சிரச ஊடகத்தை மூடுவதற்கு அரசு இரகசிய திட்டம்? – பாராளுமன்றத்தில் எதிர்கட்சி குற்றச்சாட்டு

இலங்கையில் பிரபல மகாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான சிரச ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சி உரிமத்தை மீளப்பெறுவதன் மூலம் அந் நிறுவனத்தை மூடிவிடுவதற்கு அரசு இரகசிய திட்டமொன்றைத் தீட்டி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நேற்று (07) சபையில் கேள்வி எழுப்பினார்.

மஹாராஜா நிறுவனத்தின்கீழுள்ள கப்பிட்டல் குரூபிற்குச் (The Capital Maharaja Organisation Limited) சொந்தமான சிரச தொலைக்காட்சி மற்றும் சிரச வானொலி ஆகியன இலங்கையில் சிங்கள மொழியில் ஒளி, ஒலிபரப்புக்களைச் செய்துவரும் ஊடகங்களாகும். இதைவிட, நியூஸ் ஃபெர்ஸ்ட் (News 1st), சக்தி ரீ.வி. (Shakthi TV), சக்தி எஃப்.எம். (Shakthi FM), வை எஃப்.எம் (Y FM) ஆகிய ஊடகங்களும் இக்குழுவில் அடங்குகின்றன.

கப்பிட்டல் நிறுவன ஊடகங்கள் ராஜபக்ச அரசை மிகவும் கடுமையாக விமர்சிக்கின்றன என்ற குற்றச்சாட்டு ஆளும் கட்சியினரால் பொதுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது. 2005-2015 கால மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலும் இந் நிறுவனம் ராஜப்கச ஆட்சியை விமர்சித்ததால் 2009 ஆம் ஆண்டு, சிரச தொலைக்காட்சியின் ஸ்ரூடியோ இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டது. ஜனவரி 6, 2009, அதிகாலையில் பன்னிப்பிட்டியவிலிருந்த சிரச குழுமத்தின் பிரதான ஸ்ரூடியோவுக்கு முகமூடிகளுடன் வந்த இனம் தெரியாத நபர்கள் இரவுப் பணியாளர்களைத் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு கிளேமோர் குண்டுகளைப் பொருத்தி வெடிக்கச் செய்ததன் மூலம் அங்கிருந்த நவீன உபகரணங்களுட்பட புதிதாக அமைக்கப்பட்டிருந்த அலுவலகம் முற்றாக எரிந்து சேதமானது. போர் பற்றிய செய்திகளை ஒளி, ஒலி பரப்புவதில் நாட்டுக்கு விசுவாசமில்லாது விடுதலைப் புலிகளின் வெற்றிகளுக்கு சிரச அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என அரச சார்பான ஊடகங்கள் சிரசவையும் அதன் உரிமையாளரான ராஜா மகேந்திரனையும் குற்றஞ்சாட்டியிருந்தன. இத் தாக்குதலின் பின்னால் கோதாபய ராஜபக்சவும் அவரது இராணுவமும் இருந்தன எனப் பலராலும் பேசப்பட்டது.

ஜனவரி 06, 2009 இல் குண்டுவைத்து அழிக்கப்பட்ட சிரச ஸ்ரூடியோ

நேற்று சபையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிரச குழுமத்திற்கு வழங்கப்பட்ட ஒலி, ஒளிபரப்பு உரிமங்களை மீளப்பெற்று அதை முற்றாக மூடிவிடுவதற்கு இரகசியத் திட்டம் தீட்டப்படுகிறது எனவும் இதற்காக அரசாங்கம் சில முக்கிய சட்ட நிபுணர்களோடு ஆலோசனை நடத்தியுள்ளதெனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சிரச அலுவலகத்துக்கு இன்னுமொரு தடவை கிளேமோர் குண்டுவைக்கும் திட்டம் அரசுக்கு உண்டோ எனவும் இதற்கு அரசு பதிலளிக்கவிளக்கவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அப்போது சபையில் சலசலப்பைத் தொடர்ந்து பிரேமதாச பேசுவதற்குப் போதிய நேரத்தை வழங்காமல் அவரது மைக்கிரோஃபோனைத் துண்டித்துவிட்டு சபாநாயகர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கு அதிக நேரத்தைக் கொடுத்திருந்தார். இதனால் எரிச்சலுற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பைத் தெரிவ்த்திருந்தனர்.

இதனால் சபையில் ஏற்பட்ட அமளி துமளியைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன பதிலளித்தபோது சிரச ஊடக உரிமத்தை மீளப்பெறுதற்கான திட்டமெதுவும் கோதாபய தலைமையிலான அரசாங்கத்திடமில்லை எனத் தெரிவித்தார்.