Health

சிகை நேராக்கும் தைலம் கருப்பை புற்றுநோய்க்கு காரணமாகலாம்

பெரும்பாலும் கறுப்பினப் பெண்களினால் பாவிக்கப்படும் சிகை நேராக்கிகள் (hair straighteners) புற்றுநோய்க்குக் காரணமாக உள்ளன என்ற சந்தேகத்தில் அது பற்றி விசாரிக்குமாறு 2023 இல் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்திய மருந்து நிர்வாகத்திற்கு (FDA) அழுத்தம் கொடுத்திருந்தார்கள். இருப்பினும் இந் நிர்வாகம் அக்கோரிக்கையை இரண்டு தடவைகள் பின்போட்டு விட்டது. இது குறித்து தற்போது சில கறுப்பின காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதே வேளை தேசிய சுகாதார நிலையம் ( NIH) செய்த ஆராய்ச்சியின்போது கறுப்பின பெண்கள் பெரும்பான்மையாக இத் தைலங்களைப் பாவிக்கின்றமையால் ஒப்பீட்டளவில் அவர்களுக்கு கருப்பை புற்றூநோய் பீடிப்பது அதிகம் என்று கண்டறிந்திருக்கிறது. அதே வேளை சிகை நிறமூட்டும் சாயங்கள், வெளிற்றும் தைலங்கள் (bleach), சிகை அலங்கார பூச்சுக்கள், முடி சுருட்டிகள் போன்ற தைலங்களினால் கருப்பை புற்றுநோய் வருவதில்லை எனவும் இவ்வாராய்ச்சி கூறுகிறது.


Sister Study என்னும் பெயரில் சூழல் சுகாதார விஞ்ஞான தேசிய நிலையத்தினால் (National Institute of Environmental Health Sciences (NIEHS)) மேற்கொள்ளப்பட்ட இவ்வாராய்ச்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த 35-74 வயதுக்குட்பட்ட 33,497 பெண்கள் பங்குபற்றினர். இப்பெண்களில் மார்பக புற்று மற்றும் இதர நோய்கள் பற்றி ஆராயப்பட்டது. 11 வருடங்களாக தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்பட்டு வந்த இப்பெண்களில் 378 பேருக்கு கருப்பை புற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பெண்கள் அனைவரும் முதல் வருடத்தில் குறைந்தது நான்கு தடவைகளாவது சிகை நேராக்கி தைலங்களைப் பாவித்ததாகத் தெரிவித்துள்ளனர். இத் தைலம் பாவிக்காதவர்களை விட பாவித்தவர்களுக்கு கருப்பைப் புற்று வருவதற்கான சாத்தியம் இரண்டு மடங்கிற்கு மேல் என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையத்தின் ஆராய்ச்சியின்படி சிகை நேராக்கிகளைப் பாவிக்காதவர்களில் 1.64% பெண்கள் தமது 70 வயதிற்குள் கருப்பைப் புற்றுநோயால் பீடிக்கப்படுவார்கள்; இதே வேளை சிகை நேராக்கிகளைஅடிக்கடி பாவிப்பவர்களில் 4.05% மானோர் 70 வயதிற்குள் கருப்பைப் புற்றுக்கு உள்ளாகும் சாத்தியமுண்டு எனக் கூறப்படுகிறது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய்களில் 3% கருப்பை புற்றுநோயாகும். 2022 இல் மட்டும் அமெரிக்காவில் 65,950 புதிய புற்றுநோய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கறுப்பினப் பெண்களில் கருப்பை புற்று பீடிக்கும் விகிதம் அதிகம் என இவ்வாய்வு தெரிவிக்கிறது. (Image Credit: TEMU)