Sri Lanka

‘சிங்கள மக்களைத் தரக்குறைவாகப் பேசவேண்டாம்’ பொன்னம்பலத்துக்குப் பொன்சேகா எச்சரிக்கை!


‘எனக்குப் புத்திமதி சொல்ல பொன்சேகாவுக்குத் தகுதியில்லை’ – பொன்னம்பலம் பதிலடி

ஆகஸ்ட் 28, 2020: “பாராளுமன்றத்தில் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பாகக் கவனமாக இருக்கும்படி” முன்னாள் இராணுவத் தளபதியும், சமாஜி ஜன பலவேகய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பா.உ. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத் தொடக்க நாள் அமர்வில் யாழ் மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகச் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கட்சி பேதமற்ற முறையில் விமர்சித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, பா.உ. சரத் பொன்சேகா விடுத்த எச்சரிக்கையில் “சிங்கள சமூகத்தைத் தரம் குறைக்கும் வகையில் பேசினால் முன்னர் சிலருக்கு ஏற்பட்ட விளைவுகளை அவரும் (பொன்னம்பலம்) எதிர்கொள்ள நேரிடும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பொன்சேகாவின் இந்த எச்சரிக்கைக்குப் பதிலளித்த பொன்னம்பலம் “நான் சொல்வதை அளந்து சொல்வது மட்டுமல்ல அதில் கவனமாகவும் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, “பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது இலங்கை ஒரு சிங்கள மரம் என்றும் மற்றவர்கள் அதில் ஊர்பவர்களாகவும் தவழ்பவர்களாகவும் இருந்தார்கள் என்று சொல்கிறாரா?. அப்படியான ஒருவர் தனக்குப் புத்திமதி சொல்ல முடியாது” எனப் பதிலுக்குச் சாடினார்.

“30 வருடங்கள் போரில் உழன்ற வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் மற்றய பகுதிகளுடன் சமநிலையில் இருந்து போட்டியிட முடியாது. வடக்கு கிழக்கு தனியாக நோக்கப்பட்டு, அங்குள்ள மக்களின் பொருளாதாரம் மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும்” எனப் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.