HumourLIFE

சிரிக்க, சிந்திக்க | அரசியல் (பிழைப்பு) என்றால் என்ன?

மாயமான்

இது வட்சப்பில் வந்த ஒரு விடயத்தின் மொழிபெயர்ப்பு; சுவாரஸ்யமானது; இதில் வரும் பாத்திரம் எத்தனையோ இன, மத, தேசிய அடையாளங்களில் புகுந்து வந்திருக்கலாம். அவற்றில் இதுவுமொன்று.

விடயத்தின் தலைப்பு இதுதான்: அர்சியல் என்றால் என்ன?

பல முயற்சிகளின் பின்னர், யூதர் ஒருவர் இஸ்ரேலுக்குக் குடி புகுவதற்காக ரஷ்யாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார். மொஸ்கோ விமான நிலையத்தில் பொதிச் சோதனையின்போது லெனினின் சிலை ஒன்றை அவர் வைத்திருந்ததை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துவிட்டார்.

“என்ன இது” , அதிகாரி வினவினார்.

“”என்ன இது” என்று கேட்பது தவறு, தோழரே. யாரது? என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும். இதுதான் தோழர் லெனின். சமதர்மக் கோட்பாட்டுக்கான அத்திவாரத்தை எழுப்பி ரஷ்ய மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்கு வழிகோலியவர். நான் மிகவும் நேசிக்கும் அந்த நாயகனின் ஞாபகார்த்தமாக நான் இதை எடுத்துச் செல்கிறேன்”

மேலும் எதுவித சோதனைகளுமின்றி அந்த அதிகாரி பயணியை அனுப்பி வைத்தார்.

ரெல் அவிவ் விமான நிலையத்தில் சோதனைகளின்போது இஸ்ரேலிய சுங்க அதிகாரி ஒருவர் இச் சிலையைக் கண்டு விட்டார். “என்ன இது””, அதிகாரி வினவினார்.

“” என்ன இது” என்பது தவறான கேள்வி, அதிகாரியே. “யாரிது என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும். இது தான் லெனின். யூதனான என்னை ரஷ்யாவை விட்டுத் துரத்திய ஒரு கயவன். இச் சிலையை வைத்திருப்பதன் மூலம் நான் அவனைத் தினமும் தூஷிக்க முடியும்”

சுங்க அதிகாரி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வேறெந்தப் பரிசோதனையுமின்றி அவரை அனுப்பி விட்டார்.

தனது புதிய வீட்டில் ஆசுவாசமாக அடைக்கலம் கொண்ட பின்னர் ஒருநாள் நமது நண்பர் தனது குடிவரவைக் கொண்டாடுமுகமாக தன் நண்பர்களை அழைத்து விருந்துபசாரம் நடத்தினார். லெனினின் சிலை அங்கு காட்சிப் பொருளாக இருந்தது.

“யாரிது?”, ஒரு நண்பர் வினவினார்.

“நண்பரே, “யாரிது?” என்று கேட்பது தவறான கேள்வி. “என்ன இது?” என்று கேட்டிருக்க வேண்டும். இது பத்து கிலோ கிராம் சுத்த தங்கம். ரஷ்யாவிலிருந்து சுங்க வரி எதுவுமே செலுத்தாது நான் கொண்டுவந்திருக்கிறேன்”

அரசியல் என்பது ஒருவர் தன்னை எப்போதும் நல்லவராகவே காட்டிக்கொள்வதற்கு, வித்தியாமான மக்கள் கூட்டத்துக்கு வித்தியாசமான ‘கதை’களைச் சொல்வது….

(ஆங்கில மூலத்திலிருந்து தூஷணங்களை அகற்றிய பின்னர்…-இது என்னை நல்லவராகக் காட்டிக்கொள்வதற்காக.;))