Spread the love

முன்னாள் யூனியன் உள்ளக மற்றும் நிதி அமச்சர் ப.சிதம்பரம் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினால் (CBI) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா (INX Media) விவகாரத்தில் பதை துஷ்பிரயோகம், பணத் துவையல் (money laundering) போன்ற விடயங்களில் சம்பந்தப்பட்டிருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்றிரவு சீ.பி.ஐ. அதிகாரிகள் அவர் வீட்டின் மதில்கள் மீது பாய்ந்து அவரது வீட்டுக்குள் சென்று அவரைக் கைதுசெய்தனர். வியாழனன்று சீ.பி.ஐ. விசேட நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படுவார். அவரது கைதுக்கான பிடியாணையை உரிய நீதிமன்றம் பிறப்பித்திருந்தது என சீ.பி.ஐ. பேச்சாளர் கூறினார்.

அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்படதைத் தொடர்ந்து ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பூரண மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா விடயத்தில் மோசடி நடைபெற்றதெனவும் அதன் காரணமாக அவரது மகன் கார்த்தி 23 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டு பின்னர் டெல்ஹி உயர்நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் எனவும் அறியப்படுகிறது. இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட பீட்டர் முகர்ஜியும் அவரது மனைவி இந்திராணியும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்திராணியின் முந்தய திருமணத்தின் வழியாகப் பெற்ற மகள் ஷீனா போராவின் கொலைக் குற்றம் காரணாமாகவே அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். ஐ.என்.எக்ஸ் மீடியா (பி) லிட் நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த இந்திராணி கொடுத்த வாக்குமூலத்தின் காரணமாகவே கார்த்தி கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்திராணி ஜூலை 11இல் அப்ரூவராக மாறியிருந்தார்.

கார்த்தி சிதம்பரம் தமிழ்நாடு சிவகங்கை தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரியப்பட்டிருந்தார். 2007 இல் சிதம்பரம் அமைச்சராக இருக்கும்போது ஐ.என்.எக்ஸ். நிறுவனம் வெளிநாடொன்றில் இருந்து 305 கோடி பணத்தைப் பெற்றிருந்தது எனச் சீ.பீ.ஐ. குற்றஞ்சாட்டியிருந்தது.

கார்த்தி பெப்ரவரி 18, 2018 அன்று இங்கிலாந்திலிருந்து திரும்பும்போது சி.பி.ஐ. இனால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் மீதான பிணை அவ்வப்போது நீடிக்கப்பட்டு வருகிறது.

ஐ.என்.எக்ஸ். விடயத்தில் அமைச்சர் சிதம்பரத்துக்கு பாதுகாப்புத் தர டெல்ஹி உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அவரைக் கைது செய்தது.

அமித் ஷா மீது பழிவாங்கல்?

காங்கிரஸ் ஆட்சியின்போது பத்து வருடங்களாக உள்ளக, நிதி அமைச்சுகள் போன்றவற்றை நிர்வகித்த, கட்சியின் மூத்த அமைச்சரான சிதம்பரம் கைதுசெய்யப்பட்டது ஒரு வஞ்சம் தீர்க்கும் நடவடிக்கை எனக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விசனம் கொண்டுள்ளனர்.

சிதம்பரம் கைது | அமித் ஷா பழிவாங்குகிறாரா? 1
சொஹ்றபுதீன் என்கவுண்டர் – அமித் ஷா மீது வழக்கு

2005ம் ஆண்டு அமித் ஷா குஜராத் உள்ளக அமைச்சராக இருந்தபோது சொஹ்றாபுதீன் என்ற பிரபல கேடி காவல்துறையின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார். இக் கொலையின் பின்னணியில் அமித் ஷா இருந்தார் என்ற சந்தேகத்தில் அவர் விசாரிக்கப்பட்டார். அமித் ஷாவின் ஒப்புதலுடன் நடத்தப்பட்ட என்கவுண்டரில் தான் சொஹ்றாபுதீன் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது சுமத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் பணிப்பின்பேரில் அவ்வழக்கு ஜனவரி 2010 இல் சீ.பீ.ஐ. யிடம் கையளிக்கப்பட்டது. அப்போது உள்ளக மந்திரியாக இருந்தவர் ப. சிதம்பரம் அவர்கள்.

Related:  ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள்

ஆற் மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 2010 இல் சொஹ்றாபுதீன் கொலை வழக்கில், கடத்தல், பணம் பறித்தல், கொலை ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் அமித் ஷாவை சீ.பீ.ஐ. கைது செய்தது. அமித் ஷா பிணையில் செல்ல விண்ணப்பித்த போது, சீ.பீ.ஐ. குஜராத் உயர் நீதிமன்றத்தில் அதை எதிர்த்து விண்ணப்பித்தது. அமித் ஷாவைப் பிணையில் செல்ல அனுமதித்தால் அவர் தன் அரசியல் பலத்தைப் பாவித்து சாட்சிகளைக் குழப்பவோ, மிரட்டவோ முயற்சிக்கலாம் என சீ.பி.ஐ. காரணம் கூறியது.

அக்டோபர் 29, 2010 இல் அமித் ஷா பிணையில் விடப்பட்டார். மறு நாள், குஜராத் நீதிமன்றம் வார விடுமுறையில் மூடப்பட்டிருந்தபோது, சீ.பீ.ஐ., நீதிபதி அப்ராப் அலமைச் சந்தித்து அமித் ஷாவை குஜராத் மாநிலத்திலிருந்து வெளியேற்றி இரண்டு வருடங்களுக்கு அவர் உள்ளே வரமுடியாது என்ற கட்டளையையும் பெற்றுக்கொண்டது. 2012 வரை அமித் ஷா குஜராத் மாநிலத்துக்குள் நுழைய முடியவில்லை. சீ.பீ.ஐ. யைத் தமது அரசியல் பழிவாங்கல்களுக்குப் பாவிக்கிறார்கள் என சிதம்பரத்தையும் காங்கைரஸ் கட்சியையும் அமித் ஷா அப்போது குற்றம் சாட்டியிருந்தார். டிசம்பர் 2014 இல் அமித் ஷா சகல குற்றங்களிலுமிருந்தும் விடுவிக்கப்பட்டார். அப்போது நரேந்திர மோடியின் அரசு ஆட்சியிலிருந்தது.

அமித் ஷா நிரபராதியாக இருந்தும் காங்கிரஸ் அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டவர் என அப்போது பா.ஜ.க. குற்றஞ்சாட்டியிருந்தது. இப்பொழுது ஐ.என்.எக்ஸ் விடயத்தில் சிதம்பரம் நிரபராதி என்றும் பா.ஜ.கா. வினால் அவர் துன்புறுத்தப்படுகிறார் என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது.

Print Friendly, PDF & Email
சிதம்பரம் கைது | அமித் ஷா பழிவாங்குகிறாரா?
ப.சிதம்பரம்

சிதம்பரம் கைது | அமித் ஷா பழிவாங்குகிறாரா?