தலையங்கம்

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கதிரவனே ஆதி பகவன், கதிரவனே காலத்தைத் தீர்மானிப்பவன், கதிரவனே எமது இருப்பையும், ஆயுளையும், இறப்பையும் தீர்மானிப்பவன். அவனே எங்கள் ஆதியும் அந்தமும் என்று கருதிய நமது முன்னோர், அவன் தானே தீர்மானித்த கிழக்குத் திசையின் சரியான புள்ளியில் இருந்து வருட பயணத்தை ஆரம்பிக்கும் முதல் நாளை வருடப் பிறப்பு என்றார்கள்.

வாழ்வின் எந்தவொரு நிகழ்வினதும் முதலாம் நாளுக்கென்றொரு சிறப்புண்டு. பள்ளிக்கு முதல் நாள், வேலைக்கு முதல் நாள், காதலை ஏற்றுக்கொண்ட முதல் நாள், கல்யாணத்தின் முதல் நாள், புதுமனையுள் கால் பதிக்கும் முதல்நாள் என எல்லாமே மனதை நிறைக்கும் மகிழ்ச்சிகரமான நாட்கள். அது தொடர்ந்தும் நிலைக்க வேண்டுமென நினைப்பது இயல்பு. அதனால் அதைக் கொண்டாட விரும்புவதும் இயல்பு.

மனித மருத்துவத்தில் placebo என்றொரு பதமுண்டு. நம் மனதை ஏமாற்றி சில காரியங்களைச் சாதிக்க மருத்துவர் பாவிக்கும் ஒரு கருவி / உத்தி. சீனிக் குளிசையத் தந்துவிட்டு ‘இந்த மருந்தை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு எடு’ என்பார். வியாதி மாறிவிடும். ஏனென்றால் வியாதி உடம்பில் இல்லை மனத்தில் தான் என்பதை அறிந்துதான் அவர் இந்த placebo என்ற சீனிக் குளிசையத் தருகிறார். அம்புலி மாமாவைக் காட்டி அம்மாமார் சாப்பாடு தீத்துவதும் இந்த placebo முறைதான்.

புது வருடத்தில் மனிதரின் வாழ்வில் புத்துணர்வும், புது மகிழ்வும் தங்கும் என்று எம்மில் பலர் நம்புவதும் அது பலனளிக்குதோ இல்லையோ அது தந்த புத்துணர்வில் சில காரியங்களை நாம் அமர்க்களமாகச் செய்து முடிக்கவும் அதுவே காரணமாகிவிடுவதுமுண்டு.

என்னவோ, இன்னுமொரு 50 அல்லது 100 ஆண்டுகள் கழிய ஒரு விஞ்ஞானி வந்து, ‘சித்திரை 1 இல் வரும் சூரியனிலிருந்து அபார சக்தி பிறக்கிறது’ என்று சொன்னால் ஆச்சரியப்படக் கூடாது. ஏனென்றால் இன்றைய விஞ்ஞானமே நேற்றய மனிதரின் வாழ்வுத் தடங்களின் மீள்வரைவுகள் தான்.

ஆதி பகவன் பயண முதலாம் நாளான இன்று எல்லோரும் புத்துணர்வுடன் அவன் பாதையில் பயணிக்க எமது மனமார்ந்த வாழ்த்து!