Technology & Science

சாரதியற்ற வாகனக் கனவை ஊபர் கைவிட்டது!


ஊபர் அட்வாண்ஸ்ட் ரெக்னோலொஜி குறூப் (Uber Advanced Technology Group (ATG)) என்ற பிரிவின் கீழ் சாரதியில்லா வாகனங்களைத் தயாரிக்கும் முயற்சியில் கடந்த சில வருடங்களாக இறனங்கியிருந்து ஊபர் நிறுவனம் அம்முயற்சியைக் கைவிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு அதன் பரீட்சார்த்த சாரதியில்லா வாகனம் பாதசாரி ஒருவரை மோதிக் கொன்றதன் பின்னர் ATG தனது வாகனத் தயாரிப்பு முயற்சியைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. தற்போது அப்பிரிவை இன்னுமொரு சாரதியற்ற வாகனத் தயாரிப்புநிறுவனமான அரோராவிற்கு விற்றிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு ஊபர், சாரதியற்ற வாகனத் தயாரிப்புத் திட்டத்தில் இறங்கியிருந்தது. அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே கூகிள் சாரதியற்ற வாகனத் தொழில்நுட்பத்தில் வெகுவாக முதலீடு செய்துவந்தது. 2020 களில் பல நாடுகளில் சாரதியற்ற வாகனங்களே தெருக்களை ஆக்கிரமிக்குமெனப் பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.

இத் தொழில்நுட்பப் பாவனையில் தாமே முன்னணியில் இருக்கவேண்டுமென்ற வேட்கையுடன் அவசரம் அவசரமாக ஊபர் தன் பரீட்சார்த்த வாகனத்தைத் தெருவில் இறக்கியது. 2018 மார்ச் மாதத்தில் பாதசாரியான இலேய்ன் ஹேர்ஸ்பேர்க் என்பவரை மோதிக் கொன்றதைத் தொடர்ந்து ஊபரின் கனவு கலையத் தொடங்கியது.



இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஊபர் பெருமளவு பரிசோதனைகளைச் செய்தது. ஆனாலும் மனித எதிர்பார்ப்புகளுக்கு எதிராக ஏதாவதொரு பிழை எப்போதும் அதன் திட்டங்களைத் தகர்த்துக்கொண்டே இருந்தது. விபத்து நடைபெறுவதற்கு முதல் பெப்ரவரி மாதம், ஒவ்வொரு இரண்டாவது நாளும் ஊபரின் பரிசோதனை வாகனம் விபத்துக்குள்ளாகியிருந்தது எனத் தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படாமல் 15,000 மைல்களையே ஓட முடியாமல் போனது.

பல நிறுவனங்கள் இத் தொழில்நுட்பத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் சாரதியற்ற வாகனத் தொழில்நுட்பம் செப்பனிடப்படுவதற்கு இன்னும் பல வருடங்கள் எடுக்கலாம் எனவே தெரிகிறது.