• Post category:SPORTS / WORLD
  • Post published:March 4, 2020
Spread the love

மார்ச் 3, 2020

சாஜோ மானே (Sadio Mane) ஆப்ரிக்காவிலுள்ள செனெகல் நாட்டில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து பிரித்தானியாவின் புகழ் பெற்ற லிவர்பூல் உதைபந்தாட்டக் கழகத்தில் ஆடும் ஒரு முக்கிய விளையாட்டு வீரர்.

1992 இல் பிறந்தவர். சம்பளம் $10.2 மில்லியன். மதிப்பு $20 மில்லியன் என ஒரு இணையத்தளம் கூறுகிறது . ஒரு பெண்ட்லி காருக்குச் சொந்தக்காரர்.

அவர் கையில் ஒரு உடைந்த ஐ’ஃபோனைக் கொண்டு தெருவில் போவதை யாரோ படம் பிடித்து அவரது பெருந்தன்மையைப் பற்றி முகநூலில் பதிவிட்டிருந்தார்கள். இதன் உண்மைத் தன்மையைப் பற்றி அறிவதற்காகச் சில தேடல்களை மேற்கொண்டபோது கிடைத்த தகவல்கள் சில:

ஏப்ரல் 10, 1992 இல் செனெகலில் பிறந்த இவர் லிவர்பூல் உதைபந்தாட்டக் கழகத்தில் முக்கிய நிலையொன்றில் (winger / outside left) விளையாடுபவர். அதே வேளை செனெகல் தேசிய அணியிலும் விளையாடுபவர். உலகின் தலை சிறந்த உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். 19 வயதில் தனது விளையாட்டைத் தொழிலாக மாற்றிய அவர் 20 வயதில் ஒஸ்ட்றியாவின் விளையாட்டுக்கழகமான Red Bull Salzburg இற்கு விளையாட, (2012), 4 மில்லியன் யூரோ சம்பளத்துக்கு கையெழுத்திட்டார். அதே வருடம் பிரித்தானியாவின் விளையாட்டுக் கழகமான செளதாம்டன் அவரை 11.8 மில்லியன் பவுண்டுகள் சம்பளத்துக்கு கையெழுத்திட்டது. அங்கு அவர் பிரிமியர் லீக் சாதனையொன்றை (fastest hat-trick – in 176 seconds) நிகழ்த்தினார். அவரது தொடர் வெற்றிகள் பல விருதுகளை அவருக்குப் பெற்றுக் கொடுத்தன.பிரித்தானிய ஊடகங்கள் பிரபலங்களைப் பற்றிக் கசமுசக்களை எழுதுவது வழக்கம். ஆனால் சாஜோவைப் பற்றி வந்த செய்திகள் பெரும்பாலானவை அவரது நல்ல குணங்களைப் பற்றியவையே. இளவரசி டயானாவின் மரணத்திற்கும் அவரது மகன் ஹரி நாடு துறக்க விரும்பியதற்கும் காரணமான பிரித்தானிய ஊடகங்கள் பெரும்பாலானவை கொடியவை எனப் பரவலாக அறியப்பட்டவை.

அவற்றிலொன்று, அவர் வீட்டில் விலையுயர்ந்த பெண்ட்லி வாகனமிருந்தும், சாதாரண பாவனைகளுக்கு அவர் சாதாரண வாகனமொன்றைப் பாவிப்பாரெனவும், அவர் வழைபடச் செல்லும் மசூதியில் கழிப்பறைகளைக் கழுவுவதல் போன்ற தொண்டுகளை அவர் செய்து வருவதாகவும் அவரது இப்பணிகளை யாரும் படங்கள் மூலமோ காணொளி மூலமோ வெளியிடக்கூடாதென அவர் கேட்டுக்கொண்டதாகவும் அறியப்படுகிறது.

தெருவில் கையில் உடைந்த ஐ-ஃபோனுடன் சென்றது பற்றிக் கேட்டபோது, ” 10 பெராரிகளும், 20 வைர மணிக்கூடுகளும், இரண்டு ஜெட் விமானங்களும் எனக்கெதற்கு? அது உலகத்துக்கு என்ன செய்துவிடப் போகிறது? நான் பட்டினி கிடந்தேன், வயல்களில் வேளை செய்தேன், வெறுங்கால்களுடன் விளையாடினேன், பாடசாலைக்குக்கூடப் போகவில்லை. என்னால் இப்போது மக்களுக்கு உதவ முடிகிறது. பள்ளிக்கூடங்களைக் கட்டி, ஏழை மக்களுக்கு உணவையும், உடையையும் கொடுக்கவே நான் விரும்புகிறேன். செனெகலின் வறிய குடும்பங்களுக்கு நான் மாதம் தலா 70 யூரோக்களைக் கொடுத்து வருகிறேன். அலங்கார வாகனங்களையோ, வீடுகளையோ, பயணங்களையோ, விமானங்களையோ நான் வைத்திருப்பதாகக் காட்டப்போவதில்லை. எனக்குக் கிடைத்ததில் ஒரு பங்கையாவது எனது மக்களுக்குத் தருவதையே நான் விரும்புகிறேன்” என அவர் தெரிவித்ததாக முகநூல் பதிவில் இருந்தது.2016 இல் அவரை லிவர்பூல் கழகம் 34 மில்லியன் பவுண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. அவரது வருகையால் அக் கழகம் 2018, 2019 களில் UEFA championships இறுதிக்கு வர முடிந்தது. ‘2019 ஆம் ஆண்டின் ஆபிரிக்க உதைபந்தாட்ட வீரர்’ என்ற விருது ஜநவரி 2020 இல் அவருக்கு வழங்கப்பட்டது.

விளையாட்டுத் திடலில் அவரது பெருந்தன்மையைப் பற்றிப் பல அணிகளைச் சேர்ந்தவர்களும் புகழ்ந்திருக்கின்றார்கள்.

லிவர்பூல் இவரை ஒப்பந்தம் செய்தபோது அவர் மிக முக்கியமான, விரும்பப்படும் நிலையான wide right position இல் ஆடியதுடன் அந்தப் பருவத்துக்கான சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதையும் பெற்றிருந்தவர், பின்னர் அக் கழகம் மொஹாமெட் சேலாவை (நட்சத்திர விளையாட்டுக்காரர்) அன் நிலைக்குத் தெரிவு செய்து சாஜோவை இடது நிலைக்கு நகர்த்தியபோது அவர் எவ்வித முனகல்களுமின்றி மகிழ்ச்சியாகத் த விளையாட்டைத் தொடர்ந்தார். அவர் ஒரு போதும் மத்தியஸ்தர்களின் மிழையான தீர்ப்புகள் மீதோ அல்லது இதர விளையாட்டு வீரர்களுடனோ கோபம் கொள்வதில்லை. குறை கூறுவது அவரது வழக்கமில்லை என லிவர்பூல் அணியின் முகாமையாளர் கிபன்ஸ் தெரிவித்துள்ளார்.

அவரைப் பல தடவைகள் பேட்டி கண்ட பி.பி.சீ வானொலிச் செய்தியாளர் மைக் ஹியூஸ் அவரைப் பற்றிக் கூறுவது “தன்னலமில்லாத ஒரு மனிதர்’

சாஜோ (இப்படித்தான் செனிகல் மொழியில் அவரது பெயர் Sadio உச்சரிக்கப்படுகிறது) மனிதருள் மாணிக்கம் தான். இம் முகநூற் பதிவை நம்பலாம்.

-மாயமான்

Print Friendly, PDF & Email