சாம்சுங்கின் கவர்ச்சி முகமாகும் இலங்கையின் இளம் தளிர் யொஹானி!

மாயமான்

பொழுதுபோக்குப் பிரபஞ்சத்தினுள் திடீர்ப் பிரவேசம் செய்த இலங்கையின் இளம் தளிர் யொஹானி டி சில்வாவுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் விரைவாகத் திறந்துவருகின்றன.

இலங்கையில் முதலாமிடத்தில் இருக்கும் சாம்சுங் தனது புதிய கலக்ஸி Z மாடல் ஸ்மார்ட் ஃபோனின் பிராண்ட் அம்பாஸடோராக (brant ambassador) யொஹானியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இனிமேல்Galaxy Z Fold3 5G, Galaxy Z Flip3 5G ஆகிய ஃபோன்களின் கவர்ச்சி நாயகி அவர் தான்.

திறமையுள்ள இளம் கலைஞரைச் சந்தர்ப்பங்கள் தேடி வரும்; அவருக்கு அதிர்ஷ்டம் தேவையில்லை என நீங்கள் கூறலாம். அதுவும் ஒரு வகையில் சரிதான்.

யொஹானி ஒரு பல் திறமை கொண்ட இசைக் கலைஞர். பாடல்வரிகளை எழுதுவது முதல் ‘ராப்’ பாடல்கள் பாடுவது வரை; பியானோ, கிட்டார், ட்றம்ஃபெட், யூக்கிளீல் ஆகிய கருவிகளை அத்துபடியாக வாசிப்பதுவரை இந்த இளம் வயதில் அவர் எழுபதுகளைத் தாண்டிவிட்டார். பாப், றிதிம், புளூஸ், ஹிப்-ஹொப் எனப் பல இசை வகையறாக்களையும் இலகுவாகக் கையாள வல்லவர் யோஹானி. யூ-டியூப் தளத்தில் 1 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டிய முதல் இலங்கைக் கலைஞர் என்ற பெருமையும் அவரைச் சேர்கிறது.

Z-பரம்பரையினரிடையே ஏகப்பட்ட இரசிகர்களை வைத்திருக்கும் யோஹானியை சாம்சுங்க் நிறுவனம் ‘சிக்கெனப்’ பிடித்துக்கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. யோஹனியைப் போலவே கவர்ச்சியான வடிவமைப்புடன் சந்தைக்கு வரவிருக்கும் சாம்சுங்க் Z- மாடல் ஃபோன்களின் விற்பநன இலங்கையின் கரைகளையும் தாண்டி கண்டங்கள் பாய்ந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

இந்த இரண்டு கிரகங்களினதும் சேர்க்கையால் இலங்கையில் வர்த்தக வானம் பிரகாசமாக இருக்கப்போகிறது என்கிறார்கள். ஆனால் அதைவிட தூரத்தில் இருக்கும் ஹொலிவூட் வானத்தின் பிரகாசமும் யோஹானியின் அடிவானத்தில் தெரிகிறது.

இளம் கலைஞருக்கு வாழ்த்துக்கள்.