IndiaNews

‘சாட்டை’ துரைமுருகன் மீண்டும் கைது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறு செய்தாராம்


நாம் தமிழர் கட்சி உறுப்பினரும், ‘சாட்டை’ யூ-ரியூப் தள விமர்சகருமான துரைமுருகனை கன்யாகுமரி பொலிசார் நேற்று, அக்டோபர் 11, கைதுசெய்துள்ளனர். அக்டோபர் 10 அன்று கன்யாகுமரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பற்றி அவதூறான கருத்துக்களைக் கூறியமைக்காக அவர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்யாகுமரி மாவட்டத்திலிருந்து கல்லும் மண்ணும் எடுக்கப்பட்டு கனரகவண்டிகளில் கேரள மாநிலத்துக்கு ஏற்றப்படுவதைக் கண்டிப்பதற்காக நாம் தமிழர் கட்சியினால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறாகவும், ரஜிவ் காந்தி கொலை விவகாரத்தில் விடுதலைப் புலிகளின் எப்படியான வல்லமை படைத்தவர்கள் என்பதை காங்கிரஸ் தலைவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது எனவும் பேசிய காணொளிப் பதிவைக் கொண்டு பொலிசார் அவரைக் கைதுசெய்துள்ளார்கள்.

குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் அவர் தனது பேச்சை நிகழ்த்தியிருந்தார் என்ற குற்றத்தின் கீழும், மிரட்டுதல் மற்றும் அவதூறான வார்த்தைப்பிரயோகங்களைச் செய்திருந்தார் என்பதற்காகவும், இந்திய குற்றவியல் சட்டத்தின் 153 ஆவது பிரிவிற்கமைய துரைமுருகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அவரை அக்டோபர் 25 வரை தடுப்புக் காவலில் வைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தின் கைகளில் துரைமுருகன் மாட்டுப்படுவது இதுதான் முதல் தடவையல்ல. கடந்த ஜூன் மாதம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விமர்சித்து சமூக வலைத் தளங்களில் பிரசுரித்தமைக்காக ஒருவரை மிரட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் துரைமுருகனும் மேலும் மூன்று பேர் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். அதே வேளை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அவமதிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளிட்டமைக்காக தி.மு.க. வழக்கறிஞர்கள் குழுவொன்று துரைமுருகன் மீது வழக்குப் பதிந்திருந்தது.

‘சாட்டை’ என்ற பெயரில் துரைமுருகன் வெளியிட்டுவரும் யூ-ரியூப் காணொளித் தளம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ஒன்றாகும். நாம் தமிழர் கட்சி அங்கத்தவரான துரைமுருகன் தனது அரசியல், சமூக எதிரிகளை நையாண்டி செய்தும் அவர்களை உருவக்கேலி செய்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரது யூ-ரியூப் தளத்திற்கு 5 இலட்சத்துக்கு மேலான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.