சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் வழிபாடு செய்ய அனுமதிகோரிப் போராட்டம் – தீட்சிதர்கள் எதிர்ப்பு
1885 இலிருந்து தொடரும் பிரச்சினை
தமிழ்நாடு, கூடலூரில் அமைந்திருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் பக்திப் பாடல்களைப் பாடியும், இதுவரை பிராமாண பூசாரிகளால் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் சிதம்பர மேடை என அழைக்கப்படும் கருவறைக்குள் தம்மை அனுமதிக்கும்படி கோரியும் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தீட்சிதர்கள எனப்படும் பூசாரி வகையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இக் கோவிலில் தற்போது சமஸ்கிருதத்தில் வழிபாடு செய்யப்படுவதுடன் சாதி முறையிலான இடவொதுக்கீடுகளும் நடைமுறையிலுள்ளன. இதை எதிர்த்து போராடிவரும் மக்களுக்கு திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிட விடுதலைக் கழகம், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்படப் பல அமைப்புகள் தமது ஆதரவை வழங்கி வருகின்றன.
பெப்ரவரி 13 அன்று, இப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜயஷீலா என்னும் சாதிய ரீதியில் ஒதுக்கப்பட்ட பெண், ‘கனகசபை’ என அழைக்கப்படும் புனித மேடையில் ஏறமுற்பட்டதைத் தொடர்ந்து அவரை அச்சுறுத்தியதுடன் அவரைத் துரத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் 20 பூசாரிகள் மீது வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக இவ்வமைப்புக்கள் பெப்ரவரி 28 முதல் போராட்டத்தில் குதித்துள்ளன. வழக்குப் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பூசாரிகளையும் கைதுசெய்யும்படியும், சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளையின் கீழ் கொண்டுவரும்படியும் அதே வேளை சிதம்பரம் மேடையில் பக்தர்கள் தமிழில் வழிபாடுகளை இசைப்பதற்கு அனுமதி வழங்கவேண்டுமெனவும் இவ்வமைப்புகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம், தெய்வத் தமிழ் வழிபாட்டு இயக்கம் ஆகிய சிறிய அமைப்புக்களின் தாயமைப்பாக இயங்கும் தெய்வத் தமிழர் பேரவை என்ற அமைப்பு இப் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறது. முக்கியமான நிகழ்வுகளில் தமிழில் சடங்குகள் செய்யப்பட வேண்டும், தமிழில் ஓதுதல் இடம்பெற வேண்டும் என இவ்வமைப்பு நீண்டகாலமாகப் போராடி வருகிறது.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னர் சிதம்பரம் மேடையில் தமிழில் வழிபாடுகளைப் பாடுவதற்கு நிர்வாகம் அனுமதித்திருந்ததென்றும் பின்னர் தொற்றின் காரணமாக மேடையில் மக்கள் கூடுவது நிறுத்தப்பட்டிருந்தது எனவும் ஆனால் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதுடன் தீட்சிதர்கள் பக்தர்களுக்கு இவ்வனுமதியை மறுத்துவிட்டார்கள் எனவும் தெய்வத் தமிழ் வழிபாட்டு இயக்க உறுப்பினர் மோகனசுந்தரம் அடிகள் தெரிவித்துள்ளார். இதே வேளை தாம் தெரிவு செய்யும் அடியார்களைத் தீட்சிதர்கள் இம்மேடையில் வழிபாடு செய்ய அனுமதிக்கிறார்கள், இது சாதிய ரீதியில் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் மற்றும் அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்கி மார்ச் 1 முதல் 5 ஆம் திகதி வரை தாம் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாகவும் இதற்குள் இந்து சமய அறக்கட்டளை அமைச்சு மற்றும் பொலிசாரின் தலையீட்டால் ஒரு தீர்வு கொண்டுவரப்படுமெனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அது நடைபெறாத பட்சத்தில் போராட்டம் தொடரவிருப்பதாகவும் மோகனசுந்தரம் அடிகள் தெரிவித்துள்ளார்.
“சமஸ்கிருத வழிபாட்டு முறைகளுக்கு எதிராக தேவார திருவாசகங்களைத் தமிழில் பாடித் தமிழ்ச் சைவ மரபைப் பேணுவதற்கான போராட்டங்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண்டுகாலமாக நடைபெற்ரு வருகின்றன. ராஜ ராஜ சோழன் காலத்திற்கு முன்னர் இருந்தே பல வழிபாட்டு நூல்கள் சிதம்பரம் கோவிலில் பூட்டிய அறைக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. ராஜ ராஜன் சோழ ஆட்சிக்கு முன்பிருந்தே இக் கோவிலில் பூசைகளைச் செய்வதற்கென வடக்கிலிருந்து பிராமண தீட்சிதர்கள் கொண்டுவரப்பட்டிருந்தார்கள். சிதம்பரம் கோவில் சைவ மரபினருக்கு இன்றியமையாத ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது. தேவாரம், திருவாசகம் ஆகிய மறைகளைத் தீட்சிதர்களே அறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள். இவை வெளியே கொண்டுவரப்படும்வரை போராட்டம் தொடரும்” என இப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வழக்கறிஞர் விடுதலை ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தீட்சிதர்களுக்கெதிரான போராட்டம் முதலில் 1885இல் ஆரம்பிக்கப்பட்டது. இக் கோவிலை ஒரு தனியார் கோவிலாகப் பிரகடனப்படுத்தும்படி தீட்சிதர்கள் அப்போது மதறாஸ் உயர்நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்தார்கள். ஆனாலும் நீதிமன்றம் அக் கோரிக்கையை நிராகரித்து இக் கோவில் பொது வழிபாட்டுக்குரிய ஒன்று எனத் தீர்ப்பளித்திருந்தது. பின்னர், 1925 இல் இந்து சமய அறக்கட்டளைத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டபோது இக் கோவிலை அத் திணைக்களத்திற்குள் கொண்டுவருவதற்கு விதிவிலக்குத் தரும்படி தீட்சிதர்கள் முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் அனுமதித்ததுடன் 9 பேர் கொண்ட குழுவொன்றை தீட்சிதர்கள் நியமிக்கவேண்டுமெனவும் அதுவே அரசாங்கத்துடன் தொடர்புகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் பணித்திருந்தது.
இருப்பினும் அரசாங்கத்தின் இப் பணிப்பை எதிர்த்து, 1935 இல், இக் கோவில் ஒரு தனியார் நிர்வாகத்திலேயே இருக்கவேண்டுமெனவும் தீட்சிதர்கள் கோரிக்கயொன்றை முன்வைத்தனர். இக் கோரிக்கை மீதான தீர்ப்பு இழுபறியிலிருந்து பின்னர் 1987 இல் கோவில் நிர்வாகத்தைக் கவனிப்பதற்கென அரசாங்க நிர்வாகி ஒருவரை அரசு நியமித்தது. இதை எதிர்த்து தீட்சிதர்கள சார்பில் அவர்களின் செயலாளர் ஒருவர் 2009 இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்திருந்தார். தீட்சிதர்களினால் கோவில் வருமானம் மோசடை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் கோவில் நிர்வாகம் அரசுக்கு உரியது என இவ்வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2014 இல் உச்ச நீதிமன்றம் இத் தீர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு கோவில் நிர்வாகம் தீட்சிதர்களுக்கே உரியது எனத் தீர்ப்பளித்திருந்தது.
சிதம்பரம் கோவிலின் நிர்வாகம் மீண்டும் இந்து சமய அறக்கட்டளையின் கீழ் கொண்டுவரப்படவேண்டுமெனவும் இதற்கு தற்போதைய தி.மு.க. அரசு வழிசெய்யவேண்டுமெனவும் போராடும் அமைப்புகள் கோரிக்கையை முன்வைத்துள்ளன.