IndiaNews

சாதிப் பிரச்சினை: மரண ஊர்வலம் தடுக்கப்பட்டதால் உடல் மேம்பாலத்திலிருந்து கட்டி இறக்கப்பட்டது

August 22, 2019 .

சாதியில் குறைந்தவர் என்ற காரணத்தினால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய என்.குப்பம் என்பவருடைய மரண ஊர்வலம் மேம்பாலத்தில் வைத்து உயர் சாதிக்காரர்கள் என்பவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

தமது நிலத்தின் மீது தாழ்ந்த சாதிக்காரர்கள் செல்லக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர்வலத்தைத் தடை செய்ததாக அறியப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேம்பாலத்திலிருந்து கயிற்றினால் கட்டி இறந்தவரின் உடல் கீழே 20 அடி கீழே ஓடும் நதிக்குத் தரையிறக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டன.

தாழ்த்தப்பட்டவர்களுக்கான மரணக் கிரியைகள் செய்யும் இடத்திற்குப் போகவேண்டுமானால் உயர் சாதிக்காரருடைய நிலத்தைத் தாண்டிப் போகவேண்டி இருந்ததே இதற்குக் காரணம்.

வேலூர் மாவட்டத்தின் வாணியம்பாடி கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றது. தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்களுக்கென தகனக்கிரியைகள் செய்யும் இடம் அக்கிராமத்தில் இருந்திருக்கவில்லை. இது மாதிரிச் சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றிருப்பதாக அறியப்படுகிறது.

இறந்த உடலைப் பாடையில் வைத்துக் கட்டி இறக்குவதைத் தவிர வேறு வழியெதுவும் இல்லை என தாழ்ந்த சாதிக்காரர் எனப்படுபவர்கள் கூறுகிறார்கள்.

இச் சம்பவம் பற்றி விசாரிக்கப்படும் எனவும், சம்பவம் நடைபெற்றிருந்தால் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அப் பிராந்திய அரச பணியாளர்கள் கூறியதாக அறியப்படுகிறது.

செய்தி மூலம்: இந்தியாருடே