Sri Lanka

சாய்ந்தமருது நகரசபைப் பிரகடனத்தை நிறுத்தியது நான் தான் | கருணா

பெப்ரவரி 24, 2020


சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான ஒரு நகரசபை உருவாகுவதைத் தானே தடுத்து நிறுத்தியதாகவும், இது குறித்து தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ராஜபக்ச ஆகியோருடன் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து வர்த்தமானி அறிவிப்பு நிறுத்தப்பட்டதாகவும் முன்னாள் உதவி அமைச்சரும், விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சிறப்புத் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, காரைதீவு விபுலானந்த கலாச்சார நிலையத்தில் நடைபெற்ற கருத்துப்பகிர்வின்போது, சாய்ந்தமருது நகரசபை உருவாக்கத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி 14 இல் அறிவிக்கப்பட்டதெனவும், அதே வேளை கல்முனை வடக்கு பிரிவுச் செயலகத்தைத் தரமுயர்த்தும்படி கடந்த 30 வருடங்களாகத் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டு வருவதாகவும் கருணா தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையைக் கலைத்துவிட்டு எல்லைகளை மீள் நிமாணம் செய்வதன் மூலம், சாய்ந்தமருதுவை நகரசபையாக அறிவிப்பதென பெப்ரவரி 14 இல் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

பின்னர், பெப்ரவரி 20 இல் அவ் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் மீளப்பெறுவதாகவும், உத்தேசத்திலிருக்கும் ஏனைய புதிய சபைகளுடன் சேர்த்து சாய்ந்தமருது நகரசபையும் அறிவிக்கபடுமெனவும், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனா அறிவித்திருந்தார்.

“இவ்வறிவித்தல் தொடர்பாக நான் சம்பந்தப்பட்ட அமைச்சரை உடனடியாகத் தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர் அதுபற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதால், தான் ஜனாதிபதியையும், பிரதமரையும் தொடர்புகொண்டு சாய்ந்தமருதுவை நகரசபையாக்கும் திட்டத்தைக் கைவிடும்படி வற்புறுத்தினேன்” என அக்கருத்துப்பகிர்வின்போது கருணா தெரிவித்தார்.

சாய்ந்தமருதுவை நகரசபையாக்குவதைத் தான் எதிர்க்கவில்லை எனவும், எல்லைகளை மாற்றுவது என்ற காரணத்தைச் சொல்லி கல்முனை வடக்கு செயலகத்தைத் தரமுயர்த்துவதை இழுபட விடமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.