சாரத்துக்கும் சனப்பெருக்கத்துக்கும் என்ன சம்பந்தம்? -

சாரத்துக்கும் சனப்பெருக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?

Spread the love
சிவதாசன்

செப்டம்பர் 13, 2019

இது ‘திருவிளையாடல்’ தருமியின் தருணமல்ல.

நிர்வாணமான பிரெஞ்சுத் தபால்காரரின் விதைகளில் வெப்பமானிகளைக் (thermometers) கட்டி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள் என்கிறது செய்தி.

றோஜர் மியூசெற் டூலூஸ் பல்கலைக்கழகத்தில் கருவுற்பத்தி நிபுணர் (fertility specialist). அவரது அசாதாரணமான ஆராய்ச்சி ஒன்று அவருக்கு பிரபல ‘இக்’ (Ig) நோபல் பரிசை வாங்கித் தந்திருக்கிறது.

நோபல் பரிசுகளில் இது ஒன்று பலருக்கும் சிரிப்பை வரவழைக்கலாம். ஆனாலும் பரிசுக்குக் காரணம் இல்லாமல் இல்லை.

இந்தத் தடவை வேதியியலுக்கான (chemistry) பரிசு ஒரு ஜப்பானிய விங்ஞானிக்குப் போகிறது. அவர் கண்டுபிடித்த விடயம்? ஒரு சாதாரண ஐந்து வயதுப் பிள்ளை நாளொன்றுக்கு அரை லீட்டர் உமிழ் நீரைச் சுரக்கிறது என்பது. பொறியியலாளருக்கான பரிசு குழந்தைகளின் ‘நப்பி’ மாற்றும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஒரு ஈரானியருக்கு. பொருளாதாரத்துக்கான பரிசு நாணயத் தாள்களில் தொற்று நோய் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்ததற்கு. இத்தாலிய விஞ்ஞானிகளுக்கு, பிட்சா எப்படி மரணத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பதற்காக.

இக் நோபல் பரிசு வென்றவர்கள்

ஆனால் மியூசெற்றும் அவரது சகாவும் கண்டுபிடித்தது கொஞ்சம் வித்தியாசமானது. நீண்டகால மர்மத்தைத் துலக்க, அவர்கள் இருவரும் பிரஞ்சுத் தபால்காரரை ஆராய்ச்சியில் ஈடுபடுத்தினார்கள். ஒரு மனிதனிலுள்ள இரண்டு விதைகளும் சமமான வெப்பநிலைகளில் உள்ளனவா? என்பதை ஆராய்வதே அது. அதற்காக அவர்கள்பெரும் சிரமத்துடன் பிரஞ்சுத் தபால்காரர்களின் விதைகளில் பல ‘சென்சர்’களைப் (நுகரும் கருவிகள்) பொருத்தினார்கள். மியூசெற்றின் ஆய்வின்படி இடது பக்கத்து விதை அவர் ஆடைகளை அணிந்திருக்கும்போது மட்டும் அதிக வெப்பமாக இருந்தது. அதை மூலமாகக்கொண்டு கருத்தடைக்குப் பதிலாக அவர் வெப்பமாக்ககும் உள்ளாடைப் (heated pants) பாவனையைக் கண்டுபிடித்தார். (விந்து வெப்பமாக இருக்கும்போது கருத்தரிக்கும் பலத்தை இழந்துவிடும் என்பது கல்லூரிப் பாடப்புத்தகங்களில் ஏற்கெனவே உள்ளது. நம் நாடுகளில் சாரம் கட்டுவதற்கும் சந்த்தொகைப் பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பு இப்போது விளங்கும்)

பிரித்தானியாவின் லிவெர்பூல் ஜீன் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரான்சிஸ் மக்கிளோன் சமாதானத்துக்கான இக் நோபல் பரிசினை இன்னொருவருடன் பகிர்ந்து கொண்டார். அவரது கண்டுபிடிப்பு ஒருவரது உடம்பில் எந்த இடத்தில் சொறிந்தால் சந்தோசத்தைத் தரும் என்பது. நீங்கள் நினைப்பது போல் அல்லாது, அவரது கண்டு பிடிப்பின்படி கணுக்கால் (ankle), அதைத் தொடர்ந்து முதுகும் முன்னம் கைகளும் தான் சொறிவதனால் இன்பம் தருவன. ஆனால் அவர் அந்த இலவச இன்பத்தின் மறுபக்கத்தையும் விபரித்தார். தொடர்ந்து சொறியும்போது (chronic itching) தோல் காயப்பட்டு இரத்தம் வருகிறது. அதற்குக் காரணம் தொடர்ந்து சொறிவதனால் வரும் துன்பத்தைவிட காயப்பட்ட வலியினால் வரும் துன்பம் ஒரு வகையில் இன்பமகவே இருக்கும் என்றார்.

Related:  5G | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் - பாகம் 2

கடந்த 28 வருடங்களாக ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் இந் நிகழ்வுக்கு வரும் பரிசு பெறுபவர்கள் தமது செலவிலேயே வர வேண்டும். உண்மையான நோபல் பரிசுகளைப் பெற்றவர்களால் இப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசு? தற்பொழுது வழக்கில் இல்லாத, சிம்பாப்வேயின் $10tn நாணயத்தாள்.

பற்றீசியா யான்க் மற்றும் டேவிட் ஹூ, இருவரும் ஜோர்ஜியா இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னோலொஜி பொறியியலாளர்கள், கண்டு பிடித்துப் பரிசு வாங்கியது ‘ சிறுநீர் கழிக்கும் விதி’ (law of urination) யைக் கண்டுபிடித்ததற்கு. அதாவது எல்லாப் பாலூட்டிகளும் சிறுநீர் கழிப்பதற்கு சராசரியாக 21 செக்கண்டுகள் எடுக்கும் என்பதே.

உயிரியலுக்கான பரிசு சீனாவின் குழுவொன்றுக்குப் போயிருக்கிறது.

சிரிக்கவும் சிந்திக்கவுமெனத் தொடங்கப்பட்ட இப் பரிசு விழாவில் பரிசு பெற்ற யான்க் கூறுகிறார்: ஆர்வம், விஞ்ஞானத்தில் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் உண்டாக்குகிறது என்ற என் நம்பிக்கையை இவ் விழா உறுதிசெய்கிறது என்கிறார்.

‘இக்’ நோபல் பரிசுகள், மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவர்களைக் கெளரவப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அசாதாரண கற்பனைவளமுள்ளவர்களின் விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் மீதான இச்சையைத் தூண்டுவதற்கான நிகழ்வாகவே இது பார்க்கபடவேண்டும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error