Spread the love

அக்டோபர் 23, 2019

சவேந்திர சில்வா நியமனம் தொடர்பாக புதிய ஜனாதிபதியுடனும் அழுத்தத்தைப் பிரயோகிப்போம் - அமெரிக்கா 1
சிறீலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வா

மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த ஒருவரை இராணுவத்தின் தலைமையதிகாரியாக நியமிப்பது சிறீலங்காவுடனான அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை வெகுவாகப் பாதிக்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்ற ஆகஸ்ட் மாதம், சவேந்திர சில்வா அவர்களை சிறீலங்கா இராணுவத்தின் தலைமையதிகாரியாக ஜனாதிபதி சிறீசேன நியமித்திருந்தது அமெரிக்க மற்றும் ஐ.நா.வின் காட்டமான எதிர்ப்பைப் பெற்றிருந்தது.

2009 இல் நடைபெற்ற சிறீலங்காவின் போரின் இறுதி நாட்களில் ஆயுதம் தரிக்காத, காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் போராளிகளைச் சித்திரவதை செய்தும் கொலைசெய்தும் அட்டூழியங்களைப் புரிந்த இராணுவப் பிரிவின் தளபதியாக சவேந்திர சில்வா கடமையாற்றியிருந்தார் என ஐ.நா.சபை குழுவொன்று குற்றஞ்சாட்டியிருந்தது.

அரசமைப்புச் சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றீடு செய்தல், உண்மை, நல்லிணக்க ஆணையத்தை உருவாக்குதல் மற்றும் நம்பிக்கைக்குரிய பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை உருவாக்குதல் போன்ற விடயங்களில் முன்னேற்றம் வெகுவாகத் தளர்த்தப்பட்டோ அல்லது முற்றாக நிறுத்தப்பட்டோ விட்டது

தென்னாசியாவிற்கான அமெரிக்க பிரதி, உதவி ராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்

இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் மிகவும் தேவைப்படும் இக்காலகட்டத்தில் சில்வாவின் நியமனம், சிறீலங்காவினால், பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதெனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியைத் தகர்க்கும் செயலாகும் என அமெரிக்க ராஜாங்கச் செயலக அதிகாரி றொபேர்ட் டெஸ்ட்றோ அமெரிக்க காங்கிரஸ் மேற்கொண்டுவரும் விசாரணையில் சட்சியமளிக்கும்போது கூறினார்.

“இராணுவத் தளபதியாகச் சில்வா நியமிக்கப்பட்டிருப்பதென்பது, அமெரிக்கச் சட்டத்தின்படி, இருதரப்பு ஒத்துழைப்பை வெகுவாகப் பாதிக்கும் என்பதோடு, அட்டூழியங்களைப் புரிந்த சில்வா மற்றும் இதர அதிகாரிகள் மீது பொறுப்புக்கூறல் விடயங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், அமெரிக்க கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அதிக இராணுவ ஈடுபாடுகளை ஊக்குவிக்குமெனவும் டெஸ்ட்றோ தனது தயாரிக்கப்பட்ட சாட்சியப் பத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.

அதே வேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை உருவாக்குதல், நட்டஈடு வழங்குதல், வட-கிழக்கில் இராணுவத்தின் வசமிருக்கும் தனியார் காணிகளை விடுவித்தல் போன்ற விடயங்களில் சிறீலங்கா காட்டிவரும் முன்னேற்றங்கள் குறித்து வாஷிங்டன் திருப்தியுறுவதாகவும், தென்னாசியாவின் அதியுயர் பிரதானியும், பிரதி, உதவி ராஜாங்கச் செயலருமாகிய அலிஸ் வெல்ஸ் அவர்கள் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் விசாரணையின்போது சாட்சியமளித்திருந்தார்.

இருப்பினும், அரசமைப்புச் சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றீடு செய்தல், உண்மை, நல்லிணக்க ஆணையத்தை உருவாக்குதல் மற்றும் நம்பிக்கைக்குரிய பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை உருவாக்குதல் போன்ற விடயங்களில் முன்னேற்றம் வெகுவாகத் தளர்த்தப்பட்டோ அல்லது முற்றாக நிறுத்தப்பட்டோ விட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சில்வாவுக்கு எதிராக, ஐ.நா.வினாலும் இதர அமைப்புகளினாலும் பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவையும், நம்பகத்தன்மையைக் கொண்டவை எனவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவரிடம் மனித உரிமைகள் விடயத்தில் தொடர்ந்தும் அமெரிக்கா அழுத்தத்தைப் பிரயோகிக்குமெனவும் அலிஸ் வெல்ஸ் மேலும் கூறினார்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கைக்கு ஜேர்மனி 11 மில்லியன் யூறோ தொழில்நுட்ப உதவி