சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் பூசாரிகளுக்குமிடையே தொடரும் இழுபறி
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் இந்துமத அறக்கட்டளைகள் திணைக்களத்துக்கும் கோவில் பூசாரிகளுக்குமிடையே புதிய தகராறொன்று உருவாகியுல்ளது. தமிநாடு மாநிலத்திலுள்ள பல முக்கியமான கோவில்களின் நிர்வாகம் தமிழ்நாடு அரசின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந் நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய தகவல்கள் மற்றும் அதன்பாலுள்ள சொத்துக்கள் பற்றிய விடயங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு தற்போது அக் கோவிலை நிர்வாகித்துவரும் பூசாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் இப் புதிய தகராறு எழுந்திருக்கிறது.
1880 களிலிருந்தே கோவில் நிர்வாகத்தில் இருக்கும் பல சீர்கேடுகள் பற்றிய தகவல்கள் உள்ளனவெனவும் அப்படியிருந்தும் ஏன் தமிழ்நாடு அரசு புதிதாக அவற்றைக் கிண்டி எடுக்க முயற்சிக்கிறது எனவும் கூறி இத் தகவல்களைத் தருவதற்கு கோவில் பூசாரிகள் நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது.
வரலாறு
கோவில் ஒரு பொதுமக்கள் சொத்து எனக்கூறி இக் கோவிலை நிர்வாகிக்கும் உரிமை தமிழ்நாடு அரசுக்கே உண்டு என 1880 இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தியா சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் 1951 இல் தமிழக அரசின் இந்துமத அறக்கட்டளைகள் திணைக்களம் இக் ம்கோவிலை நிர்வகிப்பதற்கென ஒரு நிறைவேற்று அதிகாரியை நியமித்திருந்தது. இக் கோவிலை ஏற்கெனவே நிர்வகித்துவந்த பூசாரிகளுக்கு இது ஏற்புடையதாக இருக்கவில்லை. ஆனால் தாமே இக் கோவிலின் நிர்வாகத்துக்கு உரித்துடையவர்கள் எனக்கூறி அவர்கள் இத் தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர். இதிலிருந்து தமிழ்நாடு அரசுக்கும் பூசாஅரிகளுக்குமிடையே இக் கோவில் நிர்வாகம் தொடர்பாக இழுபறிநிலை தொடர்ந்து வருகிறது.
தீட்சிதர்கள் என அழைக்கப்படும் இப்பூசாரிகள் பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு நுண் குழுமம் ஆகும். புராணக்களுக்கு முந்தைய காலந்தொட்டு இமாலயப் பிரதேசத்தில் வாழ்ந்த இப் பூசாரிகளை சோழர்கள் கோவில் நிர்வாகத்துக்காகத் தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது சுமார் 1500 பேர மட்டும் கொண்டிருக்கும் இக் குழுமம் தம்மை மிகத் தனித்துவமானவர்கள் எனக்கூறுவதோடு தமக்குள் மட்டுமே திருமணம் செய்து தமது தனித்துவத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். கடடைசிச் சோழ அரசன் இக் கோவில் நிர்வாகத்தை இப் பூசாரிகளிடம் கையளித்தான் எனவும் அன்று முதல் இக் கோவிலின் நிர்வாகம் இக் குழுமத்தின் கைகளை விட்டுச் சென்றதில்லை எனவும் கூறப்படுகிறது. 1951 இல் இக் கோவில் நிர்வாகம் தமைழக் அரசுக்கு நீதிமன்றத்தினால் கையளிக்கப்பட்டதிலிருந்து இப் பூசாரிகள் இத் தீர்மானத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.
இக் கோவில் நிர்வாகம் தொடர்பாகப் பல தடவைகள் வழக்குகளும், மேல் முறையீடுகளும் இரண்டு தரப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 2014 இல் உச்ச நீதிமன்றம் கோவில் நிர்வாகத்தை பூசாரிகளுக்கு வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இதிலிருந்து கோவில் நிர்வாகத்தை பூசாரிகளே கவனித்து வருகின்றனர். அப்போது ஆட்சியிலிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா இப் பூசாரிகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய மறுத்துவிட்டார்.
தற்போதைய பிரச்சினை
கோவிட் பெருந்தொற்று முடிவடைந்து பெப்ரவரி 2022 இல் நாடு வழமைக்குத் திரும்பியபோது சிதம்பரம் நடராஜர் கோவிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டது. ஆனால் பூசாரிகள் பக்தர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். பெப்ரவரி 13 அன்று ஒரு தாழ்த்தப்பட்டவரெனக் கருதப்படும் ஒரு பெண்ணை நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுத்திருந்தது. கனகசபைக்குள் நுழைய முயற்சித்த 37 வயதுடைய இப் பெண்ணை வாசலில் வைத்து அவமதிக்கும் சம்பவத்தைக் காட்டும் காணொளி வலைதளங்களில் பரவியிருந்தது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து 20 பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது எனினும் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக எழுந்த அழுத்தங்களினால் பொதுமக்கள் அனைவரையும் கனகசபைக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என மே 2022 இல் தமிழக அரசு கட்டளையொன்றைப் பிறப்பித்தது. இருப்பினும் கோவிட் பெருந்தொற்றைக் காரணம் காட்டி கனகசபைக்குள் பொதுமக்கள் செல்வதற்கு பூசாரிகள் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து நிர்வாகத்தில் சீர்கேடுகள் இருப்பதாகவும் பணம் தவறான வழிகளில் கையாடப்படுவதாகவும் பல முறைப்பாடுகள் வெளிவந்தவண்ணமுள்ளன. தமிழ்நாட்டின் பல கோவில்களிலும் அர்ச்சனைக்குக் கொடுக்கும் பணத்துக்கு பற்றுச்சீட்டுக் கொடுக்கப்பட்டாலும் சிதம்பரத்தில் அப்படி நடைபெறுவதில்லை. சில வேளைகளில் பத்தர்களிடமிருந்து ரூ 500 வரை அர்ச்சனைகளுக்கென அறவிடப்படுகிறது.
மே 26 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கட்டளையின் பிரகாரம் இந்துமத அறக்கட்டளைகள் திணைக்களம் பூச்சரிகள் நிர்வாகத்தின் செயலாளருக்கு எழுதிய கடிதமொன்றில் கோவில் நிர்வாகத்தில் பல மோசடிகள் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன எனவும் அவற்றை விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் 2014 இல் பூசாரிகளுக்கு முழு நிர்வாக உரிமையும் அளிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்துப் பத்திரங்களும் பரிசீலிக்கப்படவேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு கோவிலின் வரவு செலவுகள், சொத்துக்கள், நகைகள் ஆகியன பற்றிய தகவல்களையும் பரிசீலிக்க வேண்டுமென அறக்கட்டளைத் திணைக்களம் கோரியிருந்தது. இருப்பினும் கோவில் ஒரு பொதுச் சொத்து அல்ல எனவும் இது அரசாங்கத்தினால் ஒரு சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை எனவும் தம்மை மதக்கடமைகளைச் செய்ய முடியாமல் அரசு தடுக்கிறது எனவும் பூசாரிகளின் செயலாளர் அரசின் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பூசாரிகளைப் பிரதிநித்துவப்படுத்தும் வழக்கறிஞரின் கருத்துப்படி கோவில் பொதுச்சொத்தல்ல எனவும் கோவில் நிவாகத்தைப் பரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் இது உச்ச நீதிமன்றத்தில் வாதாடப்படுமெனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அறக்கட்டளைத் திணைக்கள நிர்வாகிகள் கோவிலுக்குச் சென்ற போது கோவில் நிர்வாகம் பணம் பெற்றதற்கான எதுவித பற்றுச்சீட்டுகளைய்ம் சமர்ப்பித்திருக்கவில்லை. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பொதுமக்களிடமிருந்து கோவில் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றிய முறைப்பாடுகளைச் சேகரித்து வருகிறது. இதுவரை 6,628 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் இதை வைத்துக்கொண்டு கோவில் நிர்வாகத்தை தமது கைகளி எடுப்பதற்கு தமிழக அரசு முனையுமெனவும் கூறப்படுகிறது.