சாமான்யத்தின் எழுச்சி
Post Views: 241
சாமான்யத்தின் எழுச்சி
சிவதாசன்
21ம் நூற்றாண்டை ஆளப் போவது இன்னுமொரு ‘இசம்’. அது கம்யூனிசமோ, சோசலிசமோ அல்லது மதங்கள் சார்ந்த எந்த இசமாகவோ இருக்காது. அது ஒரு புதிய ஆனால் பழைய இசம். தமிழில் இன்னும் அதற்குப் பெயரிடப்படவில்லை. இப்போதைக்கு சாமான்யம் வைத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில் Populism.
ஜனநாயகம் என்ற சொல்லையும் கேவிப்பட்டிருப்பீர்கள். அதையும் மக்களாட்சி என்றே இதுவரையில் சொல்லி வந்தார்கள். மக்களால் தெரியப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட அரசு செய்யும் ஆட்சி என்று எமக்குச் சொல்லப்பட்டது. பல தசாப்தங்களாக இதுவே நிலைமை. உண்மையில் நாம் தெரிவு செய்தவர்கள் மக்களின் பிரதிநிதிகள் அல்ல. அவர்கள் வணிக நிறுவனங்களின் அல்லது அதிகார வர்க்கங்களின் பிரதிநிதிகள். ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களும் இந்த நிறுவனங்களுள் அடக்கம்.
மாற்றங்கள் தானெழுந்தவாரியாக நடைபெறுவதில்லை. அவை முதல் நடைபெற்ற மாற்றத்தின் விளைவுகளே. ஐரோப்பாவின் தொழிற்புரட்சி உருவாக்கிய மாற்றங்களின் தொடர் விளைவுகளின் ஒன்றே இன்றய ஜனநாயகம். அது அடுத்த மாற்றத்தை உருவாக்கிவிட்டு உறங்கு நிலைக்குப் போய்விட்டது. அதன் முதல் வடிவம் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவரைத் தெரிவு செய்தது அமெரிக்க சாமான்யர்கள், வணிக நிறுவனங்களோ அல்லது அதிகார வர்க்கமோ அல்ல. இடையில் தரகர்கள் எவருமில்லாது நேரடியாக மக்களின் விருப்பு வெறுப்புகளைப் பிரதிபலிப்பது. இதுவே நான் சொன்ன புதிய ‘இசம்’ , Populism.
இது முன்னரும் இருந்தது. எங்கெங்கு, எப்பெப்போ மக்கள் புரட்சி வெடித்து ஆட்சிகளைப் புரட்டி புதிய தலைவர்களை நியமித்ததோ அங்கு நடைபெற்றதும் Populism செய்த புரட்சி தான். புகைச்சல், இரைச்சலாகி கூச்சலாக மாறும் போதுதான் புரட்சி கண்டுகொள்ளப்படுகிறது.
ட்ரம்பை அதிபராக்கியது சாமான்யரின் எழுச்சி. இந்த சாமான்யரில் பெரும்பாலோர் வெள்ளையர்கள் ஆயினும் வேற்றின மக்களும், பெண்களும் இப் புரட்சியில் பங்கு கொண்டனர்.
ட்ரம்ப் ஒரு இனவிரோதி, பெண்களை இகழ்பவர், பணத்திமிர் பிடித்தவர் என்றெல்லாம் தெரிந்திருந்தும், அதிகார வர்க்கம் அவரது வருகைக்கு எதிராகத் தமது வளங்களையெல்லாம் உப்யோகித்திருந்தும் அவர் அதிபராகத் தெரிவானார். அதற்கு முற்று முழுதான காரணம் சாமான்யர். அவர்கள் புகையும் போது யாரும் கண்டுகொள்ளவில்லை. சாமான்யருக்கு ஒரு குணாதிசயம் இருக்கிறது. தமது தேவைகளுக்கும், உணர்வுகளுக்கும் முன்னிடம் கொடுப்பது. இயல்பான மனித குணங்களை முக மூடிகள் எதுவுமில்லாது காட்டிக் கொள்வது. தமது வாழ்தலுக்கு அச்சுறுத்தல் வரும்போது மற்றவர்களின் அசெளகரியங்கள் பற்றிக் கவனியாது சுய நலத்துடன் நடந்து கொள்வது.
அது இனவாதமாகவோ, மத வாதமாகவோ மற்றவர்களுக்குத் தெரியலாம். அவர்களது அச்சம் முன்னிலையில் இருக்கும் மட்டும்தான் இவ் ‘வாதங்களும்’ வெளிப்படும். அமெரிக்காவின் முதன் முதல் கறுப்பினத்தவர், அதுவும் ஒரு முஸ்லிம் ஆபிரிக்கத் தந்தையின் மகன் ஜனாதிபதியாக வந்தது இந்த சாமான்யர்களுக்கு அச்சத்தைத் தரவில்லை என்று கூற முடியாது. அவர்களது பயத்தை முதலில் இனம் கண்டவர் ட் ரம்ப். அது ஒரு மாபெரும் சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறது, தலைமையொன்றுக்காகத் தேடிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் அறிந்து கொண்டார். ஸ்டீவ் பனன் போன்றவர்களின் நீண்டகால உழைப்பு அது. அதிகார வர்க்கம் வழக்கம் போலத் தமது முயல் தூக்கத்திலேயே அமிழ்ந்து போயிருந்தது. அமெரிக்காவிற்கு முன்னரே இந்த சாமான்யரின் புரட்சியின் நிழல் ஐரோப்பாவில் தெரிய ஆரம்பித்துவிட்டது.
ஐரோப்பிய யூனியனின் உருவாக்கம் இதற்கு முதல் வித்து. இலாப நோக்கு ஒன்றிற்காக கலாச்சாரம் தனித் தன்மை ஆகியவற்றை இழக்க முடியாது என்று குரல் கொடுத்த பிரிட்டன் இன்று பிறெக்சிட் வரை வந்திருப்பது இப் புரட்சிக்கு வயது வந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. சுமார் 6 இலட்சம் சிரியன் அகதிகளுக்குப் பெருந்தன்மையோடு வாழ்வளித்த மேர்க்கல் அம்மையாரின் பதவிக்கு விரைவில் ஆப்பு வைக்கும் அளவுக்கு ஜெர்மனியின் சாமானியர்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். பிரான்ஸ், கிறீஸ், இத்தாலி என்று சாமான்யர்களின் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.
பொதுவாக இவ்வெல்லா மாற்றங்களுக்கும் கருவிகளாகவிருந்தது அச்சம், அச்சமொன்றேதான். வணிக நிறுவனங்களாலோ அல்லது அவர்களின் கையாடிகளான அதிகார வர்க்கத்தினாலோ இந்த சாமான்யர்களின் எழுச்சியை அடக்கிவிட முடியவில்லை. ஏனெனில் இருவருமே அணிந்திருக்கும் கவசம் ஒன்று தான், ஜனநாயகம்.
உலக சாமான்யர்களின் மன்னராக முடிசூட்டப்பட்ட ட்ரம்ப் பினது அட்டகாசங்கள் வலுப்பெற்று வருவது நம் கண்முன்னே நிகழ்கிறது. அவர் பின்னால் அணி திரள்பவர்கள் எமக்கு நண்பர்கள் அல்ல. ட்ரம்ப் பினது உள்மன ஆசை தான் ஒரு சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியாக இருக்க வேண்டுமென்பதே. கொரிய அதிபரைக் கண்டவுடன் அவரது பணியாளர்கள் எழுந்து நிற்பதைக் கண்டு தன் பணியாளர்கள் ஏன் அப்படிச் செய்வதில்லை என்று வினவியவர். அவர் இரண்டாவது தடவையும் ஆட்சிக்கு வரமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
அமெரிக்காவின் சாமான்யர்களின் அச்சம் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரவன் படைகள் எல்லையில் குவிவது அவருக்கு நல்லது. சாமான்யரின் போதகர் ஸ்டீவ் பனன் உலகெமெலாம் சென்று தன் உரைகளை நிகழ்த்துகிறார். மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் உலகம் முழுவதும், குறிப்பாக உலகின் தென் பகுதியும் இந்த சாமன்யப் புரட்சியின் அலையில் அடிபட்டுப் போவது தான்.
பிலிப்பைன்ஸ் தீவுகளில் ரொட்றிகோ டுட்டேற்டே எவ்வளவு அட்டகாசம் பண்ணினாலும் அவரது ஆதரவில் எந்தக் குறைச்சலும் இல்லை. நமது சிறீலங்காவில் எவ்வளவு ஊழல் செய்தாலும், நாட்டையே சீனாவுக்கு அடவு வைத்தாலும் மகிந்த குடும்பத்தினரின் பின்னால் மக்கள் அணி வகுக்கிறார்கள். பிரேசிலில் ‘ட் றொப்பிகல் ட் ரம்ப்’ அமசோனை அழிப்பேன் என்ற திமிரோடு ஆட்சிக்கு வந்திருக்கிறார். இங்கெல்லாம் சாமன்யர்கள் வென்றிருக்கிறார்கள் என்றால் அங்கெல்லாம் இந்த அச்சம் கொண்ட சாமானியர்கள் உருக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம். சாமன்யர்களின் புரட்சி என்றால் அதற்கு எப்போதும் வலதுசாரி முகம் இருக்க வேண்டுமென்பதில்லை. கம்யூனிச, சோசலிச சித்தாந்தங்களினால் உசுப்பேத்தப்பட்ட சாமான்யர்களின் புரட்சியும் உலகில் நடந்தேறியிருக்கிறது.
2016 அமெரிக்க தேர்தலில் பேர்ணி சாண்டர்ஸ் என்ற ஒரு சோசியலிஸ்ட் பின்னால் பல இலட்சக் கணக்கான சாமான்யர்கள் அணிதிரண்டார்கள். பிரித்தானியாவில் ஜெறெமி கோபின் பின்னால் இலட்சங்கள் திரண்டன. பிரான்ஸில் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கொடியேந்தியவர்கள் தான் இன்று இனத் துவேச மறீன் லூ பென் கட்சியின் ஆதரவாளர்கள். இவர்கள் எல்லோரிடையேயுமிருந்த பொதுமை அவர்கள் சாமன்ய தொழிலாளிகள். அவர்களுக்குத் ‘தெரிந்த’ எதிரிகள் குடியேறிகள் தான்.
சாமான்யர்களுக்குச் சித்தாந்தம் ஒரு தற்காலிக போதை மட்டுமே. மேற்குலக சாமான்யர்களுக்கு குடியேறிகள் முதலாவாது எதிரிகளாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமல்ல அவர்களது அச்சத்துக்குக் காரணம். கலாச்சாரக் கட்டுக்கோப்புகள் தகர்க்கப்படுதல் அதற்கு அரசுகள் துணைபோதல் போன்றனவும் இந்த சாமான்யரின் புகைச்சலுக்குக் காரணங்கள் தான்.
பெரும் வணிக நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அரசுகள் இயங்குகின்றன என்னும் சந்தேகம் சாமான்யர்களின் மனதில் எழுவதை அரசுகள் கண்டு கொள்ளாததும் அதை உதாசீனம் செய்ததுமே இந்த நிலைமைக்குக் காரணம். பாரம்பரியமாக இடதும் வலதுமென தமது வாக்காளர்களையும் ஆதரவாளர்களயும் பிரித்தாண்டு உசுப்பேத்தி குளிர் காய்ந்த அரசியற் கட்சிகள் சாமானிய அடையாளங்களோடு உருவாகும் மூன்றாவது கட்சிகளுக்குத் தமது வாக்காளர்களை இழக்கும் நிலை வந்திருக்கிறது. இந்த மூன்றாவது கட்சிகள் தம் துரித வளர்ச்சிக்கு இரை போடப் போவது குடியேறிகளையும் ‘கலாச்சாரப் புறம்போக்குகளையும்’ தான். இதுவரை காலமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து வைத்திருந்த சமத்துவம் சீர்குலையும். பெரும் சமூகத்தால் துவேஷ நடவடிக்கைகள் பகிரங்கமாக அங்கீகரிக்கப்படும். (ரொறோண்டோ பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஜோர்டன் பீற்றர்சன் இதற்கு ஒரு உதாரணம்)
இதுவெல்லாம் குடியேறிகளான எமக்கு பழகிப்போனவையாக இருப்பினும் எமது அடுத்த சந்ததியினருக்கு இது அதிர்ச்சி வைத்தியமாகவே இருக்கும். சமத்துவத்தை நோக்கி தொடுக்கப்படும் ஒவ்வொரு போராட்டமும் , முயற்சிகளும் தற்காலிகமாகவேனும் அதன் எதிர் விளைவுகளையே கொண்டு வரும். என்ன செய்யலாம்.
இது சாமான்யருக்கான காலம். இதுவும் கடந்து போகும் என்று இன்னுமொரு 60 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியதுதான். கம்யூனிசம், நவலிபரலிசம், சோழரிசம் என்று ஏதாவது ஒன்று மீண்டும் தலை காட்டாதா?