனி, ஷியா, கிறிஸ்தவம், யூதம் என்று பல மதங்களையும் பின்பற்றுபவர்கள். இதனால் அவர்கள் பல கூறுகளாகப் பிளவுபட்டு வாழ்ந்தவர்கள். தீவிர இடதுசாரி அமைப்பான PKK யின் ‘குர்திஷ் தேசியக்’ கனவு ஒன்றினாலேயே இவர்களை இணைக்க முடிந்தது.
‘பிம்ப்’புகளின் பிழைப்பு
பாலியல் தொழிலில் இடைத் தரகு செய்யும் தரகரைப் ‘பிம்ப்’ (pimp) என்றழைப்பது வழக்கம். அரசியலிலும் இப்படியானவர்கள் நிறையவுண்டு.
அனேகமான சண்டிய நாடுகளின் உளவுப் பிரிவுகள் நான் சொல்லும் இந்த பிம்ப் வகைக்குள் அடங்குவார்கள். பாலியல் தொழிலாளியின் நைந்துபோன உணர்வுகளைச் (vulnerability) சாதகமாகப் பயன்படுத்தி அவர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் போன்று நடித்துத் தங்கள் அலுவல்கள் முடிந்ததும் தொழிலாளிகளைக் கைகழுவி விட்டுச் செல்வதே இவர்களது வழக்கம். ஈழத்தமிழர் விடயத்தில் இந்திய உளவுப்பிரிவுகள் இதை நன்றாகவே செய்தன.
இப்படியான-வஞ்சிக்கும் நடவடிக்கையே- இன்னுமொரு தடவை குர்திஷ் போராளிகளுக்கு நடந்திருக்கிறது. தமிழர் உள்ளிட்ட உலகம் முழுவதுமான தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் பிசு பிசுத்துப் போவதற்கு முக்கிய காரணம் இப் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் ‘பிம்பு’களை நம்பி மோசம் போவதினால்தான்.
சிரியாவின் போர்க்களம் பல புதிர்களையும், பிம்புகளையும் கொண்டிருந்தது. சில சண்டியர்கள் நேரடியாகவும் பலர் பிம்புகள் மூலமாகவும் அங்கு பிரசன்னம் கொண்டிருந்தார்கள். சிரிய ஆட்சியில் எனக்கு விருப்பில்லாமல் இருக்கலாம் ஆனால் தங்களினதும் தங்கள் பிம்புகளினதும் இன்பத்துக்காக, ‘சிரிய மக்கள் துன்பப்படுகிறார்கள்’ என்று நீலிக் கண்ணீர் வடிப்பவர்களுக்காகச் சிரியா மீது சாயவேண்டி இருக்கிறது.
சிரியாவை உடைப்பதற்குப் பல சக்திகள் முனைகின்றன. அவற்றின் ஒன்றினதோ அல்லது பலதினதோ பிம்ப், ஐசிஸ். மத்திய கிழக்கின் இதர பிம்புகளைப் போலவே வெற்றி தலைக்கேறியதும் தடம் மாறப் புறப்பட்ட போது அதை ஒடுக்கக் கொண்டுவரப்பட்ட புதிய பிம்ப் தான் குர்திஷ் படை. ‘குர்திஷ் தேசிய’ கனவுடன் அது வந்தது. ஆண்கள் பெண்கள் என்று நிறைய இளைய தலைமுறையினர் இதில் இணைந்தனர். அமெரிக்கா ஆயுதங்களஇ வழங்கியது. ஐசிஸ் போலன்றி, அவர்களின் தேவை கண்ணியமானதென்று நம்பியதால் அர்ப்பணிப்பு இருந்தது, ரஷ்யாவும், சிரியாவும் பலவீனமாக்கிய ஐசிஸ் கொட்டத்தைக் குர்திஷ் படைகள் ஒடுக்கியது.
இப்போது குர்திஷ் பிம்பின் தேவை முடிந்துவிட்டது. அவர்களது தேசியக் கனவைச் சண்டியன் அமெரிக்கா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மீண்டுமொருதடவை தகர்க்கப்பட்டது. துருக்கி என்ற பெரிய பிம்பின் வருகையால் குர்திஷின் தேவை இல்லாமல் போய்விட்டது.
துருக்கியில் வாழும் 12 மில்லியன் குர்திஷ் மக்களின் ‘தேசியக் கனவை’ நிர்மூலமாக்க துருக்கி தொடர்ந்து உழைத்தவண்ணம் உள்ளது. அமெரிக்க ஆயுதங்களத் தாங்கிக்கொண்டு சிரியாவில் இருக்கும் 2 மில்லியன் குர்திஷ் மக்கள் இப்போது துருக்கிக்குப் பெரும் தலையிடி. இதுவே இப்போதைய துருக்கியின் படையெடுப்பு.
குண்டு மழைக்கான சூல் கருக்கொண்டு வெகு நாட்களாகிவிட்டன. எப்படிக் குவெயித்தை அடக்க ஈராக் என்ற பிம்ப் பாவிக்கப்பட்டுப் பின் அதுவும் கொல்லப்பட்டதோ அதுவே குர்திஷ் படைகளுக்கும் நடக்கிறது. பலமான குர்திஷ் ஆயுததாரிகளைத் தன் மண்ணில் வைத்திருப்பது சிரியாவுக்கும் விருப்பமில்லை. ஐசிஸ் குடும்பங்களைப் கைதிகளாக வைத்துப் ‘பாதுகாத்துக்கொண்டு’ வரும் குர்திஷ் பிம்புகளை ஒழிக்க அமெரிக்காவும் ‘மனித உரிமைப் படைகளும்’ விடாது. துருக்கி என்ற பிம்ப்பின் உதவி சிரியாவிற்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
துரும்பரின் நிலைமை
ட்ரம்ப் (துரும்பர்) ஆட்சிக்கு வருவதற்கு முதலே ‘மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்கு வேலையில்லை, அவர்களைத் திரும்ப அழைப்பேன்’ என்ற தோரணையில் தேர்தல் காலங்களின் போது பேசியிருக்கிறார்.
. துரும்பர் வருவாரா? (ஏப்ரல் 2016)
துரும்பரின் ஆட்சியின் முதலாவது தவணை முடியப்போகிறது. இரண்டாவது தவணையும் வெற்றிபெற அவர் கடுமையாக முயற்சிப்பார். அதற்காக முதலாவது தவணையில் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடுவார். வெளி நாடுகளிலிருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவது ஒரு வாக்குறுதி. ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை மீட்கப்படுகிறது. சிரியாவில் அடுத்தது. அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானிலும் சிரியாவிலும் குவித்தது துரும்பர் அல்ல. ‘முடியாத நீண்ட போர்களிலிருந்து எங்கள் படைகளைத் திருப்பியெடுப்பேன்’ என்ற தாரகமந்திரத்தை அவர் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறார்.
துரும்பரின் ஆயுதம் பொருளாதாரத்தடை. அதில் எனக்கு விருப்பமில்லையாயினும் குண்டு மழையை விட அது குறைந்த களப்பலிகளை எடுப்பது. வட கொரியா, வெனிசுவேலா, ஈரான் என்று அடுத்ததாக துருக்கி மீது பொருளாதாரத்தால் படையெடுக்கப்போகிறார். அவர் சொல்வது போல தரகளில் அமெரிக்கச் சப்பாத்துகள் தேவையற்றவை.
மீண்டுமொரு தடவை குர்திஷ் மக்களின் தேசியக் கனவு இடையில் குழப்பப்பட்டிருக்கிறது. நிரந்தரக் கனவில் வாழ்வதும், நிரந்தரமாக வஞ்சிக்கப்படுவதும் அவர்களது வாழ்க்கையாகப் போய்விட்டது.
இழப்புகள் தொடர்ந்தும் எண்ணை ஊற்றிக்கொண்டிருக்கும் மட்டும் மரபணுவிலே நிரந்தரமாக எரிந்துகொண்டிருக்கும் விடுதலைத் தீயை அணைக்க முடியாதுதான்.