சிங்கப்பூர் பிரதமர் கலந்துகொண்டு சிறப்பித்த பொங்கல் விழா

Spread the love

ஜனவரி 20, 2020

சிங்கப்பூரில் பொங்கி மகிழ்ந்த பிரதமர் லீ சியான் லூங்

பல்லினக் கலாச்சாரங்களைப் பெருமையோடு மதித்துக் கொண்டாடிவரும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரிலும் தமிழரின் பெருநாளான உழவர் திருநாள் அந்நாட்டின் பிரதம்ர் லீ சியன் லூங் அவர்களது தலைமையில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இவ் விழாவில் பிரதமர் உட்பட, சிங்கப்பூரின் பல்லின மக்களும் தமிழ்ப் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கி மகிழ்ந்தனர். “பொங்கல் விழா பொதுவாகத் தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரைப் பொறுத்தவரை அது பல இனத்தவர், பல சமயத்தவர் ஒன்றுகூடி மகிழும் நல்லிணக்கத் திருவிழாவாக அனுசரிக்கப்பட்டு வருவதாக” இன் நிகழ்வின்போது பேசிய பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் நடைபெற்ற இவ் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் ஆங்கிலப் புத்தாண்டு, சீனப் புத்தாண்டு, பொங்கல் விழா ஆதிய ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படுவது பற்றியும் தனது பேச்சில் சுட்டிக் காட்டினார்.

“ஒவ்வோர் ஆண்டும், அரிசியும் பாலும் நிரம்பிய சூடான பானையில் பொங்கல் பொங்கவேண்டும் என்றும் நாம் அனைவரும்  ‘பொங்கலோ பொங்கல்’ எனச் சொல்ல வேண்டும் என்றும் விரும்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்டிங் எல்.ஆர்.டி. நிலையத்துக்கு அருகேயுள்ள வெளிப்புறத் திடலில் நேற்றுக் காலை 8:30 மணிக்கு ஆரம்பமாகிய இந்நிகழ்வில் சுமார் 3000 பேர் பங்குபற்றியிருந்தனர். ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் திரு லியாங் எங் ஹுவாவும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாரம்பரியமான குத்துவிளக்கை ஏற்றிய பிரதமர் லீ, பொங்கல் பானையில் பால் ஊற்றிக் கிளறுவது, உரலில் அரிசியை இடிப்பது, முறத்தால் அரிசியைப் புடைப்பது போன்ற நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டார். அத்துடன் பால்பண்ணையிலிருந்து தருவிக்கப்பட்ட ஆடு, மாடுகளையும் அவர் பார்வையிட்டார். வெவ்வேறு இன நடனங்களும் பாடல் அங்கங்களும் பிரதமர் முன்னிலையில் படைக்கப்பட்டன. 

சீனர், மலாய்க்காரர்களைத் தவிர, மெக்சிகோ, மியன்மார், பிலிப்பீன்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோரும்  தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டாட்டத்தில் பங்குபற்றினர்.

70க்கும் அதிகமான தமிழர் அல்லாதவர்கள் வேட்டி, சேலை அணிந்து ஒன்று கூடியதே இவ்வாண்டின்  சிறப்பம்சம் என நிகழ்ச்சியின் தலைமை ஏற்பாட்டாளரும்  புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைப்பு மற்றும் இயல்புரிமைக் குழுவின் தலைவருமான திரு பெருமாள் மூர்த்தி தெரிவித்தார். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>