Columnsசிவதாசன்

சிரியா: தேவதூதரின் வரவிற்குத் தயாராகுங்கள்!

சிரியாவின் வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தனை விரைவில் அல்ல. இதற்கு முழுமுதற் காரணம் அமெரிக்காவும் அதை இயக்கும் இஸ்ரேலும். ஏனைய மேற்கு நாடுகள் கூட்டுக் களவாணிகள். சூத்திரதாரி இஸ்ரேல் வழமைபோல் திட்டத்தை நேர்த்தியாக நிறைவேற்றியிருக்கிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற கூற்று இக்காலத்திற்குப் பொருந்தவே பொருந்தாது என்பதையும் அரசியலில் அறம் இருக்கவே கூடாது என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்திருக்கிறது சிரியாவின் வீழ்ச்சி.

பஷார் அல்-அசாத் ஒரு கண் வைத்தியர். தந்தையின் பரம்பரை அரசியலை வெறுத்து லண்டனில் தானுண்டு தம் தொழிலுண்டு என வாழ்ந்துகொண்டிருந்த மனிதர். 1994 இல் இவரது மூத்த சகோதரரும் தந்தையின் ஆட்சியைப் பொறுப்பேற்கவிருந்தவருமான பசெல் அல்-அசாத் வாகன விபத்தில் மரணமடைந்ததும் லண்டனிலிருந்து பசார் சிரியாவுக்கு அழைக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் தந்தை இறந்ததும் ஆட்சி அவரது தலையில் சுமத்தப்படுகிறது. பசார் தந்தையைப் போல் ஒரு கொடுங்கோலர் அல்ல. லண்டனில் இவர் தொழில் புரிந்த மருத்துவமனையில் சக ஊழியர்களாலும் நோயாளிகளாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஒருவகையில் அப்பாவி. ஒரு நவீன அரசியல்வாதிக்குரிய, அதுவும் மத்திய கிழக்கின் அரசியலை அறிந்திருக்கவேண்டிய சூட்சுமங்கள் இவருக்கு சூனியம். அப்படியிருந்தும் 25 வருடங்கள் அவரைத் தாங்கிப் பிடித்திருந்தவை புறவிசைகள் தான்.


ஆப்பிரஹாமின் குழந்தைகளான அரபுக்களும் யூதர்களும் பல்லாயிரம் வருடங்களாக வரண்ட நிலங்களுக்காகப் போராடிக்கொண்டிருப்பவர்கள். அந்நிலங்களைப் போலவே அவர்களது குணாதிசயங்களும் வரண்டவை. தார்மீகம், ஈவிரக்கம், மனித நேயம், நேர்மை, விசுவாசம் என்ற மனிதப் பண்புகள் அறவே அற்றவர்கள். இந்த நிலத்தைச் சேர்ந்த இயேசு போன்ற ஒரு நல்ல மனிதர் அவரது இனத்தவராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதன் பழி பாவமோ என்னவோ இரத்தம் சிந்தாது இந்நிலம் வாழவே முடியாது என்பதுவே யதார்த்தமென இன்றய நிலைமை மீண்டும் அடித்துச் சொல்லியிருக்கிறது.

நெட்டன்யாஹு என்ற கொடுங்கோலர் தன்காலத்தில் அகன்ற இஸ்ரேலை உருவாக்கிவிடவேண்டுமென்ற திட்டத்தில் செயலாற்றி வருகிறார். தாமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டு உலகை ஆள அனுப்பிவைக்கப்பட்டவர்கள் என்ற மத நம்பிக்கையுடன் யூதர்களும் அவரைத் தொடர்கிறார்கள். கற்றவர்களும், கல்லாதவர்களும் கூட இந்த கடவுள் கூற்றை அப்படியே நம்புகிறார்கள். யூத மூத்தோர்களால் 1903 இல் ரஸ்யாவில் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் சயோன் வக்கணைத் தொகுதி என்னும் நூலில் உலக ஆட்சியைக் கைப்பற்ற யூதர்கள் என்ன செய்யவேண்டுமென்ற கட்டளைகள் நிரற்படுத்தப்பட்டுள்ளன. இது உண்மையல்ல; யூதர்களுக்கு எதிரான சதிகளில் இதுவுமொன்று என யூதர்கள் கூறிவந்தாலும் நடைமுறையில் இக்கட்டளைகளின் பிரகாரமே உலக ஒழுங்கு சீரமைக்கப்பட்டு வருவதாக எதிர்த்தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தக் காலத்து இளைய தலைமுறை யூதர்களும் இந்த அடிப்படை வாதத்தால் உள்வங்கப்பட்டுவரும் நிலையில் நெட்டன்யாஹு போன்றோரின் இனவழிப்பும், குழந்தைக் கொலைகளும் யூதர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகின்றது. “என்று உலகின் தெருக்களில் யூதர்கள் கொல்லப்படுதல் ஆரம்பிக்கிறதோ அன்று அனைத்து யூதர்களும் இஸ்ரேலுக்குச் சென்றுவிடவேண்டும்” என ஒரு யூத மத போதகர் கூறியதாக ஒரு அமெரிக்க இளம்பெண் சமீபத்தில் ஒரு காணொளியில் கூறியிருந்தார்.

யூதர்களின் மத நம்பிக்கையின்படி இறை தூதரின் (டேவிட் மாமன்னரின் மீள்பிறப்பு) வரவுடன் ஜெருசலேமில் (தற்போது இஸ்லாமியர்களின் புனித அல்-அக்ஸா மசூதி இருக்குமிடத்தில்) யூதர்களின் கோவில் மீளவும் எழுப்பப்படுமெனவும், அப்போது உலகில் வாழும் யூதர்கள் அனைவரும் அவர்களுக்கான சத்திய பூமிக்கு திரும்பி அழைக்கப்படுவார்கள் எனவும் உலகம் எங்கும் அப்போது சமாதானம் தழைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வு விரைவில் நடைபெறவிருக்கிறது எனவும் இவ்வுலக யூதர்களின் வரவிற்காக அகன்ற இஸ்ரேல் உருவாக்கப்படுகிறது எனவும் இதன் பொருட்டு நடைபெறும் மனித அழிவுகள் எல்லாமே கடவுளின் சித்தம் என எண்ணுவதால் யூதர்கள் மனக்குழப்பம் அடையத் தேவையில்லை என அவர்களின் மத போதகர்கள் போதனை செய்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்ட இளம்பெண்ணின் உணர்ச்சி வசப்பட்ட கூற்றும் இதையொட்டியே அமைந்திருக்கிறது. சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இஸ்ரேல் ஏற்கெனவே சிரியாவிடமிருந்து 1967 போரில் கைப்பற்றிய கோலான் மலைப் பிரதேசத்தையும் தாண்டி மேலும் உள்ளே நகர்ந்துகொண்டிருப்பது இத் திட்டத்தின் பிரகாரமே.

சிரியாவின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் 1979 இல் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையுடன் ஆரம்பித்தது எனினும் 2011 இல் பாஹ்ரெயினில் ‘அரபு வசந்தம்’ ஆரம்பித்த பின்னர் தான் அதன் நெருக்கடி மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. இப்பொருளாதாரத் தடைக்குக் காரணம் லெபனானில் நிலைகொண்டிருந்த ஷியா பிரிவைச்சேர்ந்த ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு ஆதரவு வழங்கியமையே என அமெரிக்கா கூறுகிறது. இதற்குப் பிரதியுபகாரமாக ஹெஸ்பொல்லாவின் படைகள் சிரியாவில் நிலைகொண்டிருந்து அதன் இராணுவத்திற்கு பலம் சேர்த்தன. இன்று வரை இஸ்ரேலினால் வெற்றிகொள்ள முடியாத ஒரு இராணுவ அமைப்பாக லெபனானிலும் சிரியாவிலும் இருந்துவந்த ஒரு அமைப்பு ஹெஸ்பொல்லா. காசா – இஸ்ரேல் போரின்போதும் கூட ஹெஸ்பொல்லா ஓரளவு அமைதியையே கடைப்பிடித்தது. நூற்றுக்கு மேல் தனது பணயக் கைதிகள் ஹமாஸினால் சிறைபிடிக்கப்பட்டிருந்தும் இஸ்ரேல் லெபனானில் போய் ஹெஸ்பொல்லாவுடன் பொருதியமைக்கு காரணம் சிரியாவிலிருக்கும் ஹெஸ்பொல்லாவைப் பலவீனப்படுத்தவே. லெபனானிலிருந்த ஹெஸ்பொல்லாவை அழிக்கிறோம் என்று லெபனானின் பொதுமக்கள் குடியிருப்புகளைக் குண்டுபோட்டழித்ததன் மூலம் லெபனான் அரசிற்கும் ஹெஸ்பொல்லாவிற்குமிடையேயான பிரிவினையைத் தூண்டி வெற்றியும் பெற்றது. இதர அரபுக் குடா நாடுகளின் உதவியுடன் ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் செய்துகொண்டதற்குக் காரணம் அடுத்த கட்டமான சிரியா படைபெடுப்பின் தயாரிப்பிற்காகவே. லெபனான் படையெடுப்பில் பெருமளவு இஸ்ரேலின் காலாட் படைகள் கொல்லப்பட்டது மட்டுமல்லாது சிரியாவின் படையெடுப்புக்கு அது தேவையாகவுமிருந்தது. அதற்காகவே இந்த போர்நிறுத்தம். இதைச் சாத்தியமாக்கியது அரபுக் கருங்காலிகளான யூ.ஏ.ஈ., கட்டார், சவூதி அரேபியா, ஜோர்தான், துருக்கி போன்ற நாடுகளே.

இதே வேளை அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் சிரிய மக்கள் பாரிய வறுமையில் சிக்கித் தவித்தனர். வங்கிகளில் கடன்களை எடுத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கவேண்டிய நிலை. தொடர்ந்து 20 நாட்கள் மின்வெட்டு. 2024 இல் மட்டும் மின்சாரக் கட்டணம் 585% த்தால் உயர்த்தப்பட்டது. சதாம் ஹூசெய்னின் ஈராக் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையினால் 500,000 குழந்தைகள் கொல்லப்பட்டமை நினைவிருக்கலாம். சிரியாவின் வருமானம் தரும் எண்ணை வயல்களை அமெரிக்க ஆதரவுடனான குர்திஷ் இராணுவ அமைப்பு தன்வசம் வைத்திருந்தமையால் எண்ணை வருமானம் சிரிய அரசுக்குக் கிடைக்கவில்லை. தொழில் துறைகள் வளமாக இருந்த சிரியாவின் பிரதேசம் துருக்கியின் ஆதரவில் இயங்கிய இராணுவ அமைப்பான சிரிய தேசிய இராணுவத்தின் கைகளில் இருந்தமையால் ஏற்றுமதி வருமானமும் அரசுக்கு இல்லை. இதனால் மக்கள் தமது வறுமையைப் போக்க போதை வஸ்து கடத்தலை மேற்கொண்டார்கள். இதனால் நாடு தாதாக்களின் அராஜக ஆட்சியில் வீழ்ந்தது. வறுமையின் காரணமாக இராணுவத்தினரும் அரச விசுவாசத்தை விட்டு விட்டு குறுக்கு வழிகளில் பணம் தேடத் தள்ளப்பட்டார்கள். இராணுவத்தினர் ஒருவரது நாட் சம்பளம் 7 டொலராக இருக்கும்போது துணை இராணுவக் குழுவில் ஒருவருக்கு நாளொன்றுக்கு 400 டொலர்கள் அமெரிக்க வரிப்பணத்திலிருந்து கிடைத்தது. இதனால் பல அரச இராணுவத்தினர் துணை இராணுவக்குழுக்களின் கிம்பளத்தில் பணியாற்றினார்கள். ‘அரபு வசந்தம்’ தனது கடமையை அமைதியாகச் செய்துகொண்டிருந்தது. இதே வேளை ஐசிஸ், எஸ்.என்.ஏ., எஃப்.எஸ்.ஏ. , குர்திஷ் போன்ற பல துணை இராணுவக்குழுக்கள் பென்ரகன், சீ.ஐ.ஏ., துருக்கி, பிரித்தானியா, இஸ்ரேல் என்று பல தரப்புகளின் ஆதரவுகளுடனும் சிரியாவின் நான்கு பக்கங்களிலும் நிலைகொண்டுவிட்டன. இதைக் காரணமாகக் கொண்டு அசாத் ரஸ்யாவின் உதவியை நாடினார். 2015 இல் ரஸ்ய அதிபர் புட்டின் தனது படைகளை சிரியாவிற்குள் அனுப்பினார். அசாத்தின் இருப்பு நீடிக்கப்பட்டது.

இருப்பினும் சிரியா தனது பங்கிற்கு முன்னேற்றங்களைச் செய்ய முடியாத அளவிற்கு பொருளாதாரத் தடை அதன் பொருளாதாரத்தை மிதித்துச் சிதைத்தது. அசாத்தின் பரிதாப நிலையைக் கண்ட ரஸ்ய அதிபர் புட்டின் 2018 இல் அசாத்திற்கு ஒரு ஆலோசனையை வழங்கினார். சிரிய இராணுவத்துக்குப் பயிற்சிகளை வழங்கி முன்னேற்றுவதற்கு அவர் உதவி செய்யத் தயாராகவிருந்தார். காரணம் யூக்கிரெய்ன் தலையிடி அவருக்கு அப்போதுதான் ஆரம்பித்திருந்தது. இருப்பினும் புட்டினின் ஆலோசனையை அசாத் புறந்தள்ளிவிட்டார். இதற்கு காரணம் இதர அரபு நாடுகளுடன் அவர் ஒற்றுமையைப் பேண விரும்பியதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது சிரியாவுடன் நட்பு பாராட்டியதோடு அங்கிருந்த ஹெஸ்புல்லா படைகளுக்கு பண, இராணுவ உதவிகளை வழங்கிவந்த ஈரானும் ரஸ்யாவைப் போலவே அசாத்திற்கு ஆலோசனை வழங்கியதாகவும் அதையும் அசாத் நிராகரித்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. இப்படி அசாத்தை நம்ப வைத்ததில் துருக்கியின் ஏர்டோகனின் பங்கு இருந்திருக்க அதிகமான வாய்ப்புண்டு.

இதே வேளை யூக்கிரெய்னில் அமெரிக்க – நேட்டோ கூட்டிற்கு தோல்வி நிச்சயம் என உணர்ந்த கொள்கை வகுப்பாளர்கள் சிரியப் போரில் ரஸ்யாவை முடக்கினால் யூக்கிரெய்னைக் காப்பாறுவதுடன் ரஸ்யாவைப் பலவீனப்படுத்திவிடலாம் என நினைத்து சிரியப் படையெடுப்பை துரிதப்படுத்தினர். போர்களை முடிவுக்குக் கொண்டுவருவேன் எனச்சூழுரைத்துக் கொண்டிருக்கும் ட்றம்ப் பதவிக்கு வருவதற்கு முன்னர் இதைச்சாத்தியப் படுத்தவேண்டுமென அவர்கள் அவசரப்படுத்தினர். இதற்கான அவர்களது திட்டமே ஹெஸ்பொல்லா-இஸ்ரேல் போர் நிறுத்தம். இங்கு துருக்கியும் இதர அரபுநாடுகளும் ஹெஸ்பொல்லாவை ஏமாற்றிவிட்டன. இப்போர்நிறுத்தத்தினால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய படைகள் சிரியாவுக்கு நகர்த்தப்பட்டன. இதில் சிரியாவுக்கு ஆதரவாகக் குதித்தால் ரஸ்யா யூக்கிரெய்னில் தோற்க நேரிடும். ரஸ்யாவின் ஆதரவில்லாது ஈரானினாலும் சமாளிக்க முடியாது. எனவே இவ்விரண்டு நாடுகளும் சிரியாவைக் கைகழுவி விட்டன. இதர அரபு நாடுகளைப் பகைக்கக்கூடாது என அறம் சார்ந்து யோசித்த அசாத்தின் முதுகில் அதே அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து முதுகில் குத்திவிட்டன. சதாமைப் போலவோ அல்லது கடாபியைப் போலவோ தன் மக்களாலேயே அவமானப்படுத்தப்படாமல் சிரிய அதிபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அபயம் கொடுத்துத் தான் ஒரு பெரு மனிதர் என நிரூபித்திருக்கிறார் புட்டின்.

கடாபி, சதாம், ஷா, மார்க்கோஸ், நோரியேகா என அனைத்து ‘சர்வாதிகாரிகளையும்’ உருவாக்கியதும் அழித்ததும் அமெரிக்காதான். இவர்கள் அனைவருமே மரணமடைவதற்கு முன் கூறிய வார்த்தைகள் “அமெரிக்கா எம்மை ஏமாற்றி விட்டது” என்பதையே. இவர்களை ஏமாற்றி அன்றறுத்த புஷ், கிளின்ரன், ஒபாமா ஆகிய அரசர்கள் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். நின்றறுக்குமென்ற தெய்வங்களை எங்கும் காணோம்.

சதாமின் சிலையைக் கட்டி வீழ்த்திய அதே நாடகம் டமாஸ்கஸிலும் நடைபெறுகிறது. ஏவற்காரர்கள் ஒன்றுதான். கடாபி பாவம். கடாபிக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்ட ஒருவர் நேற்று காணொளியில் புலம்பினார். “இப்போ கடாபி உயிரோடு இருந்தால் நான் அவருக்காக உயிரைக் கொடுப்பேன்” என. இன்னும் சில மாதங்களில் சிரியத் தெருக்களிலும் பலர் புலம்பப் போகிறார்கள். மத்திய கிழக்கு பாலைவனமாக இருப்பதற்குக் காரணமிருக்கிறது.

இப்போது எம்முன்னால் இருக்கும் கேள்விகள், “எப்போது தூதர் வருவார்?”. “அனைத்துக் கடவுளின் குழந்தைகளும் எப்போது தமது சத்திய தேசத்திற்குத் திரும்புவார்கள்?” “எப்போது அந்த சத்திய தேசம் அழிக்கப்பட்டு உலகம் மீட்கப்பட்டு சமாதானம் உருவாகும்?”