சிங்கள வசந்தம்: ராஜபக்சக்களின் முடிவின் ஆரம்பம்?
மாயமான்
இறுதியாகக் கிடைத்த செய்திகளின்படி பல் வகையான துறைகளையும் சேர்ந்த படித்த இளைஞர்கள் இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது
நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் இலங்கையின் மக்கள் கொந்தளிப்பு புதிய உயரங்களை எட்டுகிறது. நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது சில அரசியல்வாதிகள் எரியும் மக்கள் நெஞ்சங்களில் குளிர்காய முற்பட்டாலும் பலர் இந் நெருப்பில் கருகிப் போவதற்கான சாத்தியங்களே உண்டு.
இச் சம்பவங்களைக் கர்மாவே வழிநடத்துகிறது என்று கர்மா மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அடித்துச் சொல்கிறார்கள். பெயர் என்னவோ, ராஜபக்சக்கள் வைத்த பொறியில் அவர்களே விழுந்திருக்கிறார்கள். சரி அடுத்து என்ன நடக்கப் போகிறது?
ஜனாதிபதியின் உற்ற நண்பரும் கூசா தூக்கியுமான சர்வ வல்லமை பொருந்திய அமைச்சர் ஜோன்ஸ்டன் ஃபெர்ணாண்டொ கூறுவதைப் பார்த்தால் ஜனாதிபதியைப் பதவியில் அமர்த்திய அதே 6.9 மில்லியன் மக்கள் இன்னமும் ஜனாதிபதியின் பின்னால் நிற்கிறார்கள் என்பதை உறுதிசெய்கிறார். அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலின்போது பிக்குமார் கொடுத்த தாமரை மொட்டுக்களை வாங்கி வாக்குகளினால் வணக்கம் செலுத்திய அதே 6.9 மில்லியன் மக்களும் இப்போது தடிகள் பொல்லுகளுடன் ஜனாதிபதியின் பின்னால் நிற்கிறார்கள். எதற்கென்று சொல்லத் தேவையில்லை. அந்த விடயத்தில் ஃபெர்ணாண்டோ முற்றிலும் சரி.
தற்போதைய மக்கள் எழுச்சிகுத் தலைமை தாங்க கட்சிகளோ காவிகளோ முற்பட்டாலும் மக்கள் அவர்களை அடித்துத் துரத்திவிட்டு முன்னகர்கிறார்கள். புதிதாகப் பிறந்த குழந்தையை ஏந்திக்கொண்டு இளம் தாயும் தந்தையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைப் பார்க்க மக்கள் கொதிப்பின் ஆழத்தைப் புரிந்துகொள்ளக்கூடியதாகவிருக்கிறது. அரபு வசந்தம் போல இதையும் ஒரு ‘சிங்கள வசந்தம்’ என்று அழைப்பதற்கான அத்தனை தகுதிகளும் உண்டு.
சிங்கள வசந்தத்துக்குத் தலைமைகள் இல்லை எனினும் அதன் பலம் கடல் கீழ் சுனாமியாக ஆகினால் நிலைமை என்ன? தலைவர்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டால் நாட்டை வழிநடத்துவது யார். எனவே சுனாமி கரையை வந்து சேர்வதற்குள் ஒரு காபந்து அரசாங்கத்தைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இல்லாதபோது தந்திரவாதிகளான ராஜபக்சக்கள் தமது நண்பர்களான இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்து விடுவார்களோ என்ற அச்சமும் சிலரது மனங்களில் எழுகிறது.
ரணில் தலைமையில் தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டமொன்று அடைகாப்பில் இருந்தது என்கிறார்கள். ரணிலுக்குப் பின்னால் எவரும் செல்ல விரும்பாவிட்டாலும், வேறு யாரிடமும் ஆட்சி போவதை விட ரணிலிடம் ஆட்சியைக் கொடுப்பதனால் ராஜபக்சக்களுக்கு எந்தவித ஆபத்தும் வரமாட்டாது என்பது திண்ணம். ரணிலுக்கும், கோதாபயவுக்கும் அந்தளவு புரிந்துணர்வு உண்டு என்பது பலதடவைகள் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தற்போதுள்ள நிலைமைக்கு அடிப்படைக் காரணம் 20 ஆவது திருத்தம். அதன் மூலம் பிரதமர் ராஜபக்சவிடமிருந்து பலம் பறிக்கப்பட்டு ஜனாதிபதி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டதற்காக 6.9 மில்லியன் மக்கள் அவருக்கு அளித்த பரிசு அது. ஆனால் அதைச் சாத்தியமாக்கியது ஜனாதிபதி மஹிந்த என்பதில் சந்தேகமில்லை. விடுதலைப் புலிகளின் மீதான யுத்தத்தின்போது கோதாபய பாவித்த அதே யுக்தியைத் தான் ஜனாதிபதியாக வந்ததும் பாவித்திருக்கிறார். போரின்போது அவர் தனது ஈவிரக்கமற்ற இராணுவ சகபாடிகளுக்கு ‘நீங்கள் எதையும் செய்யுங்கள்’ என்ற திறந்த அனுமதியை வழங்கியிருந்தார். 1971, 89 களில் ஜே.வி.பி யினரைக் கொன்று குவித்த ‘கலிங்க’ அனுபவம் அவர்களிடமிருந்தது. அதனால் வெற்றி கிடைத்தது. ஜனாதிபதியாக வந்ததும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும், பணத்தைப் பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்திற்குள் கொண்டுவந்துவிட்டு அவர்கள் கொள்ளையடிப்பதற்குத் ‘திறந்த அனுமதியை’ மீண்டும் வழங்கியிருந்தார். அவ்வப்போது தடைகளைப் போட்டு தேரைத் திசை திருப்பும் கட்டைகள் போல் தொழிற்பட்ட பாராளுமன்றத்தையும், நீதித்துறையயும் 20 முற்றாக அகற்றிவிட்டதால் கொலைகாரர்கள் சட்டத்திலிருந்து தப்பிச் செல்லவும், , கொள்ளைக்காரர்கள் தமது சுருட்டுத் தொழிலை விரிவாக்கவும் வசதி கிடைத்தது. நண்பர்களுக்காக ஜனாதிபதி கண்களை மூடிக்கொண்டார். 20 என்ற சிவ மூலிகை கொடுத்த போதை அவருக்க அயற்சியைத் தந்திருக்கலாம். விழித்தபோது தான் மக்கள் வாசலுக்கு வந்துவிட்டது தெரிந்தது.
தற்போதைய மக்கள் எழுச்சியில் கலந்துகொள்பவர்கள் இளைய தலைமுறையினராகவும், படித்த, நகர் சார்ந்த, மத்தியதர வர்க்கத்தினராகவும் இருப்பது தெரிகிறது. சமூக வலைத்தளங்களே இவர்களது ஆயுதங்களாக உள்ளன. கிராமப்புற மக்களுக்கு இந்த வசதிகள் இல்லாமையால் அவர்கள் இன்னும் காவிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கலாம் என நம்பலாம். ராஜபக்சக்களின் ஆட்சியை நிர்மாணித்த கடமை காவிகளுக்கே உண்டு என்ற ரீதியில் கொந்தளிக்கும் பொதுமக்கள் அவர்களைத் தமது படையணிகளில் இணைத்துக்கொள்ளத் தயாராகவில்லை. காவிகளை விட்டால் கிராமிய மக்களைப் பொறுப்பேற்கக கூடியவர்கள் ஜே.வி.பி.யினரே. அவர்களோ துருப்பிடித்த அரிவாளும் சுத்தியலுமே தமது ஆத்மார்த்த ஆயுதங்கள் என்பதிலிருந்து தம்மை விடுவிப்பதாக இல்லை. அதே வேளை காவிகளின் வழமையான ஆயுதங்களான ‘தமிழ், முஸ்லிம்’ எதிர்ப்புணர்வுகள் தலைகாட்டாமையால் கிராமிய மக்களைத் தூண்டுவதற்கான பொறிகள் ஏதுமில்லை. எனவே எழுந்திருக்கும் இப் போராட்டத்துக்கு யார் தலைமை தாங்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இலங்கையின் எதிர்காலம் அமையப் போகிறது.
கொந்தளிக்கும் மக்களது ஆத்திரம் மஹிந்த மீது அதிகம் காட்டப்படுவதற்கான அறிகுறிகள் அதிகம் இல்லை. மாறாக ‘Gota Go Home’ என்ற சுலோகத்தின் பின்னாலேயே எல்லோரும் அணிதிரள்கிறார்கள். அவரருக்குச் சங்கூதும் கட்சிக்கார பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளும் நாசமாக்கப்படுகின்றன. அவரது உற்ற ந்ண்பர் ‘அவான் கார்ட்’ சேனாதிபதி நாட்டை விட்டுக் குடும்பத்துடன் தப்பியோடிவவிட்டார். மஹிந்தவுக்கு இதில் பங்கொன்றுமில்லை என 20 அவரை விடுவித்திருப்பதாக மக்கள் கருதலாம். அதனால் மக்களின் கோபம் எல்லாம் கோதாபய மீது குவிக்கப்படுகிறது போலவே படுகிறது.
ஆனால் தான் பதவியைத் துறக்கப் போவதில்லை என அவர் – இதுவரை – திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அப்படித்தான் பதவியைத் துறந்தாலும் அரசியலமைப்பின்படி ஆட்சிப் பொறுப்பு பிரதமரிடம் போக வேண்டும். அரசியலமைப்பின்படி மஹிந்த மூன்றாவது தடவையாகப் பிரதமராக இருக்க முடியாது. அத்தோடு இன்னுமொரு தடவை ஆட்சியை இன்னுமொரு ராஜபகசவுக்குக் கொடுக்க மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே இன்னுமொரு பொருத்தமான பிரதமரைத் தேட வேண்டும்.
ஜனாதிபதியின் இன்றய அறிவிப்பின்படி, எந்தக் கட்சி 113 ஆசனங்களுடன் முன்வருகிறதோ அக் கட்சி ஆட்சியை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் கோதாபய ஜனாதிபதியாக இருக்குமட்டும் தான் அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லை என சஜித் பிரேமதாச கூறிவிட்டார். அதே வேளை ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கும்படி ஆலோசனை கூறப்படுகிறது. ரணிலும் அதற்குத் தயார். தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வைத் தந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதில் இணையத் தயார் எனக் கூறப்பட்டது. ஆனால் மக்கள் எழுச்சியின் வேகம் ரணிலினதும் கூட்டமைப்பினதும் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டது. இவர்கள் எல்லோரும் ‘ஆளை வேண்டாம் நாயைப் பிடி’ அணியில் இணைந்து விட்டார்கள். இப்போது கோதாபயவுக்கு இருக்கும் ஒரே வழி, ஓடுவார் ஓட எஞ்சியிருக்கும் விசுவாசிகளைக் கொண்டு காபந்து அரசு ஒன்றை அமைப்பதுதான். அது சாத்தியமில்லாத பட்சத்தில் புதிய பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவேண்டும். அது பெரும்பான்மையுடன் ஆட்சியை எதிர்த் தரப்புக்குக் கொடுக்கும் பட்சத்தில் 20 ஆவது திருத்தத்தை அகற்றிவிட்டு மீண்டும் 19 ஆவது திருத்தத்துக்குச் சென்று ஜனாதிபதியின் அதிகாரங்களை வெட்டிவிடுவதுதான் மாற்று வழி. அதன் பிறகு கோதாபய தானாகவே பதவியை விட்டு விலகிவிடுவார்.
இன்று (05) பாராளுமன்றம் கூடும்போது பல விடயங்கள் தெரியவரலாம். சுதந்திரக் கடசியின் 14 உறுப்பினர்களும் தனிக்குடித்தனம் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து விட்டார்கள். 11 கட்சி முன்னாள் பங்காளிகளும் தனிக்குடித்தனம் அமைப்பார்கள் என்று கேள்வி. இதைவிட மக்களின் கல்லெறிகளைத் தவிர்ப்பதற்காக மேலும் பலர் கட்சி தாவுவதற்குத் தாயாராகவுள்ளார்கள் எனக் கூறப்படுகிறது. அடுத்து வரும் சில நாட்களில் புதிய கிரக நிலையில் எந்தக் கிரகம் எங்கு நிற்கிறதென்று அறியலாம்.
இதே வேளை கோதாவின் புகழ்பாடிகளான பல கல்விமான்கள், கலைஞர்கள், வியாபாரிகள் எனப பலரும் சிங்கள வசந்தத்தில் இடம்பெயர்ந்து தங்கள் விசுவாசங்களை மாற்றிக்கொண்டுள்ளார்கள். பொலிஸ்காரர் ஒருவரும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு ஆதரவாகத் தனது குரலைக் கொடுத்துள்ளார். இது ஏனைய பொலிஸ்காரரையும், இராணுவத்தினரையும் தொற்றுமானால் கோதா தனது கடவுச் சீட்டைத் தயார் செய்வது நல்லது.
இந்த நேரத்தில் தமிழர் தரப்பும், இந்தியாவும் மதிலில் ஏறியிருப்பது சாலச் சிறந்தது.