‘சித்ரா’ மரியதாஸ் மறைவு
சிவராசா கருணாகரன்
‘சித்திரா அச்சகம்‘ மரியதாஸ் காலமாகிய செய்தியை இன்றே அறிந்தேன். கடந்த 08.11.2024 இல் காலமாகியிருக்கிறார். பெருந்துயரம். ஏராளம் நினைவுகள்.
நாற்பது ஆண்டுகள் நட்பு. 1985 இலிருந்து 1996 வரை இருவரும் இணைந்து வேலை செய்திருக்கிறோம்.
1982 இல் M.A. நுஃமான் மொழிபெயர்த்த பாலஸ்தீனக் கவிதைகள் ‘சித்திரா அச்சகத்தில்‘தான் அச்சிடப்பட்டது.
செங்கை ஆழியானின் புவியியல் நூல்கள் உட்படப் பல வெளியீடுகள் அங்கேயே அச்சாகின.
இதை விட அப்போது யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பல இலக்கிய நூல்களும் சித்திரா அச்சகத்திலேயே அச்சிடப்பட்டன.
1982.01.02 அன்று, ‘புதியபாதை‘ ஆசிரியரும் புளொட் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான தோழர் சுந்தரம் (ச. சிவசண்முகமூர்த்தி) சித்திரா அச்சகத்தில் வைத்தே வி.பு களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அச்சகம் சீல் வைக்கப்பட்டது. மரியதாஸ் மீது ஏராளம் விசாரணைகள், பிரச்சினைகள்…
1985 இல் புதிய சித்திரா அச்சகமாக – சித்திரா அச்சகத்தை மாற்றியிருந்தார் மரியதாஸ்.
ஈரோஸ் இயக்கத்தின் ‘பொதுமை‘, ‘நாங்கள்‘ ஆகிய இதழ்கள் புதிய சித்திரா அச்சகத்திலேயே அச்சிடப்பட்டன.
அப்போது சின்னபாலாவுக்கும் (பாலநடராஜன் – இளையவன்) மரியதாஸூக்கும் இடையில் மிக அன்னியோன்னியமான உறவு. நான் பொதுமை, நாங்கள் இதழ்களின் பணிகளில் இருந்தேன்.
எழுத்தாளர் வளவை வளவன் அப்பொழுது புதிய சித்திரா அச்சகத்தில் பணியாற்றினார்.
அருளரின் ‘லங்கா ராணி‘ இரண்டாம் பதிப்பும் இங்குதான் அச்சாகியது.
பின்னர் புதிய சித்திரா அச்சகத்தை ஈரோஸ் இயக்கத்துக்கு விற்றார் மரியதாஸ்.
அதற்குப் பிறகு அவர் AJ Printers எனப் புதிய அச்சகமொன்றை மல்லாகத்தில் ஆரம்பித்தார். AJ Printers எனப் புதிய பெயரில் அச்சகத்தை ஆரம்பித்தாலும் எல்லோருக்கும் அவர் ‘சித்திரா மரியதாஸ்‘, ‘சித்திரா முதலாளி‘தான்.
1991 – 1996 வரையான ‘வெளிச்சம்‘ சஞ்சிகை மரியதாஸ் அவர்களிடமே (AJ Printer) அச்சிடப்பட்டது.
வெளிச்சம் சிறுகதைகள், வெளிச்சம் கவிதைகள் உட்பட சில நூல்களும் மரியதாஸினால் அச்சிடப்பட்டவை.
அச்சுப் பதித்தலை ஒரு கலையாகச் செய்வதில் பேரார்வம் கொண்டிருந்தவர் மரியதாஸ்.
இதனால்இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், புதுவை இரத்தினதுரை, சத்துருக்கன், இயல்வாணன், மயிலணி சிவா, வளநாடன், நா.யோகேந்திரநாதன், கவிஞர் வேலணையூர் சுரேஸ், ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தி, ஓவியர் தயா, ஈழநாடு மாணிக்கம் எனப் பலர் மரியதாசுடன் நெருக்கமாக இருந்தனர்.
அதற்கு முன் (1980 களில்)அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், செம்பியன் செல்வன், கி.பி. அரவிந்தன் (சுந்தர்) மு. நித்தியானந்தன் எனப் பலருக்கு அறிமுகமாகியிருந்தார் மரியதாஸ்.
‘ஆதாரம்‘ இதழும் அங்கேதான் அச்சிடப்பட்டது.
இப்படிப் பல சமூக, அரசியல், இதழியல் வரலாற்றோடு சம்மந்தப்பட்டவர் மரியதாஸ். இந்த வரலாற்று வாழ்க்கையில் அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல.
மிகச் சிறந்த மனிதர். அன்பாளர். அடிமட்டத்தில் ஒரு அச்சகத் தொழிலாளியாக ஸ்ரீலங்கா அச்சகத்தில் தன்னுடைய 16 வயதில் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து தன்னுடைய முதுமைக்காலம் வரையான பல கதைகளைச் சொல்லியிருக்கிறார்.
திருமணம் ஆகிய மறுநாளே வேலைக்குப் போனாராம். அப்போது ஸ்ரீலங்கா அச்சகத்தில் பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுக் கொண்டிருந்தன. அதனால் விடுமுறை எடுக்க முடியாத நிலை. அந்தச் சூழலைப் புரிந்து கொண்டு தான் வேலைக்குப் போனதைக் கண்ட ஸ்ரீலங்கா அச்சக முதலாளி, கண்கள் கலங்கத் தன்னைக் கட்டிப்பிடித்து நன்றி சொன்னதை அடிக்கடி சொல்வார்.
அதன்படியே சித்திரா அச்சகம் உருவாகுவதற்கும் ஸ்ரீலங்கா அச்சக முதலாளி மரியதாசுக்கு ஊக்கமாக இருந்திருக்கிறார்.
மரியதாஸ் அண்ணை, மூனா, முதலாளி, மரிதாஸ் மாஸ்டர், மரியதாஸ் அங்கிள்… என அவரைப் பலரும் அன்பாகவும் மதிப்பாகவும் அழைப்பதை கண்டிருக்கிறேன்.
மரியதாஸ் அவர்களைப் பற்றிய நினைவுகள் பல.
அவற்றை எழுத வேண்டும். எழுதியே தீர வேண்டும். நாளை மறுதினம் எழுதி விடுவேன்.
இனிப்பும் கசப்புமான எத்தனையோ வழிகளால் வாழ்க்கை அழைத்துச் செல்கிறது?
இறுதியில் உங்களைப் பார்க்க முடியாமல் போய்விட்டது மரியதாஸண்ணை.
அதொரு தீராக் கவலை.
அஞ்சலி
(நாம் என்றுமே பிரிய முடியாதவர்களல்லவா!)
நன்றி: சிவராசா கருணாகரனின் முகநூல் பதிவு
